Home Blog Page 6041

கோடைகால சிறப்பு ரயில்கள்: சென்னை முதல் நெல்லை வரை இயக்கம்

சென்னை: நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூரிலிருந்து கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டதால் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்வோர் தங்கள் குழந்தைகளை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதே போல் தென்மாவட்டங்களில் உள்ளவர்கள் விடுமுறையை கொண்டாட சென்னைக்கு வருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கெனவே விடுமுறையை கணக்கிட்டு அனைத்து டிக்கெட்களும் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதை கவனத்தில் கொண்டு நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 8, 14, 19, 24 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் 9, 15, 20, 25 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். றுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 18 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் குறித்த விவரம்: ரயில் எண் 06021: மே 8 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06025: மே 14 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06026: மே 15 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். ரயில் எண் 06027: மே 24 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06028: மே 25 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில் எண் 06022: மே 9 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். ரயில் எண் 06023: மே 19 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06024: மே 20 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்: ரயில் எண் 06029: மே 17 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06030: மே 18 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம். விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்: பக்தர்கள் உற்சாகம்

kallalagar-vaigai-river-chithra-pournamiமதுரை: மதுரையில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை நகரின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம் என 12 நாட்கள் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக அழகர்மலையில் இருந்து பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு மே2 ஆம் தேதி மதுரை நோக்கிப் புறப்பட்டார். மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடி பகுதியில் பெருந்திரளான மக்கள் எதிர்கொண்டு வரவேற்பு அளித்தனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நேற்று நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 6.47 மணி அளவில் பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியதால், இந்த வருடம் நல்ல சுபிட்சமும் வளமும் இருக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை கொண்டனர். பின்னர் கோவிந்தா…கோவிந்தா…என வான் அதிர கோஷமிட்டு பக்தர்கள் கள்ளழகரை வழிபட்டனர். கள்ளழகரை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வைகையாற்றில் இன்று அதிகாலை முதலே குவிந்திருந்தனர். பின்னர் ராமராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். அங்கே தீர்த்தவாரி முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தமிழகத்தை சீரழித்ததில் தி.மு.க.வுக்கு பங்கில்லையா? ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: தமிழகத்தை சீரழித்துச் சிதைத்ததில், தி.மு.க.வுக்குப் பங்கில்லையா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மடல் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் பத்திரிகைகளுக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பு… அன்புள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்… நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்! தமிழகத்தின் இன்றைய நிலை தொடர்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை படித்தேன்… ஆனால், ரசிக்கவோ, சுவைக்கவோ முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு 46 மாதங்கள் வனவாசம் அனுபவித்ததாலேயே உங்களின் தவறுகளையும், ஊழல்களையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஊழல்கள் குறித்தும், நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீங்கள் பாடம் நடத்தியிருப்பதைப் பார்க்கும் போது ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி நினைவுக்கு வந்ததை தடுக்க முடியவில்லை. இராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது என்பது தானே உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான் என்று கூறியிருக்கிறீர்கள். உண்மை தான். ஆனால், அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அரசின் செலவுகளை ஈடுகட்டவும், மலிவுவிலை அரிசித் திட்டத்தை செயல்படுத்தவும் மது விற்பனையைத் தொடங்கலாம் என பேரறிஞர் அண்ணாவிடம் அதிகாரிகள் பரிந்துரைத்த போது, மக்களைக் கெடுக்கும் மதுவை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அண்ணாவின் வழியில் நடப்பதாக கூறும் நீங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அவரைப் பின்பற்றினீர்களா? மது என்றால் என்ன என்பது ஒரு தலைமுறைக்கே தெரியாமல் இருந்த நிலையில், இராஜாஜி, காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையை மதிக்காமல், 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர் உங்கள் தந்தை கலைஞர் தானே? மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என்று கோரிய போதெல்லாம் ‘நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல தமிழ்நாடு இருக்கிறது” என்று கூறித் தானே நீங்களும், உங்கள் தந்தை கலைஞரும் தமிழக மக்களை ஏமாற்றினீர்கள். இராஜாஜியும், ஓமந்தூராரும், காமராஜரும், உங்கள் வழிகாட்டியான அண்ணாவும் இந்த நெருப்பு வளையத்திற்குள் வைத்து தானே தமிழ்நாடு என்ற கற்பூரத்தைக் காப்பாற்றினர். நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கூறவில்லையா? 23.12.2008 அன்று மருத்துவர் அய்யா தலைமையிலான குழுவின் வேண்டுகோளை ஏற்று மது விற்பனை நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்த கலைஞர், படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தாரே… நடைமுறைப்படுத்தினாரா? இப்போது கூட முழு மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளிக்க முடியாத உங்களுக்கு மதுவிலக்கு பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது? முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறீர்கள். நல்லது தான். முந்தைய ஆட்சியில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்த நீங்கள், திமுக ஆட்சியில் ரூ.46,091 கோடி மதிப்புள்ள 37 தொழில்திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டிருப்பதாகவும், அதனால் 2,52,569 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினீர்கள். அப்படி கிடைத்ததா? இதுகுறித்து வெள்ளை அறிக்கை கோரியபோது அதை ஏற்க மறுத்த உங்களுக்கு தொழில் முதலீடுகள் பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது? நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே தான் அ.தி.மு.க.வும் செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 46,602.72 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்கள். இதில் ஒரு விழுக்காடு கூட முதலீடு செய்யப்படவில்லை. இதன்மூலம் இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றுவதில் ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை நிரூபித்திருக்கின்றன. தமிழகத்திலுள்ள நிறுவனங்கள் இங்குள்ள ஆலைகளை மூடிவிட்டு வெளி மாநிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன என்பதும் உண்மை தான். இது போன்றதொரு மோசமான நிலை தமிழ்நாட்டில் இதுவரை இருந்தது கிடையாது. இதற்குக் காரணமே நீங்கள் தானே. தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்படுவதற்குக் காரணமே தி.மு.க. ஆட்சி தானே. முந்தைய ஆட்சியில் வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் 1800 மெகாவாட் மின்நிலையங்களை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, அனைத்து மின்திட்டங்களும் 30 மாதங்களில் முடிக்கப்பட்டு 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், திமுக ஆட்சியின் பதவிக் காலம் முடிந்த பிறகும் அந்த நிலையங்களின் பணிகள் முடிக்கப்படாதது தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியாதா? உடன்குடி மின் திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய உங்கள் அரசு அதன்பின் 4 ஆண்டுகளாக எதுவுமே செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தது உண்மையா… இல்லையா? மின்வெட்டைப் போக்க எதுவுமே செய்யாத உங்களுக்கு மின்வெட்டு, தொழில் முதலீடு ஆகியவை பற்றியெல்லாம் பேச என்ன உரிமை இருக்கிறது ? இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின்தேவை 14,500 மெகாவாட் மட்டுமே. கடந்த 49 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் நீங்களும், அ.தி.மு.க.வும் இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களைக் கூட செயல்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்று தானே பொருள்? ஊழல் குறித்தும் உங்கள் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதாக சர்க்காரியா கமிஷனால் சான்றளிக்கப்பட்ட தி.மு.க. ஊழல்கள் குறித்து பேசுவதும், கசாப்புக் கடைக்காரன் அகிம்சை பற்றி பேசுவதும் ஒன்று தான். தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் நடைபெறவே இல்லையா? உலக அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்தது 2ஜி ஊழல் தான். இந்தியா ஊழல் நாடு என்ற தோற்றம் ஏற்பட இது தான் காரணம். ரூ.1.76 லட்சம் கோடி மதிப்புள்ள அந்த ஊழலின் காரணகர்த்தா தி.மு.க. தானே? அதுமட்டுமின்றி தமிழகத்தை நீங்கள் ஆண்டபோது துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி அனைத்து பணி நியமனங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டதா… இல்லையா? இலவசங்களை வாரி இறைத்து மக்களை சோம்பேறிகளாக்கும் கலாச்சாரத்தை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் நிலம் ஆகியவற்றுடன் 2006 ஆம் ஆண்டில் நீங்கள் தொடங்கினீர்கள். 2011 ஆம் ஆண்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு&மாடு என ஜெயலலிதா விரிவு படுத்தினார். அதேபோல், தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கான ‘திருமங்கலம் திட்டத்தை’ நீங்கள் அறிமுகம் செய்தீர்கள். அவர்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணத்துடன் மூக்குத்தி, தோடு வழங்கும் அளவுக்கு விரிவுபடுத்தி ‘திருவரங்கம் திட்டத்தை’ உருவாக்கினார்கள். ஆக மொத்தம் மக்களைக் கெடுப்பதில் இரு கட்சிகளும் போட்டிப் போடுகிறீர்கள். இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்தும் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்ளையை தொடங்கி வைத்தது தி.மு.க. தானே? டாட்டா டைட்டானியம் ஆலையை தூத்துக்குடிக்கு கொண்டுவந்து அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயன்றது தி.மு.க. தானே? முந்தைய ஆட்சியில் சட்டவிரோதமாக தாது மணலை வெட்டி எடுத்ததாக ஒரு தொழிலதிபரை கைது செய்து கொடுமைப்படுத்திய நீங்கள், திடீரென அவருடன் சமாதானம் ஆகி கை குலுக்கியது ஏன்? நீங்கள் அந்த தொழிலதிபருடன் சமாதானம் செய்து கொண்டீர்கள். இப்போது அ.தி.மு.க.வினர் அவருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். கிரானைட் கொள்ளையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த நீங்கள் இப்போது கிரானைட் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? 1996 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கிரானைட் வெட்டி எடுக்க சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாக கூறி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தது. அதனடிப்படையில் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரணை நிலையிலேயே அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்தது ஏன்? கிரானைட் ஊழல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் இரு முறை ஆட்சி செய்த தி.மு.க. இக்கொள்ளையை தடுக்க என்ன செய்தது? கிரானைட் நிறுவனங்களுடன் இருகட்சிகளும் மாறிமாறி கூட்டணி வைத்து இமாலய ஊழல் செய்ததெல்லாம் மக்களுக்கு தெரியாததல்ல. 2003 ஆம் ஆண்டில் ஆற்று மணல் விற்பனையில் புதிய முறையை ஜெயலலிதா புகுத்தினார். அதுவே ஊழல்களுக்கும், மணல் கடத்தலுக்கும் வழிவகுத்தது என்பது உண்மை தான். 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நீங்கள் ஏன் இந்த முறையை ரத்து செய்யவில்லை? பா.ம.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் உயர்நீதிமன்ற ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு மணல் கடத்தலை ஆதரிக்க வில்லையா? அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தனி நபர் ஒட்டுமொத்த மணல் விற்பனையையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ, அவர் தானே உங்கள் ஆட்சியிலும் மணல் கொள்ளையை தலைமையேற்று நடத்தினார். அரசியல் ரீதியாக எதிர்த்துக் கொள்ளும் அதிமுகவும், நீங்களும் இது போன்ற முறைகேடுகளில் மட்டும் ஒற்றுமையாய் இருப்பது எப்படி? ஆவின் பால் கலப்பட ஊழலை செய்த வைத்தியநாதன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு 104 லாரிகள் மூலம் பால் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கியது தி.மு.க. அரசு தானே? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் அவருக்கு உரிமம் நீடித்தது என்றால் ஊழல் தொடர்பான விஷயங்களில் இரு கட்சிகளும் ஒரே நிலையில் இருப்பதாகத் தானே பொருள். இனம், மொழி காப்பதே எங்கள் குறிக்கோள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்காக என்ன செய்தது? இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதை தடுப்பதற்காக 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதைத் தவிர வேறு எதையாவது தி.மு.க. செய்ததா? 1985 ஆம் ஆண்டு டெசோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுக்க பொதுக்கூட்டங்களை நடத்திய கலைஞர், ‘‘இலங்கையில் தமிழீழம் அமைய ஆதரவு அளிப்போம்’’ என்பது உள்ளிட்ட 5 உறுதிமொழிகளை தி.மு.க. தொண்டர்களுக்கு செய்து வைத்தார். அதையெல்லாம் முதலில் கலைஞரும் நீங்களும் பின்பற்றினீர்களா? ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்த போதிலும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்ட எழுச்சியை தண்ணீர் ஊற்றி அணைத்த கட்சி தானே தி.மு.க. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் உடல் நலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தபோது, மனசாட்சியே இல்லாமல், விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் திருப்பி அனுப்பினீர்களே இது தான் இனத்தைக் காக்கும் செயலா? நீங்கள் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பினீர்கள்… ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். நீங்கள் இருவருமே தமிழர்களின் எதிரிகள் என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்? காவிரிப் பிரச்சினையில் 1974 ஆம் ஆண்டில் புதுப்பித்துக் கொள்ளப்படவேண்டிய காவிரி ஒப்பந்தத்தை அப்போதைய மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து கைவிட்டது தி.மு.க. ஆட்சி தானே; இப்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த தவறு தானே காரணம். திமுக ஆட்சியில் தானே காவிரி துணை நதிகளின் குறுக்கே ஹாரங்கி, ஹேமாவதி, கபினி உள்ளிட்ட அணைகள் அனுமதியின்றி கட்டப்பட்டன. இவற்றைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்ததா? அதன்பின் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதித் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் அத்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடவும், அதனடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்? இப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு மேகதாது அணை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தவறான அணுகுமுறையை கடைப்பிடித்து தீர்ப்பு கிடைப்பதை தாமதமாக்கிய பெருமையும் உங்களைத் தானே சாரும். தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது, மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து, தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் தி.மு.க தலைவர் கலைஞர் தானே? தமிழக மீனவர்கள் இப்போது அனுபவித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த துரோகம் தானே காரணம்? பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 20&க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியபோது அதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது உங்களின் தி.மு.க. அரசும், அ.தி.மு.க. அரசும் தானே? தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே நீங்கள் தான். ஆனால், ஆட்சி மாறிய பின் அத்திட்டத்திற்கு எதிராக நீங்களே போராட்டம் நடத்துவது எந்த வகையில் நியாயம். 1967 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே தாய்மொழி வழிக் கல்வியை அறிமுகம் செய்யப்போவதாக தி.மு.க. கூறியது. ஆனால், அதன்பின் 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றீர்கள்… இப்போது எங்கு தமிழ் இருக்கிறது. இந்தியாவிலேயே தாய்மொழியாம் தமிழை படிக்காமல் பட்டம் பெற்றுவிடலாம் என்ற அவல நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகிறது. அதைவிடக் கொடுமை முந்தைய தி.மு.க. ஆட்சியில் தான் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விமுறை தொடங்கப்பட்டது. அதை இப்போது அதிமுக அரசு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வந்த சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில வழிப்பள்ளிகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கட்டணக் கொள்ளைக்கு வழிவகுத்தது திமுக தானே? நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டிருப்பது குறித்தும் கவலை தெரிவித்திருக்கிறீர்கள். சற்றே பின்னோக்கிச் சென்று உங்களின் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் பாருங்கள். 1996 ஆம் ஆண்டில் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றீர்கள். அப்போது சென்னையை சிங்காரச் சென்னையாக்குவது தான் நோக்கம் என்றீர்கள். அதை நிறைவேற்றினீர்களா? மேயராக 5 ஆண்டுகள் இருந்ததுடன், உள்ளாட்சித்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் சென்னையை நிர்வாகம் செய்துவந்திருக்கிறீர்கள். இந்த காலத்தில் சென்னை சிங்காரச் சென்னையாக மாறவில்லை. சீக்காளி சென்னையாகவே மாறியிருக்கிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள், சாக்கடைக் கழிவுகள், கூவம் நாற்றம், காற்று மாசு, குடிநீர் பிரச்சினை, கொசுத்தொல்லை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான் நிரம்பியுள்ளன. கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதாகக் கூறி ரூ.1400 கோடியில் திட்டம் செயல்படுத்தினீர்களே…. இப்போது கூவம் மணக்கவா செய்கிறது… இப்போது நாற்றம் தானே வீசுகிறது. நீங்களும், அதிமுகவும் கூவத்தை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி உங்கள் பைகளை நிரப்பிக் கொண்டதைத் தவிர வேறு உருப்படியாக வேறு எதையாவது செய்ததுண்டா? தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளில் இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியை விட மிக மிக மோசமான ஆட்சியைப் பார்க்க முடியாது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளோ அல்லது மக்கள் நலப்பணிகளோ நடைபெறவில்லை. கோவில்களில் பூஜை செய்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடி எடுத்தல் போன்ற பணிகள் மட்டுமே நடக்கின்றன. எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாக எந்திரம் செயலிழந்து விட்டது. தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே காரணம். ஊழலையும், முறைகேடுகளையும் தி.மு.க. தொடங்கி வைத்தது. அதை அ.தி.மு.க. பிரம்மாண்டமாக்கியிருக்கிறது. இந்த குற்றத்திலிருந்து இரு கட்சிகளுமே தப்பிக்க முடியாது. நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்த ஊழலை நீதிபதி சர்க்காரியா ஆணையம் அம்பலப்படுத்தியது. அதன்பின் 1991&96 ஆட்சியில் செய்த ஊழலுக்காகத் தான் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை சீரழித்ததில் அதிமுகவும், திமுகவும் தனித்தனி கட்சிகள் அல்ல… அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இன்றைய நிலையில் தமிழகம் மிகுந்த நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக கிடத்தப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள். இனி அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நோயாளியைக் கூட காப்பாற்றும் சக்தி மருத்துவர்களுக்கு உண்டு. அந்த வகையில் மக்கள் விருப்பப்படி பா.ம.க. ஆட்சிக்கு வந்தபின்னர் கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தை மருத்துவராகிய நான் குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்.

முல்லைப் பெரியாறு: புதிய அணைக்கான ஆய்வுகளை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

சென்னை: முல்லைப் பெரியாறு புதிய அணைக்கான ஆய்வுகளை கேரள அரசு மேற்கொள்வதை தடுத்து நிறுத்த பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை கேரள அரசு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதனால் விவசாயிகளிடையே அச்சமும், பதற்றமும் அதிகரித்துள்ளது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கேரள அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததுடன், பேபி அணையில் பராமரிப்புப் பணிகளை முடித்தவுடன் நீர்மட்டத்தை முன்பிருந்தவாறு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதுமட்டுமின்றி, முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டிய தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவாக ஆணையிட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் எப்போதோ அளித்த சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை வைத்துக் கொண்டு, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை கேரள அரசு மேற்கொள்வது சரியல்ல. இதற்கு முன்பு வல்லக்கடவு பாதையில் 15 இடங்களில் கேரள அரசு ஆய்வு மேற்கொண்ட போது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அப்பணிகளை நிறுத்திய கேரளா, தமிழகத்தில் செயல்படாத அரசு பதவியிலிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. 2011 ஆம் ஆண்டின் இறுதியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீவிரமடைந்ததால் தமிழகத்தில் மதுரை, தேனி மாவட்டங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது; ஒரு கட்டத்தில் சட்டம் & ஒழுங்கு பிரச்சினையாகவும் உருவெடுத்தது. மீண்டும் அதேபோன்ற நிலை ஏற்படுவதற்கும், இரு மாநில உறவுகள் பாதிக்கப்படுவதற்கும் கேரள அரசு வழி வகுக்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து ஆய்வுப்பணிகளை கேரளம் நிறுத்த வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசும் இந்தப் பிரச்சினையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அக்னி நட்சத்திரம் இன்று துவக்கம்

சென்னை: சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுடன் தகிக்கும் அக்னி நட்சத்திர காலம் இன்று துவங்கியது. நிராயண முறையில் சூரியன் 20 டிகிரி அதாவது பரணி 3 ஆம் பாதம் முதல் 43 டிகிரி 20 செக., அதாவது ரோஹிணி முதல் பாதம் முடிய பயணிக்கும் காலம் அக்னி நட்சத்திர காலம் எனப்படுகிறது. அதுபோல், அக்னி நட்சத்திர காலத்தின் இடையே 26 டிகிரி 40 செக., முதல் 40 டிகிரி வரை கார்த்திகை நட்சத்திரத்தின் வழியே சூரியன் பயணிக்கும் காலம் மிக அதிக வெப்ப காலமான கத்திரிக் காலம் ஆகும்., அக்னி நட்சத்திர இன்று மே 5ஆம் தேதி 2.23க்கு துவங்கியது. கத்திரி மே 11ஆம் தேதி 23.47க்கு துவங்குகிறது. மே 25 ஆம் தேதி 19.54க்கு முடிகிறது. அக்னி நட்சத்திரம் மே 29ஆம் தேதி 7.14க்கு நிறைவடைகிறது.

ரூபாய் நோட்டை எண்ணத் தெரியாத மணமகனை நிராகரித்த மணமகள்

பாலியா: உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் மாரிதர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணுக்கும், பீகாரைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாரிதர் கிராமத்தில் இரு வீட்டாரும் கூடினர். திருமண தினத்தன்றுதான், மணமகன் மனோஜ் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்ற விஷயம் மணப்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என அவர் கூறியும் பெற்றோர் ஏற்கவில்லை. உடனடியாக, மணமகனுக்கு ஒரு சோதனை வைத்தார் மணமகள். கொஞ்சம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அவரை எண்ணி அது எவ்வளவு இருக்கிறது என்று கூறச் சொன்னார். அவ்வாறு அவர் மட்டும் ரூபாய் நோட்டை சரியாக எண்ணிக் கூறினால், தான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்றார். ஆனால் ஒருமுறைக்கு இருமுறை, மூன்று முறை எண்ணியும் மணமகன் மனோஜ் ரூபாய் நோட்டு எண்ணிக்கையை தவறாகக் கூறியுள்ளார். இதனால், கோபத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டார் மணப்பெண். இதனால், ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர் பிரச்னையில் ஈடுபட்டனர். ஆனால், கிராமப் பஞ்சாயத்தார் தலையிட்டு, படிப்பறிவில்லாதவர் என்ற விஷயத்தை மறைத்து பட்டதாரிப் பெண்ணுக்கு மணமுடிக்க நினைத்தது தவறு என்று கூறி அனுப்பி வைத்தனர். வேறு வழியில்லாமல் மணமகன் குடும்பத்தினர் சோகத்துடன் பீகாருக்குப் புறப்பட்டனர். ரூபாய் நோட்டை கொடுத்து எண்ணச் சொல்லி, அது தெரியாமல் தவித்த மணமகனை நிராகரித்த மணப்பெண்ணின் இந்தச் செயல், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிங்கப்பூருக்கு விஜயகாந்த் திடீர் பயணம்: தீவிர அரசியலுக்கு திட்டம்?

சென்னை, தேமுதிக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேற்று திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அண்மையில், திடீர் தீவிர அரசியல் ஆர்வம் காட்டி, மேகதாது அணை விவகாரம் உள்பட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்தார் விஜயகாந்த். இதனால் அவர் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகப் பேச்சு எழுந்தது. இருப்பினும் அதை மறுத்த விஜயகாந்த், பின்னர், பாஜக சார்பில் தன்னையே முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தப் பட வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவர் மனைவி பிரேமலதாவும் உடன் சென்றுள்ளார். தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால், தீவிர அரசியலில் களம் இறங்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதனால், அதுகுறித்து ஆலோசிக்கவும், கூட்டணி அமைப்பது குறித்து யோசிக்கவும், தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால் அதற்கான முன் ஏற்பாடுக்காகவும், புத்துணர்ச்சிக்காகவும் அவர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தேமுதிகவினர் கூறுகின்றனர்.

ஆலயங்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசுக்கு ராம.கோபாலன் பாராட்டு

சென்னை: ஆலயங்களில் இறைவன் முன் சமம் என்னும் சமநிலை உருவாக, தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவிப்பதாக, இந்துமுன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம.கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் 38 ஆயிரம் கோயில்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் கோயில் வருமானம் வரும் கோயிலை மட்டுமே இந்து அறநிலையத்துறை கவனிக்கிறது. வருமானம் வரும் கோயில்களிலும் பக்தர்களை கசக்கிப் பிழிந்து கல்லா கட்டும் கேவலம் அரங்கேறுகிறது. அதிலும் கோயில்களில் தரிசனம் கட்டணம் என இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் பாகுபாடு படுத்துவது கேவலத்திலும் கேவலமானது. ஆலய தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தொடக்ககாலம் முதலே வலியுறுத்தி வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டங்களையும், கையெழுத்து இயக்கங்களை, பேரணிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் வருமானம் அதிகமுள்ள 234 கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய தமிழக அரசிற்கு இந்து அறநிலையத்துறை பரிந்துரைத்திருப்பது பாராட்டத்தக்கது. தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், அனைத்து ஆலயங்களிலும் இறைவன் முன் பக்தர்கள் அனைவரும் சமமாக நடத்திடவும், அனைவரும் கௌரவத்துடன் இறைவனை தரிசிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவிலும், வட பாரதத்திலும் தரிசன கட்டணம் என்பது எந்தக் கோயிலும் கிடையாது. தமிழகத்தில் திரைப்பட அரங்கு போல, விசேஷ நாட்களில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. பிரதோஷ காலங்களிலும் ஒரு கட்டணமும், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் அதிக கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. இன்னும் சில கோயில்களில் மக்கள் தரிசனத்திற்கு வரும் காலை மாலை வேளைகளில் கட்டணம் செலுத்தாமல் உள்ளே செல்லமுடியாத நிலை இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். தரிசன வரிசையை நெறிப்படுத்திடவும், ஒழுங்குப்படுத்தி பக்தர்கள் முறையாக இறைவனை தரிசிக்க முறையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும். அதற்கு வழிபாட்டு குழுக்கள், பிரதோஷ வழிபாட்டுக்குழுக்களின், சகஸ்ரநாம குழுக்கள் போன்ற பக்தர்களின் குழுக்களின் உதவிகளை பெற்று நடைமுறைப்படுத்தலாம். கோயில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசிற்கு இந்து முன்னணி பாராட்டுத் தெரிவித்துக்கொள்வதோடு, முழுமையாக அனைத்து தரிசன கட்டணங்களையும் அனைத்து கோயில்களிலும் ரத்து செய்யவும் வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.. என்று கூறியுள்ளார்.

மத்திய அரசுப் பணி எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது

சென்னை: சென்னை ஆவடியில் மத்திய அரசுப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, ஆவடியில் மத்திய அரசின் கனரக வாகனத் தொழிற்சாலை – எச்.வி.எஃப்பில் டெக்னீசியன்கள் மற்றும் கடைநிலை ஊழியர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எழுத்துத் தேர்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறைத் தேர்வு ஆவடி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், சான்றிதழ் சரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரின் சான்றிதழ்களையும் சரிபார்த்தார். அப்போது, எழுத்துத் தேர்வில் பதிவு செய்யப்பட்ட கைரேகைகளையும், சான்றிதழ் சரிபார்க்க வந்தவர்களின் கைரேகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ்குமார் (30), பிரபாத்குமார் (26), சந்தன்குமார் (23) ஆகியோரின் கைரேகைகள் பொருந்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆவடி டேங்க் பேக்டரி காவல் உதவி ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் நெருக்கடி: ஊராட்சி ஒன்றிய பணியாளர் தீக்குளிப்பு?

திருவாரூர்: திருவாரூர் அருகே அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, ஊராட்சி ஒன்றியப் பணியாளர், பணியிட மாற்றம் கிடைக்காமல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். திருவாரூர் அருகே உள்ள அம்மையம்மன் கிராமம் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(38). இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சியராக வேலை செய்து வந்த இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருந்தார். மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வயல் பகுதிக்குச் சென்று, திடீரென தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது முத்துக்கிருஷ்ணன் தனக்கு பணியிட மாறுதல் கேட்டதாகவும், பணியிட மாறுதல் கிடைக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. முத்துகிருஷ்ணன் கடந்த 6 மாதத்திற்குமுன் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வரைவாளராக வேலை செய்து வந்தார். அங்கு பணியிலிருந்த செயற்பொறியாளர் செந்தில்குமார் என்பவரின் நெருக்கடி காரணமாக, நன்னிலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பணிஇட மாறுதல் பெற்றுச் சென்றார். அங்கே சென்ற பிறகும் செயற்பொறியாளர் செந்தில்குமாரின் நெருக்கடி தொடர்ந்து நீடித்து வந்ததாகவும், இதனால்தான் அவர் தற்கொலையில் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானகிருஷ்ணனிடம் கேட்டபோது, முத்துகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்து வந்ததாகவும், கடந்த 30ம்தேதிதான் பணியில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் முத்துக்கிருஷ்ணன் பணியிட மாறுதல் கோரி எந்த விண்ணப்பமும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.