பாலியா: உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் மாரிதர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணுக்கும், பீகாரைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாரிதர் கிராமத்தில் இரு வீட்டாரும் கூடினர். திருமண தினத்தன்றுதான், மணமகன் மனோஜ் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்ற விஷயம் மணப்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என அவர் கூறியும் பெற்றோர் ஏற்கவில்லை. உடனடியாக, மணமகனுக்கு ஒரு சோதனை வைத்தார் மணமகள். கொஞ்சம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அவரை எண்ணி அது எவ்வளவு இருக்கிறது என்று கூறச் சொன்னார். அவ்வாறு அவர் மட்டும் ரூபாய் நோட்டை சரியாக எண்ணிக் கூறினால், தான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்றார். ஆனால் ஒருமுறைக்கு இருமுறை, மூன்று முறை எண்ணியும் மணமகன் மனோஜ் ரூபாய் நோட்டு எண்ணிக்கையை தவறாகக் கூறியுள்ளார். இதனால், கோபத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டார் மணப்பெண். இதனால், ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர் பிரச்னையில் ஈடுபட்டனர். ஆனால், கிராமப் பஞ்சாயத்தார் தலையிட்டு, படிப்பறிவில்லாதவர் என்ற விஷயத்தை மறைத்து பட்டதாரிப் பெண்ணுக்கு மணமுடிக்க நினைத்தது தவறு என்று கூறி அனுப்பி வைத்தனர். வேறு வழியில்லாமல் மணமகன் குடும்பத்தினர் சோகத்துடன் பீகாருக்குப் புறப்பட்டனர். ரூபாய் நோட்டை கொடுத்து எண்ணச் சொல்லி, அது தெரியாமல் தவித்த மணமகனை நிராகரித்த மணப்பெண்ணின் இந்தச் செயல், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
