கோவையில் கைதான கேரள மாவோயிஸ்டுகள்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

Published:

kovai-moistகோவை: கோவையில் நேற்று கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் உளவுத்துறை டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கியூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அருகே கருமத்தம்பட்டியில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர்கள் 5 பேரிடம் இருந்து 27 செல்போன்கள், டேப்லெட், பென் டிரைவ், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 50 ஆவணங்களும் சிக்கியுள்ளன. மேலும் தென் மாநில எல்லைப் பகுதிகளைக் குறிக்கும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்து அவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன், கோவை எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பை தீ வைத்துக் கொளுத்தியும், வனப் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் அட்டகாசம் செய்தனர் மாவோயிஸ்ட்கள். இந்நிலையில், கேரளாவில் மாவோயிஸ்ட்களைப் பிடிக்க போலீசார் சோதனையைத் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்குவதாகவும் தமிழக போலீசார் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள போலீசார் தமிழக போலீஸாரிடம் தகவல் கொடுத்தனர். இதனால், தமிழக போலீசார் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கியூ பிரிவு போலீசாரும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் பதுங்கி இருப்பதாக தமிழக கியூ பிரிவு போலீசார் மற்றும் ஆந்திர மாநில சிறப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை கருமத்தம்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தபோது, கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் காரில் வந்த 5 பேர் தாங்கள் வந்த காரை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தமிழக கியூ பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில போலீசாரும் துப்பாக்கி முனையில் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். தங்களை போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர் என்பதை அறிந்த அவர்கள் 5 பேரும் கோஷம் போட்டபடி போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்கள் கேரள மாவோயிஸ்ட்கள் என்றும், அவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுத் தலைவர் என்றும் தெரியவந்தது. அவர் பெயர் ரூபேஷ் (40) என்றும், கேரள மாநிலம், திருசூரைச் சேர்ந்த அவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவருடன் அவரது மனைவி சைனா என்ற திருசூரைச் சேர்ந்த பெண்ணும் பிடிபட்டார். மேலும், அனூப் (30), கண்ணன் (25) ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கண்ணன், ஈஸ்வரன் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் தமிழகத்தில் பதுங்கியிருக்க இவர்கள் இருவரும் உதவியதாகத் தெரியவந்தது. கேரளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு வந்த ரூபேஷுக்குக் கீழ் 50க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களாக செயல்பட்டு வந்துள்ளனர். ரூபேஷ் சட்டம் படித்துள்ளார். பின்னர் இந்த இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் தீவிரவாதி சுந்தரி என்பவரும், ரூபேசின் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. மாவோயிஸ்ட்கள் பிடிபட்டது குறித்து கேரளா மற்றும் ஆந்திர போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதை அடுத்து கேரள மற்றும் ஆந்திர போலீசார் கோவைக்கு விரைந்தனர். இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கூறியபோது, பிடிபட்ட தீவிரவாதிகள் 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் தொடர்பான விவரங்கள் விசாரணைக்குக் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img