
சென்னை, அடையாறில் திடீரென காணாமல் போனார் என்று புகார் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, பாடகி சுசித்ராவை போலீசார் வலைவீசித் தேடி, அலைபேசி சமிக்ஞை உதவியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து மீட்டனர். தொடர்ந்து சேத்துப்பட்டில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சுசித்ரா சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தொடக்க காலத்தில் பண்பலை வானொலி தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்ற சுசித்ரா என்ற சுசி, பின்னர் திரைப்படங்களில் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். ஆர்.ஜே.,யில் இருந்து பின்னணிப் பாடகியாக உருமாறிய இவர், பின்னாளில் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார்.
இதன் பின்னர் இவரது பெயர் ஊடகங்களில் பலமாக அடிபடத் தொடங்கியது. ‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் திரைப்பட பிரபலங்களின் அந்தரங்க படங்கள் இவரது டிவிட்டர் பக்கங்களில் அதிரடியாக வெளியாகின. இதன் பின்னணியில் சுசித்ரா இருப்பதாகவும், இவருக்கு மனநிலை சரியில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், தனது டிவிட்டர் பக்கம் யாராலோ களவாடப் பட்டு இயங்கப்படுகிறது என்று சுசித்ரா புகார் கூறினார்.
இந்நிலையில் சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாக ரத்து பெற்றார். இதன் பின்னர், சென்னை அடையாறில், காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரி சுனிதா, திருவான்மியூரில் வசித்து வருகிறார்.
சுசித்ராவின் சகோதரி, சுசித்ராவை சென்னை தி.நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்.
சுசித்ரா சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் சுசித்ரா அவரது தோழியிடம் ‘நான் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இதை அடுத்து பதறிப் போன அவரது தோழி, சுசித்ராவின் சகோதரி சுனிதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதை அடுத்து போலீஸாரிடம் புகார் செல்லவே, அடையாறு போலீசார் சுசித்ரா வீட்டுக்குச் சென்று பார்த்தனர். ஆனால் வீடு பூட்டப் பட்டிருந்தது. இதனால், ‘சுசித்ராவைக் காணவில்லை’ என்று அவரது சகோதரி சுனிதா, அடையாறு போலீசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கி இருப்பதை அறிந்து, பெண் போலீசாருடன் சென்று சுசித்ராவை மீட்டனர்.
பின்னர் தி.நகர் மருத்துவமனைக்கு சுசித்ராவை அழைத்துச் செல்ல சுனிதா முயன்றார். ஆனால் அவர் அங்கே செல்ல மறுத்தார். இதையடுத்து பெண் போலீசார் உதவியுடன் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இதனிடையே, சுசித்ரா இது குறித்துக் கூறுகையில், தனக்கு ஒன்றுமில்லை என்றும், தன்னை மனநலம் பாதிக்கப் பட்டவராக சித்திரிக்க முயற்சி நடக்கிறது; நான் ஓட்டலில் ஓய்வு எடுத்தேன் ஆனால் வேண்டுமென்றே இப்படி என் சகோதரி புகார் அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.