
வியாழன் மாலை 5 மணியளவில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே பயணிகள் சேவைக் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சின்னபாலன், எம்.என்.சுந்தர் ஆகியோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள், பயணியருக்கான சேவைகள், ஓய்வு அறை, நடை மேடை உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்தனர். ரயில் நிலைய உணவகம், தங்கும் இடங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ததுடன், பயணிகளிடம் அவர்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, ரயில்வே துறை மூலம், பயணிகளுக்கான வசதிகளைக் கேட்டறிந்து, பரிந்துரைகளையும் தகவல்களையும் கொடுக்கும் பாலமாக தாங்கள் செயல்படுவதையும், ரயில் நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தாங்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில், பிட் லைன் வசதி, லிப்ட் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டுள்ளதாகவும், அது குறித்து அறிக்கை அனுப்பப் படும் என்றும் கூறினர்.

முன்னதாக, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில், செங்கோட்டை ரயில் நிலையத்தில் பிட் லைன் வசதி ஏற்படுத்துதல், லிப்ட் வசதி, பயணிகள் ஓய்வறைகள், கூடுதல் டிக்கட் கவுண்டர்கள், அனைத்து நடைமேடைகளிலும் குடிநீர் மற்றும் கழிவறை வசதி, எல்லா நடைமேடைகளிலும் ரயில்களின் வருகை புறப்பாடு பற்றி அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் கூடுதலாக அமைத்தல், ரயில் பெட்டிகளை கண்டறியும் எலக்ட்ரானிக் போர்டுகள் அனைத்து நடைமேடைகளிலும் அமைத்தல் இவை குறித்து மனு ஒன்று அளிக்கப் பட்டது.