கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்?

உரத்த சிந்தனை கட்டுரைகள் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
karunanidhi arivalayam - 2026

சென்னை ஐஐடி யில் மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தற்கொலை குறித்து திரு.ஸ்டாலின் அவர்கள், “கல்வி நிலையங்களைக் காவிமயமாக்குவதைத் தவிர்த்து, நம் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட ஆவன செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மாணவ, மாணவியர்கள் தற்கொலை என்பது தடுக்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் கிடையாது. தி மு க ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம், கல்வி நிலையங்களை கருப்பு சிவப்பு மயமாக்கியது தி மு க என்று ஸ்டாலின் ஏற்று கொள்கிறாரா?

1972 ம் ஆண்டு சிதம்பரம் பல்கலைக்கழகம் தி மு க தலைவர் கருணாநிதி அவர்களுக்கு டாக்டர் பட்டமளித்ததை எதிர்த்த மறுநாளே, மாணவர் உதயகுமார் தண்ணீர்த்தொட்டியில் பிணமாக மிதந்ததை தமிழகம் இன்றும் மறக்கவில்லை. அந்த மரணத்தின் சாயம் கருப்பு சிவப்பு என்று ஏற்று கொள்கிறாரா ஸ்டாலின் அவர்கள்?

2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் கருப்பு சிவப்பு தான் என்றால் மறுக்க முடியுமா ஸ்டாலின் அவர்களால்? இந்த தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்த உண்மைகளை கண்டறிய வேண்டியது நம் அனைவரது கடமை என்றபோதிலும் உறுதிபடுத்தாத செய்திகளை வைத்து கொண்டு இதற்கு காவி சாயம், பச்சை சாயம் என்றெல்லாம் பூசி மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஸ்டாலின் அவர்கள் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

fathima iit student - 2026

கடந்த சில வருடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பல தற்கொலைகள் குறித்து வாய் மூடி மௌனம் காத்தது ஏன்? அதற்கு கருப்பு சிவப்பு தான் காரணம் என்று ஏற்றுக் கொள்கிறாரா ஸ்டாலின் அவர்கள்?

தமிழகத்தில் பெரிய கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பற்ற முறையில், அரசியல் முதிர்ச்சி அற்ற வகையில், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் கொடும் செயலை செய்திருப்பது எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுவது என்பது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்படுகிற விமர்சனம். பாஜக வின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகளையும் பொய் புரட்டுகளையும், அநாகரிகமான சொற்களையும் தரம் தாழ்ந்த முறையில் மதரீதியாக பதட்டத்தை உண்டாக்கும் முயற்சியில் ஸ்டாலின் அவர்களும், இடது சாரிகளும், திருமாவளவன் அவர்களும் விமர்சிப்பதால் , இந்த விவகாரத்தில் கருப்பு சிவப்பிற்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா? இதன் பின்னணி என்ன ?

தவறான தகவல்களை அளித்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் தேவையெனில் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இதுபோன்ற விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பண்பாடற்ற அநாகரீகமான செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஸ்டாலின், திருமாவளவன் மற்றும் கம்ம்யூனிஸ்டுகளே, இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் மதவாத அரசியலை அதிகார போதைக்கு ஏங்கி இரு மதங்களுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் உங்கள் எண்ணத்தை தடுத்து நிறுத்துவோம்

தமிழக அரசு இது குறித்து உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் தேவையெனில் இந்த தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் கருப்பு சிவப்பு சாயம் பூசப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

  • நாராயணன் திருப்பதி.
    (செய்தி தொடர்பாளர், தமிழக பாஜக)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.