வங்கி, ஏ.டி.எம் மையங்களுக்குச் சென்று பணம் எடுக்க வேண்டிய தேவை இல்லை; வீடு தேடி பணம் வரும் வகையில் கொரோனா அச்சம் நிலவும் இந்த நேரத்தில் தபால்துறை சேவை ஆற்றுகிறது.
கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தபால்துறை தொடர்ந்து பணி ஆற்றி வருகிறது. கடந்த ஒரு மாதமாக 50 சதவிகித அளவில் இயங்கிவந்த தபால் நிலையங்கள், தற்போது நாடு முழுக்க முழு அளவில் இயங்கி வருகின்றன. அவசியத் தேவைக்கு தபால் நிலையம் செல்ல முடியாதவர்களுக்கு வீடு தேடி வந்து சேவை வழங்குகின்றனர்.
தபால் துறை மூலமாகவே, வீட்டில் இருந்தபடியே வங்கி சேமிப்புக் கணக்கிலுள்ள பணத்தையும் பெற முடியும். ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவும் தபால்துறை சேவைகள் குறித்து, சென்னை (அஞ்சல்) மண்டல இயக்குநர் கோவிந்தராஜன் தெரிவித்தவை…
ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல தபால் துறை அவசியமாகிறது. எனவே, கொரோனா ஊரடங்கிலும் இந்த சேவை தடைப்படவில்லை. மூத்த குடிமக்கள் பலரும் தபால் நிலையம் மூலம் ஓய்வூதியம் பெற்றுவருகின்றனர். ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாமல் அவர்கள் சிரமப்பட்டால், தபால் துறை உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் வீட்டுக்கே சென்று பணத்தைக் கொடுப்போம். ஊரடங்கால் வங்கிக்கோ ஏ.டி.எம் சென்டருக்கோ சென்று பணம் எடுக்க முடியாமல் சிரமப்படும் யார் வேண்டுமானாலும் எங்கள் உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
‘இண்டியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்’ என்ற திட்டத்தின் கீழ், தபால்துறை மூலமாகவே அவர்கள் பணம் பெற்றுக் கொள்ள முடியும். ஒருநாளில் 500 முதல் 10,000 ரூபாய் வரை பெற முடியும்.
இந்தச் சேவையைப் பெற ஒருவருக்கு பிரபலமான எந்த வங்கியில் வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கு இருக்கலாம். அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தபால் ஊழியர் நேரடியாக வீட்டுக்கே சென்று, செல்போன் செயலி மூலம் அந்த நபரின் கைரேகை மற்றும் செல்போன் ஓ.டி.பி எண் ஆகியவற்றை சரிபார்த்த பிறகு பணத்தைக் கொடுப்பார். இந்த சேவை கடந்த ஓராண்டு காலமாகவே வழங்கப் படுகிறது. தற்போதைய ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் பிரபலமாகி வருகிறது…
- அருகிலுள்ள தபால் நிலையத்தைத் தொடர்புகொண்டு மேற்சொன்ன சேவைகளைப் பெறலாம்.
- உதவி மைய எண்ணைத் தொடர்புகொண்டாலும் அவர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டப்படுகிறது.
- இந்த சேவைகளைப் பெற 044 – 28545531, 9941163765, 9894881575 ஆகிய எண்களை தமிழக மக்கள் யார் வேண்டுமானாலும் தொடர்புகொண்டு பயன் பெறலாம்