
கொரோனா தொற்றுநோய்க்கு மேற்கு மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்திருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் பெருமளவில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பரவலால் பாதிக்கப் பட்டு வரும் நிலையில் தற்போது முக்கிய பதவியில் உள்ளவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலக அதிகாரிகள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனிடையே, போலீசார் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வேலூர் பாகாயம் காவல்நிலையத்தில் மேலும் 3 போலீசாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி என்பவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் பாலமுரளிக்கு கடந்த ஐந்தாம் தேதி கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
கடந்த 13ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமானது. இதை அடுத்து சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தனது சொந்த செலவில் ரூபாய் 2.25 லட்சத்திற்கு மருந்து வாங்கிக் கொடுத்து உயரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரினார். இந்த மருந்தால் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்று மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் இன்று உயிரிழந்தார்.
சென்னை வடபழனியில் வசித்து வந்த ஆய்வாளர் பாலமுரளிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வேலூரைச் சேர்ந்த பாலமுரளியின் தந்தையும் காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.