அல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200 உறுப்பினர்கள் இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மறைந்திருப்பதாக ஐ.நா பாதுகாப்பு கௌன்சலின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட 26-வது Analytical Support and Sanctions Monitoring Team வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அறிக்கையின்படி, ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு “ஹிந்த் விலாயத்” மே 10, 2019 அறிவிக்கப்பட்டது என்றும், இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சிப் பெற்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கிறது.
AQIS-யின் முன்னாள் தலைவர் ஆஸிம் உமர் மரணத்திற்கு பதிலடி தரும் திட்டத்தோடு அது இந்தியாவில் செயல்பட்டு வருவதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் AQIS குறித்து அந்த அறிக்கையில், நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தஹார் மாகாணங்களில் இருந்து தலிபான் குடையின் கீழ் இந்த பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது என்று சுட்டிக்காட்டுகின்றது. இதில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 150 முதல் 200 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர் என்றும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
மறைந்த அசிம் உமருக்குப் பின் வந்த ஒசாமா மஹ்மூத் தான் AQIS இன் தற்போதைய தலைவர் என்றும், AQIS அதன் முன்னாள் தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்க பிராந்தியத்தில் பதிலடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சமூக வலைதளங்களில் செயல்பாடுகள்:
ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா சமூக ஊடகங்களில் அதிக திறனுடன் செயல்படுவதுடன், வலைதளங்கள் மற்றும் செய்தியிடல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஆட்சேர்ப்பு, திட்டமிடல் மற்றும் நிதி திரட்டும் நோக்கங்களுக்காக பின்தொடர்பவர்களுடன் தொடர்புகொள்வதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
டெலிகிராமில் இருந்து தீவிரவாத உள்ளடக்கத்தை அகற்ற 2019 நவம்பரில் யூரோபோல் நடவடிக்கை எடுத்த காரணத்தால், செய்தியை பரப்புவதற்கான ஐ.எஸ்.-ஸின் திறனில் சில தாக்கங்களை ஏற்படுத்தியதாகத் தோன்றினாலும், ஐ.எஸ். அமைப்பு சில மாற்று வழிகளை பயன்படுத்துவதாக தெரிகிறது.
ஐ.எஸ். அமைப்பு கடந்த ஏப்ரல், மே 2020 மாதங்களில் வீடியோ மற்றும் ஆடியோ செய்திகளை பரவலாக அனுப்ப சிறிய சிறிய தளங்களை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. அவை Dropbox, Files.fm, Internet Archive, Microsoft OneDrive, Nextcloud, Ok.ru, Rocket.Chat and Vimeo ஆகியவையாகும்.
மெசேஜ் அனுப்புவதற்கு டெலிகிராம் தவிர வேறு தளங்கள் குறித்து ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா யோசித்து வருகின்றன என்றும் தெரிகிறது.
கடந்த மே 2020 ல் வெளிவந்த ’Ibaa’ இதழில், ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் இணை அமைப்பான ஹெயத் தஹ்ரிர் அல்-ஷாம் அதன் உறுப்பினர்களையும், வேறு சில பயங்கரவாத குழுக்கள், சிரியா, அரபு குடியரசு குழுக்களைச் சேர்ந்தவர்களை நிரந்தரமாக Telegram, Facebook Messenger and Viber ஆகியவற்றிலிருந்து விலகிடுமாறு கட்டளையிட்டது என்றும், அதற்கு மாற்றாக செய்திகளையும், தகவல்களைப் பறிமாறிக் கொள்ள Conversations, Riot, Signal and Wire ஆகிய தளங்களை பயன்படுத்திட வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
இந்திய அரசின் கவனத்திற்கு :
மத்திய அரசு இந்த அறிக்கையை தீவிரமாக அலசி, அதனை ஒட்டி கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும்.
கர்நாடகாவில் பா.ஜ.க அரசு என்பதால் போதிய ஒத்துழைப்பு கிடைக்கலாம். ஆனால், கேரள மாநிலத்தில் ஆளும் கட்சி (அரசு), எதிர்க்கட்சி என இரண்டுமே மத அடிப்படைவாத குழுக்களுக்கு ஆதரவு தருபவை தான். எனவே NIA வின் பங்களிப்புடன் தாமதிக்காமல் தீவிரமாக இந்தப் பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க வேண்டும்.
அப்போது தான் நாட்டில் அமைதி நிலவ முடியும். நீடித்த பொருளாதார வளர்ச்சி என்பது உள்நாட்டு பாதுகாப்பின் மூலமே எட்ட முடியும். எனவே மத்திய, மாநில அரசுகள் நாட்டின் பாதுகாப்பில் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்திட முடியும்.
- ராஜேஷ் ராவ்