ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி ஒற்றைக் காலால் 105 நாட்களில் 750 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து, சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஒருவர் தன் வாழ்கையில் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் இறை பக்தியுடன் வாழ்ந்தால் அவர் வாழும் தருனங்கள் அனைத்தும் எல்லையில்லா ஆனந்ததையும் மன நிறைவையும் உணர்வார்.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் பக்தி அனைவரும் அறிந்ததே. நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்களின் பக்தி தனி சிறப்புடையது.
இந்நிலையில் சபரிமலையில் ஒரு தீவிர அய்யப்ப பக்தரின் பக்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் இருந்து சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி, ஒற்றைக் காலுடன் 105 நாட்கள், 750 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நேற்று முன்தினம் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார்.
“இது எனக்கு முதன் முறை அல்ல இரண்டாவது முறை நடைபயணமாக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்துள்ளேன். ஐயப்பனின் பரிபூரண அருளால் எனது பயணம் சிறப்பானதாக அமைந்தது.
உலகத்தில் நன்மையும், பெருந்தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் விடுபட வேண்டும் என்று இந்த புனித யாத்திரையை மேற் கொண்டேன்.
என் தரிசனத்திற்கு உதவிய காவல்துறையினருக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் என் நன்றிகள்” என்று சுரேஷ் என்ற ஐயப்பனின் உன்னத பக்தரின் வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.