ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.சென்னை, செங்கல்பட்டு, வேலூர்உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமோ, பதட்டமோ அடையத் தேவையில்லை. தொற்று அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் சுவாச உதவி இதுவரை தேவைப்படவில்லை.
அதேபோல், தொற்று உறுதியானவர்களுக்கு நுரையீரல் தொற்றும் இதுவரை ஏற்படவில்லை. போதுமான அளவு படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
பேருந்துகளில் பயணம் செய்யும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பெருநகரப் பகுதிகளில், கொரோனாவை விட ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.