ஆந்திராவில் புறாவின் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்டைய காலங்களில் புறாக்களின் கால்களில் சீட்டை கட்டி செய்திகளை எழுதி அனுப்பப் பட்டதன் மூலம்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன. பழங்காலத்தில் ஒற்றர்கள் அதிகமாக புறாக்களை உபயோகித்து தான் தகவல்களை தங்களின் அரசருக்கோ, அமைச்சருக்கோ பரிமாறினர்.
மேலும், காதலுக்கும் புறாக்கள் கடிதங்களை சுமந்து சென்று தூது போயுள்ளதாகவும் நாம் படித்துள்ளோம். ஆனால், தற்போது சில புறாக்கள் நம் நாட்டில் சீன நாட்டின் ரகசிய குறியீடுகளை தாங்கி உலா வருகின்றன.
நேற்றைய தினம் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே சீமகுர்த்தி எனும் ஊரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு உள்ள ஒரு புறாவை அப்பகுதியினர் பிடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, போலீஸார், வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர், அந்த புறாவை போலீஸார் கைப்பற்றி அதன் காலில் இருந்த ரகசிய குறியீடை பறிமுதல் செய்தனர்.
அதில் ஏஐஆர்-2022 எனவும், மேலும் சில சீன எழுத்துக்களும் எழுதி இருந்தன. இப்புறா கடந்த 2 மாதங்களாக அப்பகுதியில் சுற்றி திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர். இது குறித்து ஓங்கோல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன் தினம் செவ்வாய் கிழமை ஒடிஷா மாநிலம், காம்ஸ்பஹால் கிராமத்தில் ஒரு புறா அடிபட்டு சாலையில் விழுந்தது. இதனை கண்ட சர்பேஷ்வர் சவுத்ராய் என்பவர் அப்புறாவை எடுத்து பார்க்கையில், அதன் காலில் சீன எழுத்துக்கள் கொண்ட ஒரு ரகசிய குறியீடு இருந்துள்ளது. உடனே இது குறித்து சர்பேஷ்வர் சவுத்ராய் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இப்புறா எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிஷாவை தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலம், ஓங்கோலில் மற்றொரு சீன குறியீட்டுடன் புறா ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.