கோவிட் வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல், ஓமைக்ரான் வேரியண்ட் பரவல் ஆகியவற்றால், வரும் 12ஆம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக., தமிழக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட 12 மருத்துவ கல்லூரிகளைத் திறந்து வைக்க, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தினத்தில் மதுரையில் பாஜக.,வின் சார்பில் நடக்கும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தமிழக பாஜக.,வும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இதனால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப் படலாம் என்று கூறப்பட்டது.
இதற்கு ஏற்ப, தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மதுரையில் வரும் 12ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. கோவிட் அச்சுறுத்தல் மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. எனினும் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறாரா என்பது குறித்து தமிழக அரசுதான் கூற வேண்டும் என்றார்.