ஏகாம்பரநாதர் தல விருட்சமான மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு 4 வேதங்களை குறிக்கும் தெய்வீக மாமரம்.
இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகின்றன. தற்போது 4 சுவையுடன் கூடிய மாங்கனிகள் காய்க்கத் தொடங்கி உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வியந்து பார்த்து வணங்கி செல்கின்றனர்.
சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் முதன்மையான மண் ஸ்தலமாக திகழ்வது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார்.
இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.
ஆன்மீக சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர்.
இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஸ்தல விருட்சம் என்று ஒரு மரம் உண்டு. அந்த வகையில், பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஸ்தவிருட்சம் ஆக மாமரம் உள்ளது. 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாமரம் கோவில் கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் உள்ளது.
இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் காட்சியளிக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள்.
இதனை சிவனது திருமணகோலம் என்கிறார்கள். இதன் சிறப்பு அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தார் என சொல்லப்படுகிறது. இதனாலேயே இன்றும் இங்கு திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
இம்மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு 4 வேதங்களை குறிக்கும் தெய்வீக மாமரமாகும். இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகின்றன. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்த மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. தற்போது இந்த மாதத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்கிய உள்ளன. மாமரத்தில் மாங்காய்கள் காய்த்துள்ளதைப் பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மாமரத்தை வணங்கி செல்கின்றனர்.