spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சிற்றுயிர்களால் ஆனது இந்த உலகு

சிற்றுயிர்களால் ஆனது இந்த உலகு

சுற்றுச்சூழல் என்றதுமே பெரும் பெரும் பிரச்சனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நம்மிடையே அற்பத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்களை யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஆனால் இந்த சிற்றுயிர்கள்தான் உலகை கட்டமைத்திருக்கும் சிற்பிகள். இவைகள் இல்லையென்றால் எந்த உயிரினமும் பூமியில் இருந்திருக்க முடியாது; நிலைக்க முடியாது. சுற்றுச்சூழல் மாசு பூமிக்கு நன்மை செய்யும் அந்த சிற்றுயிர்களையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் உண்மை.

 
3.bp.blogspot.com VvJ4SvJ6CP8 VgACZj15bEI AAAAAAAAGA8 hwAtNNLJuq8 s640 0e746b5fba2567a98f16dc1d932c7c54
6 கோடி உயிர்கள்
மண்ணுக்குள் நம் கண்ணுக்குத் தெரியாத ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி மண்ணில் 6 கோடி உயிர்கள் செழிப்பான பூமிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த உழைப்புதான் மண்ணை வளமாக்குகிறது. தாவரங்களை செழிக்க வைக்கிறது. அதன்மூலம் உயிரினங்களை வாழவைக்கிறது.  
 
இந்த 6 கோடி நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்க அதைவிட குட்டியாக ஒரு உயிரினம் அதற்குள்ளேயே இருக்கிறது. அதன் பெயர் ‘மோரெட்’. இதுதான் மண்ணின் உயிர்த்தன்மையைக் காக்கும் நுண்ணுயிர்.  மண்ணில் நடைபெறும் தாதுக்கள் சுழற்சிக்கு இதுதான் காரணம்.
 
விவசாயத்தின் உயிர்நாடி இந்த சின்னஞ்சிறிய உயிரிகள்தான். ஆனால் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவதும் இவைகள்தான். இந்த மருந்துகள் பயிர்களில் இருக்கும் பூச்சிக்களை அழிக்கும் அதே வேளையில் மண்ணில் உள்ள இந்த உயிர்ச்சத்து தரும் நுண்ணுயிரிகளையும் சேர்த்தே கொன்று விடுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள் எல்லாமே ‘சிந்தெடிக் கெமிக்கல்’வகையை சேர்ந்தவை. அதாவது இயற்கையில் இல்லாத ரசாயனங்கள்.
இயற்கையில் கிடைக்கும் வேதிப்பொருட்களை தாதுக்களாக உருமாற்றம் செய்யத்தெரிந்த இந்த நுண்ணுயிரிகளுக்கு மனிதன் செயற்கையாக உருவாக்கியிருக்கும் புதுவகையான வேதிப் பொருட்களை எப்படி தாதுக்களாக மாற்றுவது என்று தெரிவதில்லை. அதனால் குழம்பிப்போன அவைகள் தாது மாற்றத்தை நிறுத்திவிடுகின்றன. மண்ணின் செழுமை இப்படிதான் ரசாயன உரங்களால் பறிபோயின. விளைநிலங்கள் நஞ்சாகிப் போனதும் இதனால்தான்.

2.bp.blogspot.com ugOPisyohUM VgACxOJtbMI AAAAAAAAGBE XY3QyccwjBM s400 worm coiled
மண்புழு
நமக்குதவும் இன்னொரு சிற்றுயிர் மண்புழு. மண்புழுவை விவசாயிகளின் தோழன் என்பார்கள். கடும் கோடையிலும் கூட மண்ணின் ஈரத்தைக் காக்கும் வள்ளல்கள். மழைக்காலங்களில் இவற்றின் கழிவுகள் மண்ணின் மீது எறும்பு புற்றுப் போல் குவியல் குவியலாக இருக்கும். மண்புழுக்கள் மண்ணை தின்கின்றன. அதிலுள்ள கரியமிலப் பொருட்களை செரிமானம் செய்து கொள்கின்றன. கரியமிலப் பொருட்கள் குறைவதால் மண்ணில் உயிர்ச்சத்து கூடுகிறது.

தனது வாயால் மண்ணைத் தின்று கொண்டே போகும்போது அது தனக்கான வளையை உருவாக்கிக் கொள்கிறது. இப்படி மண்புழுக்கள் வளைகளை உருவாக்கும்போது பூமியில் நிறையத் துளைகள் இயல்பாகவே ஏற்படுகின்றன. அந்த துளைகள் மூலம் மழைநீர் மற்றும் பாசன நீர் பூமியின் ஆழத்திற்கு சென்று நிலத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இப்படி துளையிடப்பட்ட நிலம் மிருதுவாகி விடுவதால் பயிர்களின் வேர்கள் சுலபமாக ஊடுருவி வளரமுடிகிறது. இந்த துளைகள் நிலத்தினுள் காற்றோட்டத்தையும் அதிகப்படுத்திவிடுகிறது. இதனால் மண்ணில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பலனடைகின்றன. பல இயற்கை ரசாயனப் பொருட்கள் இத்துளைகள் மூலம் நிலத்தின் ஆழம் வரை சென்று சேருகின்றன.

மண்புழு ஒரு இரவு ஜீவி. வெளிச்சத்தை கண்டால் வளைக்குள் பதுங்கிக்கொள்ளும். இவைகள் இரவு முழுவதும் உணவு உண்டு தன் கழிவை வளையின் வெளியே தள்ளிவிடும். அது மண்ணின் மேற்பரப்பில் ஒரு குவியலாக காணப்படும். மண்புழுவின் இந்தக் கழிவு மிக மிக வீரியம் மிக்கது.

மனிதன் உற்பத்தி செய்யும் எந்த செயற்கை உரங்களை விடவும், இயற்கை உரமான கால்நடை கழிவுகளை விடவும் வீரியமிக்கது. இந்த மண்புழுக் கழிவில் உயிர்ச்சத்தும், மணிச்சத்தும், சாம்பல் சத்தும் நிறைந்திருக்கிறது.

விளைச்சலையும் விளைபொருட்கள் தரத்தையும் அதிகப்படுத்தி தருவதுதான் இந்த தோழர்களின் வேலை. இவைகளுக்கும் எதிரி நாம் உபயோகிக்கும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தான். இந்த ரசாயனங்கள் நிலத்தையும் நீரையும் விஷமாக்குவதோடு இவற்றையும் கொன்றுவிடுகின்றன. 

நாம் பார்த்த இந்த இரண்டு சிற்றுயிரிகள் கூட விவசாயத்தையும் விளைச்சலை மட்டும்தான் உயர்த்தும். ஆனால், நாம் பார்க்கப் போகும் அடுத்த சிற்றுயிர் இல்லையென்றால் உலகமே அழிந்துவிடும். அந்த சிற்றுயிர் தேனீ.

4.bp.blogspot.com S1K6I2BqybA VgAC881bV3I AAAAAAAAGBM NAnGQU Gv40 s640 bee flower polinating
தேனீ

தேனீக்கள் உலகை வாழ வைக்கும் உன்னதங்கள். இவைகள் இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நிகழ்கால உதாரணமாக திகழ்கிறது ஆஸ்திரேலியா. அங்குள்ள செய்தித்தாள்களில் வெளிவரும் ஒரு விளம்பரம் இந்த சிற்றுயிரின் அவசியத்தை உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. அந்த விளம்பரம் இதுதான்:

‘நன்றாக வளர்ந்திருக்கும் தக்காளிச் செடிகளை உலுக்க ஆட்கள் தேவை. படிப்பு, முன் அனுபவம் தேவையில்லை. நல்ல சம்பளம்..!’

தக்காளிச் செடியை எதற்கு உலுக்க வேண்டும்? மனிதன் இயற்கையை மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு ஆடிய ஆட்டத்தின் விளைவு இது. மரங்களை வெட்டி, இயற்கையை அழித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு மீறி பயன்படுத்தியதன் பலன்.

மனிதன் படுவேகமாக பூச்சி வர்க்கத்தை அழித்து வருகிறான். அழிந்தது கொசு, கரப்பான்பூச்சி என்றால் பரவாயில்லை. ஆனால் அவன் அழித்தது எல்லாம் நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்துதான்.

இப்போது ஆஸ்திரேலியாவுக்கு வருவோம். இங்கு ‘பம்பிள் பீ’ என்று அழைக்கப்படும் ஒருவகை குண்டுத் தேனீ ஏராளமாக இருந்தன. இப்போது இல்லை. அதற்கு காரணம்..?! மனிதனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..!

ஆஸ்திரேலியாவில் மரங்கள், செடிகள் எல்லாம் வளர்ந்தன. ஆனால், அவைகள் எல்லாம் பூப்பதில்லை, காய்ப்பதில்லை. தக்காளி பயிரிட்டவர்களுக்கும் இதே கதிதான். தக்காளி செடி நன்றாகத்தான் வளர்ந்தது. பெயருக்கு பூ பூத்தது, காய் காய்த்தது. அந்தக் காயும் பெரிதாகவில்லை.

இந்தக் குண்டு தேனீக்களை பூச்சிக்கொல்லி மருந்துகள் கொஞ்சமும் சிறுவர்கள் கொஞ்சமும் அழித்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். உண்மை அதுதான்.

1.bp.blogspot.com 33fEv8bLFcs VgE9zC7irGI AAAAAAAAGBc daty8oTTX k s640 Bumblebee low
குண்டுத் தேனீ  – உடல் முழுக்க மகரந்த துகள்கள்

நமது ஊரில் தட்டானை பிடித்து சிறுவர்கள் விளையாடுவார்களே. அதேபோல் ஓணானைப் பார்த்தால் கல்லால் அடித்தே கொல்வார்களே. அப்படிதான் கொஞ்சம் கொழுக்.. மொழுக்.. என்று இருக்கும் இந்த தேனீக்களைப் பார்த்தால் சிறுவர்கள் கையில் பிடித்து விளையாடுவார்கள். தீப்பெட்டிக்குள் அடைத்து வளர்ப்பார்கள். அதிலிருந்து தப்பவும் இது முயற்சி செய்யாது. அதனால் சிறுவர்கள் தாங்கள் விளையாடுவதற்காகவே இந்த குண்டு தேனீக்களை பிடித்து பிடித்து கொன்று விடுவார்கள். சிறியவர்கள் விளையாட்டாக விளையாடியது இன்று வினையாகிவிட்டது.

குண்டுத் தேனீக்கள் கொட்டினால் வலி தாங்க முடியாது என்ற தவறான நம்பிக்கையும் இந்த தேனீக்கள் அழிந்து போக மிக முக்கிய காரணம். இதைத் தவிர விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளும் இந்த வகை சிற்றுயிர்களை கொன்று குவித்திட.. இத்தனை வருடங்கள் விவசாயிகளுக்கு நண்பனாக விளைச்சலை அதிகப்படுத்திய, மனிதனுக்கு தேனைக் கொடுத்த ‘பம்பிள் பீ’ அழிந்துவிட்டன..

குண்டு தேனீக்கள் தேன் சேகரிப்பதோடு நின்றுவிடாமல் அயல் மகரந்த சேர்க்கைக்கும் முக்கிய பங்காற்றின. பூக்கள் காய்களாக உருவாவதற்கு அடிப்படையான விஷயமே மகரந்த சேர்க்கைதான். இந்த அரிய பணியை செய்து வந்த ‘பம்பிள் பீ’ இப்போது இல்லை. அதனால் அந்த வேலையை செய்ய ஆட்களை நியமித்தார்கள் பண்ணை முதலாளிகள்.

இவர்களின் வேலை என்ன தெரியுமா..? நாள் முழுக்க தோட்டங்களை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு தக்காளி செடியாக சென்று அவற்றை மென்மையாக குலுக்க வேண்டும். அப்போது பூக்களில் இருந்து கீழே கொட்டும் மகரந்த துகள்கள் காற்றில் பறந்து அயல் மகரந்த சேர்க்கையை நிகழ்த்தும். அப்போதும் கூட, தேனீக்கள் ஒரு பைசாக் கூட வாங்காமல் இலவசமாக செய்த மகரந்த சேர்க்கைக்கு இணையாக சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்து செய்யும் மகரந்த சேர்க்கையின் மகசூல் இல்லை.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது மகரந்த சேர்கைக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. நமது நாட்டில் அறியாமையால் பல விவசாயிகள் தங்கள் பயிர்களில் தேனீக்கள் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். எப்படிப்பட்ட முரண்பாடு.

உலகில் 80 சதவீத மகரந்த சேர்க்கையை தேனீக்கள் மட்டுமே செய்கின்றன. இதன் மூலம்தான் உயிரினங்களுக்குத் தேவையான பழங்கள், காய்கள், தானியங்கள் எல்லா உணவுகளும் கிடைகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் தேனீக்கள் ஒருவேளை முற்றிலுமாக அழிந்துவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளில் உணவில்லாமல் பட்டினியால் உலகம் அழிந்துவிடும். அதன்பின் எந்தவொரு உயிரினமும் உலகத்தில் இருக்காது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

அதனால் சிற்றுயிர்கள்தான் உலகை அழியாமல் பாதுகாக்கின்றன. அந்த சிற்றுயிர்கள் அழிந்தால் அதை தொடர்ந்து பேருயிர்கள் அழிந்து போகும். ஆகவே, சிற்றுயிர்களை சுற்றுச்சூழல் மாசில் இருந்து காத்து, உலகைக் காப்போம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe