அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறினார்.
இந்திய வானிலை மையம் கூறி உள்ளதாவது:-
தென் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக, வட தமிழக கடலோர பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் என்றும் கனமழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிகத் தீவிர கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் தெற்கு வங்கக் கடல், தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.