திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் தாராபிஷேகம் திங்கள்கிழமை இன்று தொடங்கி, அக்னி நட்சத்திரம் நிறைவு பெறும் மே 28ஆம் தேதி வரை தினமும் நடைபெற உள்ளது.
அக்னி கொளுத்தி எடுக்கும் அக்னி நட்சத்திர காலத்தில், அக்னித் தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தாராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தாராபிஷேகம் இன்று தொடங்கி, அக்னி நட்சத்திரக் காலம் நிறைவு பெறும் மே 28-ஆம் தேதி வரை தினமும் நடைபெறுகிறத். அப்போது உச்சிகால பூஜை தொடங்கி சாயரட்சை பூஜை வரை மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது தாரை தாரையாக… அதாவது சொட்டுச் சொட்டாக விழும்படி செய்வது தாரா அபிஷேகம் எனப் படுகிறது.
இது குறித்து அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியர்கள் கூறிய போது, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் நடைபெறுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிர்விக்கவும் அனைத்து ஜீவராசிகளும் கோடையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப் படவும் போதிய மழை பெய்ய வேண்டியும் தாராபிஷேகம் நடைபெறும்.
தாராபிஷேக காலங்களில் நற்காரியங்களுக்கு தோஷம் எதுவும் கிடையாது. தற்போதைய சூழலில், தாராபிஷேக காலத்தில் அண்ணாமலையார் கோவில் நடை திறப்பு நேரத்திலும், 6 கால பூஜைகளிலும் மாற்றம் எதுவும் இல்லை என்றனர்.