இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திர வெய்யில்!

இந்தியா சற்றுமுன் தமிழகம்
summer
summer

கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் திங்கள் கிழமை இன்று தொடங்குகிறது! அக்னி நட்சத்திரக் காலம் வரும் மே மாதம் 28ம் தேதி வரை தொடரும். இதை அடுத்து வழக்கம் போல் இந்த மாதம் வெயில் சுட்டெரிக்கும். முற்பகல் 11 மணி முதல் பகல் 4 மணி வரை அனல் காற்று வீசுவதுடன், கடும் வெப்பம் நிலவும். இந்த நேரத்தில் வெளியில் அலைவதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திர காலத்தில், தென் மாநிலங்களில் கடும் வெப்பம் இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும். ‘அக்னி நட்சத்திர காலத்தில் மற்ற நாட்களை விட வெயில் அதிகமாக இருக்கும்! ஜோதிட ரீதியில் இதனை குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு சில புராணக் கதைகளும் உண்டு. அக்னியின் கோரப் பசிக்கு இந்தக் காலத்தில் அர்ஜுனன் வனத்தை எரித்தான் என்று பாகவத புராணத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. எனவே இது காலங்காலமாக இயற்கையின் அடிப்படையில் வருவதுதான்.

heat waves in train
file pic

இந்தக் கோடைக்காலம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். இருப்பினும் வறண்ட வானிலையே நிலவும். கடலோரம் அல்லாத தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யக் கூடும். சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்! எனவே முற்பகல் 11 மணி முதல், பகல் 3:30 வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தமிழகத்தில் கோடைக் காலம். ஜூன் மாதத் தொடக்கத்தில் தான் தென்மேற்குப் பருவமழை தலை காட்டும். கேரளத்தில் தொடங்கும் இந்த மழை, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் என தென்மேற்குப் பருவமழையாக மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் வெளுத்துக் கட்டும். தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் வரை இந்த மழை பரவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.