*அம்பிகையின் மகிமை – 7
அம்பாளைத் தியானம் செய்யும்போது எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். அம்பாள் தியானத்திலே அமர்ந்து கொண்டிருக்கிறாள்.
யாருக்குத் திருப்தியிருக்கிறதோ அவர்கள்தான் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அம்பாளும் சிரித்துக் கொண்டிருக்கின்றாள். யாருக்குத் திருப்தியிருக்கும்? யாருக்குத் தாங்கள் விரும்பியதெல்லாம் இருக்கின்றதோ, அவர்களுக்குத் திருப்தி இருக்கும்.
அம்பாளோ எப்போதும் திருப்தியுடனிருக்கின்றாள். அதனால் எப்போதும் சிரித்துகொண்டிருக்கிறாள். ஒருவன் செல்வத்தை விரும்புகின்றான். அவன் அம்பாளை,
“ ப்ரஹஸிதமுகீம் ச பவதீம் “
என்ற வகையில் தியானம் செய்ய வேண்டும்.
” த்யாயந்தோ யே த ஏவ பூதநதா: “
என்று கூறப்பட்ட வகையில் எவர்கள் தியானம் செய்கின்றனரோ அவர்கள் பூமியையும், செல்வத்தையும் தாங்கள் மட்டும் பெறுவதில்லை; மற்றவர்களுக்கும் பூமியையும் செல்வத்தையும் தானம் செய்யும் சாமர்த்தியமும் அவர்களுக்கு ஏற்படுகின்றது.
இவ்வாறு அம்பாளை ஸ்வர்ணருபமாய் (தங்கம் போன்று ஒளிர்பவளாய்) தியானம் செய்தால் செல்வம் கிடைக்கும்.