spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்காளிதேவிக்கு கட்டளையிட்ட பிராந்தர்

காளிதேவிக்கு கட்டளையிட்ட பிராந்தர்

 

அவரை சித்தர் என்றே அந்த ஊர் மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அவருக்கு அவரது தாய், தந்தையர் நாராயணன் என்று பெயரிட்டிருந்தார்கள். ஆனால் யாரும் அந்த பெயர் கொண்டு அவரை அழைக்கவில்லை. அவரது செயல்கள் எல்லாம் புரியாத புதிராக பைத்தியகாரத்தனமாக தெரிந்ததால், அவரை எல்லோரும் பிராந்தர் என்றே அழைத்தார்கள். ‘பிராந்தன்’ என்றால் கிறுக்கன் என்ற பொருள் சேர நாட்டில் உண்டு.

    பிராந்தன் என்று மக்கள் அவரை அழைக்க நிறைய காரணங்கள் இருந்தன. அவர் யாருடனும் பேசமாட்டார். எப்போதும் தனியாக இருப்பார். திடீரென்று சிரிப்பார். உளறலாக  பேசுவார். காரணம் இல்லாமல் அழுவார். திடுதிடுவென்று ஓடுவார். யாரையும் பொருட்படுத்தாமல் ஆட்டம் ஆடுவார். சட்டென்று சலனம் எதுவும் இல்லாமல் சிலை போல் நிற்பார். இந்த விசித்திர நடவடிக்கைகள் எல்லாம் அவருக்கு பைத்தியம் என்ற பட்டத்தை தேடித்தந்தன.

    ஆனால், மனதுக்குள் அவர் ஒரு சித்தயோகி என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. தினமும் பகல்பொழுது முடிந்து இரவு தொடங்கிவிட்டால் ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சை எடுப்பார். கொஞ்சம் அரிசி கிடைத்ததும், தனக்கு அது போதுமானதாக இருந்தால், உடனே ஊருக்கு மையத்தில் இருக்கும் பொதுக் குளத்துக்கு நடையை கட்டுவார்.

    அந்தக் குளத்துக்கு அருகே வசிக்க வீடின்றி தவிக்கும் அடித்தட்டு மக்கள் ஏராளமான பேர் சமைத்துக் கொண்டிருப்பார்கள். தான் பிச்சையெடுத்த அரிசியை பிராந்தரும் அடுப்பு மூட்டி சமைப்பார். சாதம் தயாரானதும் குளத்துக்கு சென்று ஆனந்தமாக குளிப்பார். திருநீறு கீற்றுகளை நெற்றியிலும் உடலிலும் இட்டுக்கொள்வார். மனம் வலிமை பெற தியானத்தில் அமர்வார். தியானம் முடிந்ததும், தான் சமைத்த உணவை அமிர்தமாக அருந்திவிட்டு அங்கேயே படுத்துக்கொள்வார்.

    பிராந்தர் இருந்த ஊரின் எல்லையில் ஒரு குன்று இருந்தது. தினமும் அந்த குன்றுக்கு செல்வார். குன்றின் அடிவாரத்தில் உருண்டையான கனமான கல்லை உருட்டியபடியே மலை உச்சியை அடைவார். மிகவும் கடினமான செயலான மலை மீது கல்லை கொண்டு போகும் வேலையை தினமும் செய்வார். களைப்பு ஏற்பட்டதும் சிறிது நேரம் ஓவ்வெடுத்துக்கொள்வார். பின்னர் மீண்டும் கல்லை மேலே உருட்டிக் கொண்டே மலை உச்சியை சென்று சேருவார்.

    மலை உச்சிக்கு கல்லை கொண்டு சென்றதும் அந்தக் கல் கீழே உருண்டு விடாதபடி கல்லின் அடியில் நான்கு பக்கமும் சிறு சிறு கற்களை வைத்து பாதுகாப்பாக நிறுத்தி வைப்பார். கல் நகராது, உருண்டு விடாது என்று உறுதி செய்து கொண்டபின் அதன் மீது ஏறி பத்மாசனக் கோலத்தில் அமர்வார். தியானம் செய்வார்.

    மலைக்கு கீழே உள்ள மக்கள் பிராந்தர் செய்யும் செயலை வேடிக்கையாக பார்ப்பார்கள். ஏன் இப்படி தினமும் செய்கிறார்? என்று புரியாமல் தவிப்பார்கள்.

    எந்த ஒரு பலனும் இல்லாத போது எதற்காக இத்தனை கஷ்டப்பட்டு கல்லை மேலே கொண்டு செல்கிறார்? என்று விடை கிடைக்காமல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பிராந்தர் அந்தக் கல்லை மலை மேல் இருந்து கீழே உருட்டி விடுவார். அதோடு விட்டு விடாமல் வேகமாக உருண்டு வரும் கல்லோடு சேர்ந்தே ஓடி வருவார். அப்போது கைகளை தட்டிக்கொண்டு ஆவேசமாக சிரித்தபடி கீழே இறங்குவார்.

    வேகமாக வரும் கல் நம் மீது மோதி விடுமோ என்ற பயத்தில் மக்கள் சிதறி ஓடுவார்கள். அடிவாரம் கல் வந்து சேர்ந்ததுமே பிராந்தரும் வந்துவிடுவார்.

    சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வார். அதற்குள் மாலை நேரம் வந்துவிடும். வழக்கம் போல் பிச்சை எடுப்பார். அந்த அரிசியில் சமைத்து, குளித்தபின் உணவு உண்டு உறக்கம் கொள்வார்.

    மறுநாள் விடிந்ததும் மீண்டும் கல்லை மேலே உருட்டி உருட்டிச் செல்வார். பின் மேலே இருந்து கீழே உருட்டி விடுவார். அதனுடனே ஓடிவருவார். தினமும் நிகழும் இந்த நிகழ்வுக்கு என்ன காரணம் என்று யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

    இப்படி போய்கொண்டிருந்த போது ஒரு நாள் மாலை பிச்சை எடுத்த அரிசியோடு பிராந்தர் குளத்துக்கரைக்குச் சென்றார். அரிசியை சமைக்கலாம் என்றால் அங்கே யாரும் சமைக்கவில்லை. அடுப்பும் இல்லை.

    யோசித்துக் கொண்டே நின்றார். எப்படியும் சமைத்தாக வேண்டுமே? என்ற எண்ணத்தில் பிராந்தர் நேராக மயானம் சென்றார். மயானத்தில் கற்கள் இருந்தன. அந்த கற்களை அடுப்பு போல் மூன்று பக்கமும் வைத்து சிதறிக் கிடந்த காய்ந்த குச்சிகளை ஒன்று திரட்டி மயானத்தில் மனித உடலை எரித்துக் கொண்டிருக்கும் நெருப்பை எடுத்து சுள்ளிகளில் வைத்து தீப்பற்றச் செய்தார். அதில் உணவை சமைத்தார். சமைத்த உணவை அருந்திவிட்டு, மயானத்திலே படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார்.

    இருள்மண்டிக் கிடந்த அந்த மயானத்தில் நள்ளிரவு நேரத்தில் காளிதேவி வந்தாள். மயானம் முழுவதும் உலாவந்த காளி அங்கு நித்திரை கொண்டிருந்த பிராந்தரை பார்த்தாள். தன்னை கவனிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த மானிடனை விழித்தெழ செய்ய வேண்டும் என்று நினைத்த காளிதேவி, தனது கால் சலங்கை சத்தம் கேட்கச் செய்வதற்காக பூமியே அதிரும்படி ஓங்கி மிதித்து ஒலி எழுப்பினாள்.

    சலங்கை சத்தம் ‘கணீர், கணீர்’ என்று கேட்டு அந்தப் பகுதியின் நிசப்தத்தை குலைத்தது. ஆனாலும் இந்த சத்தம் எதையும் பிராந்தர் கண்டு கொள்ளவில்லை. பிராந்தர் தொடர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

    தான் இத்தனை செய்தும் கண்டுகொள்ளாமல் தூங்குபவனை எப்படியாவது எழுப்பியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காளிதேவி பூமியே இரண்டாகப் பிளக்கும் அளவுக்கு பூமியை உதைத்தாள்.

    அந்த பேரொலியின் ஓசை கேட்டு லேசாக கண் விழித்து பிராந்தர், படுத்த நிலையிலே, “ஏனம்மா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறாய்?, காது செவிடாகும்படி அதிர்ந்து நடக்கிறாய்” என்று பிராந்தர் கேட்டதும், காளிதேவிக்கு தூக்கிவாரிப் போட்டது.

    தனது கொடூரமான உருவத்தைக் கண்டு கூட இந்த பூமியில் பயப்படாத ஒரு மானிடன் இருக்கிறானா என்று பிரம்மித்தவளாய் “ஏய்! யார் நீ?” என்று அதட்டிக்கேட்டாள்.

    “நானா….! என்னையா யாரென்று கேட்கிறாய்? ‘நான்’ யார்…?! என்பதை தெரிந்து கொள்ளத்தானே இன்று வரை முயல்கிறேன். எனக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனக்கே விடை தெரியாத போது நான் எப்படி உனக்கு சொல்வேன். அப்படிச் சொன்னாலும் உனக்குப் புரியுமா?”

    “நான் காளிதேவி என்பதாவது உனக்குத் தெரியுமா?”

 “அது தெரியுமே! கோபமும் ஆவேசமும் கொண்ட இந்த முகமும், கனல் பறக்கும் இந்த கண்களும், கறுப்பான நிறமும், கோரமான பற்களும் படபடவென்று கொட்டும் வார்த்தைகளும் நீ காளிதேவிதான் என்பதை காட்டுகிறது. இதை நீ வாய்திறந்து வேறு சொல்ல வேண்டுமா…?” என்று கேட்டார்.

    எந்தவொரு சலனமும் இல்லாமல் இப்படி தெளிவாக பதில் சொல்லும் இந்த மானிடன் சாதாரண மானிடனல்ல. இவன் ஒரு சித்தனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் காளிதேவி.

    அஞ்சாமையும் தெளிவும் இப்பதைக் கண்டு பரவசப்பட்ட காளிதேவி தனது கொடூரமான உருவத்தை மறைத்து அழகு திருமேனியோடு தேவதைப்போல் தோன்றினாள்.

1.bp.blogspot.com au obWL8SuI VL1AmZojAnI AAAAAAAAC0U hxkRSUnl1Xg s1600 IMG 20150119 074519 1

    “சித்தரே! எனது தரிசனம் பெற்றவர்கள் நிறையப் பலனைப் பெறுவார்கள். நீங்களும் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்” என்று காளிதேவி கூறினாள்.

    “அம்மா தேவியே! என்னுடைய வலது காலில் வெகு நாட்களாக யானைக்கால் நோய் இருந்து வாட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நோயை வீக்கத்தை எனது இடது காலுக்கு மாற்றித்தர முடியுமா?” என்று கேட்டார் பிரந்தார்.

    “என்ன சித்த புருஷரே! எல்லோரும் இருக்கும் நோய் தன்னைவிட்டு நீங்க வேண்டும் என்றுதான் இறைவனிடம் வரம் கேட்பார்கள். நீங்கள் என்னவென்றால் வலது காலில் உள்ள நோயை இடது காலுக்கு மாற்றச் சொல்லி கேட்கிறீர்களே! வேண்டுமானால் சொல்லுங்கள் உங்கள் இரண்டு காலையும் ஆரோக்கியமான காலாக சரிசெய்து விடுகிறேன்” என்றாள் காளிதேவி.

    “தேவி இந்த நோய் எப்படி வந்தது என்று உனக்கு தெரியாதா?”

    “தெரியும். உத்தமான உன்னதமான ஒரு ஞானியை நீ போன பிறவியில் உன் வலது காலால் உதைத்துவிட்டாய். அதனால்தான் இந்தப்பிறவியில் உனக்கு யானைக்கால் வந்திருக்கிறது” என்றாள்.

    “தாயே! பிறவி என்பதே பாவத்தை அனுபவிக்கத்தானே. அதனால்தான் நான் போன பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்காவிட்டால், இதற்காக நான் இன்னமொரு பிறவி எடுத்தாக வேண்டும். அந்த பாவத்தை உன்னால் அழித்துவிட முடியும் என்றால், என் இரு கால்களையும் சரிசெய்துவிடு” என்று பிராந்தர் காளிதேவியிடம் கேட்டார்.

    “அது என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது? மகனே…! செய்த பாவத்துக்கு பலனை அனுபவிப்பதுதான் பிறவியின் பயன். அதனால் நீ வேறு ஏதேனும் வரம் கேள்.”

    “தேவியே, தூணைச் சிறு துரும்பாகவும், துரும்பை பெரும் தூணாகவும் மாற்ற என்னால் முடியும். ஆனால் நான் எனது பாவவினையை அனுபவிக்கவே விரும்புகிறேன். ஆனாலும் பிறவியிலே உயர்ந்த பிறவியாகிய மனிதப் பிறவியைப் பெற்ற மனிதர்கள் அனைவரும் நினைவாலும் நடத்தையாலும் விலங்கைவிட கீழான நிலையிலேயே இருக்கிறார்கள். அதை மாற்ற முடியவில்லை.”

    “பிராந்தரே, அவர்களை மாற்ற வேண்டும். மேம்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அவ்வப்போது உங்களைப் போன்ற ஞானிகள் படைக்கப்படுகிறார்கள். நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    “ஏறுவது மிகமிகக் கடினம். இறங்குவது வெகு சுலபம். இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காககத்தான் தினமும் பெரிய கல்லை சிரமப்பட்டு மலைமேல் ஏற்றிக் காட்டுகிறேன். பின்பு அதை கீழே உருட்டி விடுகிறேன். கீழே வரும் கல்லைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடினார்களே தவிர, யாரும் ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்பதில்லை. அவரவர் விதிப்படி அவரவர்கள் மதியும் இயங்குகிறது. புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவர்கள் அறிவு நல்வழியில் செல்லும். இல்லையென்றால் மோசமான பாதையை பின் தொடர்ந்து செல்லும். சரி தாயே! நீ இப்படி கோலத்தில் இருப்பது பார்ப்பவர்களை திகைப்படையச் செய்யும். போய் ஒரு ஓரமாக மறைவாக நீ சென்று நடமாடு” என்று பிராந்தர் கூற காளிதேவியும் மறைந்து விடுகிறாள்.

 பிராந்தர் பல்வேறு இடங்களுக்கும் காடுமலையெல்லாம் சுற்றித்திரிந்து தவயோகம் செய்து சமாதி நிலையடைந்தார். இவரின் செயல்கள் யாருக்கும் புரியாத காரணத்தாலே இவரை பிராந்தர் என்றே சித்தர் இலக்கியமும் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe