spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எழுத்து ஒரு தவம் - மனுஷ்ய புத்திரன்

எழுத்து ஒரு தவம் – மனுஷ்ய புத்திரன்

 

 
பதினாறு வயதில் முதல் கவிதை தொகுப்பு வெளியீடு; அதன் பின் தேசிய அளவில் இளம் படைப்பளிகளுக்கான ‘சன்ஸ்கிருதி சம்மான் விருது‘; ஏழு கவிதை தொகுப்புகள்; எட்டு ஆண்டுகளாக ‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியர்; ‘உன்னை போல் ஒருவன்’ படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகம்; தமிழகத்தின் செல்வாக்கு மிக்க 10 பேர்களில் ஒருவராக ‘இந்திய டுடே’ தேர்வு; இப்படி மனுஷ்ய புத்திரனை பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம், அரசியல் என பன்முக திறனை வெளிப்படுத்தும் இந்த படைப்பாளிக்குள்ளும் ஒரு முதலாளி ஒளிந்திருக்கிறார். அந்த முதலாளி பதிப்பக உரிமையாளர், மாத இதழ் வெளியீட்டாளர் என்ற இரட்டை குதிரையில் வெற்றியுடன் பயணிக்கிறார். ‘பயணம் கடினமானதுதான். ஆனால், தொடர்ந்து பயணிப்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் மறைந்திருக்கிறது’ என்று கூறும் மனுஷ்ய புத்திரனை ‘தினவணிகம்’நாளிதழுக்காக சந்தித்தேன்.

அரசியல், இலக்கியம் இல்லாமல் முழுக்க முழுக்க தொழில் சமந்தமாக அவருடன் உரையாடியதில் இருந்து சில பகுதிகள்…

 

3.bp.blogspot.com
மனுஷ்யபுத்திரன்

 

 “திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிதான் எனது சொந்த ஊர். படித்தது எம்.ஏ., தொடர்பியல். சிறு வயது முதலே பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் சிந்தனையால் ஈர்க்கப்பட்டேன்.

அதனாலே ஜாதி மதத்துக்கு அப்பால் மனித குளத்தின் மகன் என்ற அர்த்தத்தில் ‘மனுஷ்ய புத்திரன்’ என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டேன். இந்த பெயரைக் கொண்டே‘மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்‘ என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பை 16 வயதில் வெளியிட்டேன்.

2002-ம் ஆண்டு உயிர்மை பதிப்பகம் தொடங்கினேன். முதன் முதலாக சுஜாதாவின் 6 புத்தகங்களை வெளியிட்டேன். 2003-ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் ‘உயிர்மை’ பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் ‘திரைகதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகம் கண்காட்சி முடிவதற்குள்ளாகவே விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது.

இதுவரை 800-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எமது பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சுஜாதா, சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.

உயிர்மை…

2003-ம் ஆண்டில் ‘உயிர்மை’ மாத இதழ் துவக்கம் பெற்றது. கலை, இலக்கியம், அரசியல், சினிமா, அறிவியல், சுற்றுச்சுழல் போன்ற தலைப்புகளில் ஏராளமான படைப்புகளை இந்த இதழ் தந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழின் முதன்மையான இடைநிலை இதழ் என்ற இடத்தை பெற்றிருக்கிறது.

‘காலச்சுவடு’ இதழில் இருந்து வெளிவந்த போது எழுத்தாளர் சுஜாதா இந்த விதையை என்னுள் விதைத்தார். எழுத்து, படிப்பு இரண்டை மட்டுமே என்னுடைய வாழ்க்கை முறையாக கொண்ட நான் மிகுந்த மன வலிமையுடனே இந்த தொழிலை தேர்வு செய்தேன்.

4.bp.blogspot.com f284QQ HlL8 VLXuICGwAfI AAAAAAAACys De4G7EScpLw s1600 uyirmai manusyaputhiran magazines tamil journals cover arr naan kadavul 4

மிகவும் சவால் நிறைந்த காலக்கட்டம். மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்டு, எங்களுடைய கடும் உழைப்பையும், எழுத்தாளர்களின் அன்பையும் ஆதாரமாகக் கொண்டே இந்த பதிப்பகம் உருவானது.

என் வாழ்வில் மறக்கமுடியாத நபர் சுஜாதாதான். நான் எழுதிய ‘கால்களின் ஆல்பம்’ என்ற கவிதையை பத்திரிகையில் படித்த அவர் பல இதழ்களில் அதைப்பற்றி எழுதினார். கூட்டங்களில் பேசினார். அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன்.

அப்போதுதான் எனக்கும் அவருக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் என்னுடைய கவிதைகளைப் பற்றி தொடர்ந்து எழுதினார்.

என்னைப் பெரிதும் ஈர்த்த ஒரு மாபெரும் எழுத்தாளரின் அன்பும் அக்கறையும் என்னை தொடர்ந்து எழுத தூண்டியது.

2000-த்தில் சென்னை வந்த போது அவருடைய நட்பும் நெருக்கமும் மிகவும் அதிகரித்தது. என் வாழ்வில் அதிக துயரமும் நெருக்கடியும் கொண்ட கள்ளக் கட்டத்தில் எல்லாம் அரவணைத்து வழிநடத்தும் ஆசானாக இருந்திருக்கிறார்.

பதிப்பக தொழில்…

 தமிழ்நாட்டில் புத்தக தொழில் சம்பதமாக நிறைய மாயைகளும் சில உண்மைகளும் நிலவுகின்றன. கடந்த 10 வருடங்களில் ஒரு தொழில்துறை என்று சொல்லக்கூடிய விதத்தில் பதிப்பு தொழில் கவனம் பெற்றிருக்கிறது. அது ஒரு குடிசைத் தொழிலாக மட்டுமே தமிழகத்தில் கருதப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளாக கார்பரேட் தன்மை கொண்ட பெரிய நிறுவனங்களும், இடைநிலை நிறுவனங்களும் பெரிய அளவிலான மூலதனத்தை பதிப்பு துறைக்கு கொண்டு வருவதைப் பார்க்கிறோம்.

இதன் காரணமாக ஏராளமான நூல்கள் தொடர்ந்து தமிழில் பதிப்பிக்கப் படுகின்றன. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் முன் எப்போதையும் விட பரவலாக பதிப்பிக்கப் படுவதை காண்கிறோம்.

ஆண்டிற்கு சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ் புத்தகங்கள் விற்பனை ஆகிறது. 80 கோடி பணப்புழக்கம் என்பதை இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட துறையில் பெரிய வளர்ச்சியாக கருத முடியாது. அதே வேளையில் இதற்கு முந்தைய சூழலோடு ஒப்பிட்டால் இது ஒரு வளர்ச்சி என்றே கருத வேண்டும்.

புத்தக விற்பனை…

புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆவதற்கு குறிப்பிட்ட சில காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, கல்வி வளர்ச்சி காரணமாக படித்தவர்கள், வாசகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இரண்டாவதாக, புத்தகங்களை உருவாக்குவது; கணினி, அச்சுத் தொழில் நுட்பம், மிகவும் எளிதாக்கியிருக்கிறது.

மூன்றாவதாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள் பொது மக்களின் ஆர்வத்தை புத்தகம் பக்கம் திருப்பியிருக்கிறது.

நான்கவதாக, இணைய தளத்தின் வளர்ச்சி காரணமாக இணையத்தில் எழுத்தாளர்கள், படிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் ஒரு பகுதி புத்தகம் வாங்கக்கூடிய வாசகர்களாக மாறுகிறார்கள்.

ஐந்தாவதாக, சில தீவிர எழுத்தாளர்கள் வெகு ஜன இதழ்களிலும் எழுதுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். அந்த பிரபலத்தின் மூலம் அவர்கள் எழுதும் புத்தகங்கள் விற்பனை வாய்ப்பை பெறுகின்றன.

இந்த சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து புத்தகங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்பதில் சந்தேகமே இல்லை.

2.bp.blogspot.com kvrr6VweHdE VLXuBHjJibI AAAAAAAACyc 4vm26uU55Aw s1600 manushya%2Bputhiran%2B9

அரசின் உதவி…

தமிழக அரசும் பொது நூலகத் துறைக்கு நூல்கள் வாங்குவதற்கான நிதியை கணிசமாக அதிகரிப்பதுடன் ஒரு நூலின் 1000 பிரதிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. ஆண்டிற்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவில் அரசு பொது நூலகத்திற்கு நூல்களை வாங்கி வருகிறது.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப்புற நூலகங்களுக்காக ஒரு நூல் 5000 பிரதிகள் வாங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் சேர்ந்து தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

பிரச்சனைகள்…

ஒரு புதிய வாய்ப்பு பதிப்பு துறையில் ஏற்பட்டுள்ளதைக் கண்டு, அந்த துறையோடு தொடர்பற்ற பலர் இதற்கு வரும் போக்கு காணப்படுகிறது.

முதலாவதாக, புத்தகங்கள் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த ஒரு பொருள் என்பதால் அதனோடு தொடர்பற்ற நபர்கள் இதற்குள் வரும் போது தரமற்ற நூல்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் போக்கு நிலவுகிறது. வாசகர்களுக்கு தேவையான நூல்களை உருவாக்குவதில்  உடனடி விற்பனை வாய்ப்பை கருத்தில் கொண்ட மேலோட்டமான பிழையான நூல்கள் அச்சிடப்படுவதைக் காண்கிறோம்.

இரண்டாவதாக, நம்முடைய பத்திரிகைகள் சில வெகுஜன ஊடகங்கள் நூல்களுக்கு எந்த முக்கியத்துவம் தருவதில்லை. இதனால், பல முக்கியமான நூல்கள் வாசகர்கள் கவனத்தை பெறாமலேயே போய்விடுகின்றன.

போதிய விற்பனை மையங்கள் இல்லாமை பெரிய பிரச்சனை, தமிழகத்தில் சுமார் 500 புத்தக கடைகள் உள்ளன. அதில் 90 சதவித கடைகள் மிகச் சிறிய இடவசதி கொண்டது. அவற்றால் தமிழில் வெளிவரும் சில புத்தகங்களை மட்டுமே காட்சிக்கு வைக்க முடியும். அதிலும் வர்த்தக ரீதியிலான புத்தகங்களே முன்னிலைப் படுத்தப் படுகின்றன. நல்ல நூல்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.

புதிய முயற்சி…

இந்த கடைகளால் முழுமையான அளவில் விநியோகத்தை மேற்கொள்ளக் கூடிய அடிப்படை கட்டமைப்போ, ஆள் பலமோ தமிழகத்தில் எந்த பதிப்பகங்களும் இல்லை. ஒவ்வொரு பதிப்பகமும் ஏதேனும் சில கடைகள் வழியாகவே தங்கள் புத்தகங்களை விற்கின்றன. மற்றபடி பெரும்பாலும் பொது நூலகங்களை நம்பி இருக்கின்றன. இது மிகவும் சிக்கலான சூழல்.

ஒருபுறம் நூல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னொருபுறம் அவற்றை விநியோகிக்க எந்த கட்டமைப்பும் இல்லை. இந்த சூழலை எதிர் கொள்வதற்காக இப்போது நாங்கள் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழில் நல்ல நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஒரு புத்தக விநியோக ஏஜெண்டுகளைக் கொண்டு அவர்கள் மூலமாக தமிழ்நாட்டில்  உள்ள சில்லறை விற்பனையாளர்களை ஒருங்கிணைத்து நூல்களை பரவலாக கொண்டு செல்லுதல், இதற்கான செலவுகளை கூட்டாக பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் திட்டமிட்டுள்ளோம்.

எங்களின் நோக்கம் புத்தக விநியோகத்தில் மட்டுமல்ல, இந்த தொழிலுக்கு தேவையான தகுதி வாய்ந்த பணியாளர்களை பயிற்சியளித்து உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறோம். பதிப்புத் தொழில் மின்னச்சு செய்தல், மெய்ப்பு நோக்குதல்(ப்ரூப் ரீடிங்) மற்றும் விநியோகம் சார்ந்த துறைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதைப் போக்க நாங்கள் விரிவான பயிற்சிகளை அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.

ஒரு புத்தகத்தை பதிப்பிக்க உற்பத்தி செலவு; புத்தக விலையில் மூன்றில் ஒரு பகுதி உற்பத்தி செலவு. இன்னொரு பகுதி சில்லறை விற்பனை கழிவு தொகையாகவும், மீதமிருக்கும் பகுதி எழுத்தாளரின் காப்புரிமை தொகை, பதிப்பாளரின் லாபமாகவும் பிரித்து கொள்ளலாம். பொதுவாக பதிப்பகங்கள் எழுத்தாளருக்கு 10 சதவித தொகை காப்புரிமையாக கொடுக்கின்றன. உயிர்மை பதிப்பகம் 12.5 சதவிகித தொகையை கொடுக்கிறது.

 

பதிப்பகத்துக்கு புதியவர்கள்…

புதிதாக பதிப்பகத் துறைக்கு வருபவர்கள் ரூ.3 லட்சம் இருந்தால் தொடங்கிவிடலாம். கடந்த சில ஆண்டுகளில் பெரிய மூலதனத்தில் உள்ளே வந்தவர்கள்  காணமல் போய்விட்டார்கள்.

அதற்கு காரணம் இந்த தொழிலின் இயல்பு பற்றிய அறிவின்மையே ஆகும். தொடர்ச்சியாக போரடக்கூடியவர்களும் உடனடியாக ஆதாயத்தை எதிர் பார்க்காதவர்கள் மட்டுமே இதில் தொடர்ந்து இருக்க முடியும்.

நவீன வாசிப்பு…

நவீன வாசிப்பு மீது எந்த ஈர்ப்பும் சிந்தனையும் இல்லாத ஒரு நிலையை உருவாக்கிவிட்டோம். தமிழின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு எதிரான ஒரு கல்வியை கொடுத்துள்ளோம்.

வெகுஜன பத்திரிகைகளுக்கு சினிமா, அரசியல் தவிர வேறு எந்த அக்கறையும் இல்லை. வாசகர்களின் மூளைக்குள் இந்த இரண்டையும் திரும்ப திரும்ப நிரப்புகிறார்கள். பண்பாடு, வாழ்வியல் சார்ந்த எந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது.

நவீன வாசிப்புக்கு எதிராக பெற்றோர் மனோபாவமும் உள்ளது. குழந்தைகள் பாட புத்தகத்தை தவிர வேறு எதையும் படிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.

2.bp.blogspot.com Tc9QMICty80 VLXuKBXsrsI AAAAAAAACy0 ue6u1Tei8qM s1600 7 painting of ilayarajatamil artist 1374897548 b

குழந்தைகளை மணி மேக்கிங் மெஷினாக நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கு கற்பனைத் திறனை வளர்க்கக்கூடிய எந்த நூலையும் அறிமுகப்படுத்துவதில்லை. இவையெல்லாம் சேர்ந்து மேலோட்டமான வாசகர்கள் தான் தமிழில் அதிகம் உருவாவதை பார்க்கிறோம். ஆழமான விஷயங்களை படிப்பதற்க்கான மொழியறிவு கொண்ட வாசகர்கள் உருவாகவே இல்லை.

எழுத்து தொழில்…

இளைஞர்களின் எழுத்து ஒரு தொழிலாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், நிலைமை அப்படியில்லை. 1960-களில் ஒரு புத்தகத்தின் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டன என்றால், இப்போதும் அதே 1000 பிரதிகள் தான் அச்சிடப்படுகின்றன. அறிவியல், பொருளாதாரம், வர்த்தகம் என எத்தனையோ மடங்கு வளர்ந்துள்ளது. ஆனால், புத்தகம் மட்டும் 1000 பிரதிகளைத் தாண்டவே இல்லை.

வெளிநாடுகளில் ஒரு சில புத்தகங்கள் எழுதிய ஆசிரியர்கள் கூட அதன்   வருமானத்தை வைத்துக் கொண்டு வாழமுடிகிறது. எழுத்தை மட்டுமே தொழிலாக கொண்டு வாழ்கிறார்கள்.

தமிழில் பிரபல எழுத்தாளர்கள் கூட முழு நேர தொழிலாக மேற்கொள்ள முடியாத அவலமே நிகழ்கிறது. தமிழில் முழு நேர நகைசுவை நடிகர்கள் இருக்கிறார்கள். முழு நேர எழுத்தாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

எழுத்து ஒரு தவம். எழுத்து ஜீவிதமாக இருந்தால் மட்டுமே எழுத்துக்கும் ஜீவிதம் இருக்கும். நல்ல எழுத்துக்கு நிறைய படிக்க வேண்டும். பல்வேறு இடங்களுக்கு சென்று தகவல் சேகரிக்க வேண்டும்.
தமிழில் சிறந்த படைப்புகள் வராததற்கு அதுவும் ஒரு காரணம். எழுத்தை முழுநேர தொழிலாக கொண்டால் மட்டுமே ஜீவிதமான படைப்புகள் உருவாகும்.”

மனுஷ்ய புத்திரனிடம் இருந்து எழும் உன்னத படைபாளியின் ஆதங்கமும், பதிப்பு தொழிலின் சாதக பதாக அம்சங்களையும் தெளிவுபட எடுத்துரைத்த அவரிடம் நன்றி கூறி விடைபெற்றேன்.

அதிரடி அரசியல் பேசும் மனுஷ்ய புத்திரனிடமிருந்து தொழில் குறித்து பேட்டி எடுத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe