
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வது, பம்பையில் துணிகளை களைவது ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இருந்து சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இனி எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும், அதேபோல பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளை களைந்து பம்பை நதியில் விடக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கேரள மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு எவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டுவருவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால், நவ.16-ம் தேதி முதல் தொடங்கவுள்ள மண்டல பூஜை நடைதிறப்பு காலத்தின்போது ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என கேரள மாநில அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கும், பம்பையில் துணிகளை களைவதற்கும் தடை உள்ளது என்பது குறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக, அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர்கள், ஐயப்ப குருசாமிகளை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.