
44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் – நான்காம் நாள் – 01.08.2022
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று இந்திய அணிகள் வெற்றி, தோல்வி, ட்ரா என கலந்து பெற்றன. மூன்றாவது சுற்றில் இத்தாலி அணி நார்வே அணியை 3-1 புள்ளிக் கணக்கில் வென்றது ஒலிம்பியாடின் மறக்கமுடியாத தருணம். இந்தியா B அணி தற்போது வரை முன்னணியில் உள்ளது.
இன்று எஸ்தோனியாவைச் சேர்ந்த வீரர் மீலிஸ் கனெப் என்பவர் ஆட்டத்தின்போது மயக்கமடைந்தார். அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெண்கள் பிரிவில் மங்கோலியா அமெரிக்காவை நேற்று வீழ்த்தியது. இந்திய A அணியும் பிரான்ஸ் அணியும் இன்று நான்காவது சுற்றில் சந்தித்தன.
ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன், எஸ்.ஏல் நாராயணன் நால்வரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இரண்டு அணியும் 2-2 என்ற புள்ளிகள் பெற்று, ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிந்தது.
இந்திய B அணியும் இத்தாலி அணியும் மோதின. குஹேஷ், சரின் நிஹில் இருவரும் தங்களது ஆட்டங்களை வென்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பிரக்ஞானந்தாவும் சாத்வானி ரௌனக்கும் தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இந்திய B அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இந்தியா C அணியும் ஸ்பெயின் அணியும் சந்தித்தன. கங்குலி, சேதுராமன், கார்த்திகேயன் முரளி மூவரும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். ஆனால் அபிஜித் குப்தா தோல்வியடைந்தார். இதனால் இந்திய C அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.
பெண்கள் பிரிவில் இந்தியா A அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, வைஷாலி ஆகியோர் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். நாலாவது ஆட்டக்காரரான தனியா சச்சதேவ் ஹங்கேரிய வீராங்கனையை வென்று ஒரு புள்ளி பெற்றார்.
இதனால் இந்தியா A பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் ஹங்கேரியை வென்றது. இந்தியா B பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவை வென்றது. வந்திகா அகர்வால் ஒரு புள்ளியும் பத்மினி, சௌம்யா, டிவ்யா மூவரும் தலா அரைப்புள்ளியும் பெற்றனர். இந்தியா C அணி ஜியார்ஜியா அணியுடன் மோதி தோவியைத் தழுவியது.
கர்வாடே ஈஷா, வர்ஷிணீ, ப்ரத்யுஷா ஆகியோர் தொற்றுப் போயினர். பி.வி. நந்திதா மட்டும் வென்று ஒரு புள்ளி பெற்றார். ஆண்கள் பிரிவில் இந்தியா B அணி முதலிடத்திலும் பெண்கள் பிரிவில் A, B, C அணிகள் முறையே நாலாவது, ஆறாவது மற்றும் இருபத்தியெட்டாவது இடத்திலும் உள்ளன.