இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் தஞ்சையில் காளைகளைத் தயார் செய்து வருகின்றனர் காளையர்கள்! காளைகள் சீறிப் பாயத் தயாராகி வருகின்றன.
தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தங்களது காளைகளை தயார் செய்யும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்!
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உணவாக பருத்திக் கொட்டை, தவிடு, கடல புண்ணாக்கு, உளுத்தம்பொட்டு, துவரம் பொட்டு, நாட்டுப்புல், வைக்கோல் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மாடுகளின் கொம்பை போட்டியின் 15 நாட்களுக்கு முன்னதாகவே சீவிவிட்டு மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி, அதிவேக நடைப்பயிற்சி, மண்குத்துதல், மாடு பாய்ச்சல் ஆகிய பயிற்சிக்கு தயார் செய்கின்றனர்!
மாடுகளின் உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை பிரண்டை, பட்டமிளகாய், சின்னவெங்காயம், கடலைமிட்டாய் ஆகியவற்றை வழங்கி மாடுகளின் உடல் நலத்தைப் பாதுகாத்து, மாடுகளைத் தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர்.
எந்தவித வருமான ஆதாயத்திற்காகவும் இல்லாமல் பாரம்பரிய விளையாட்டைப் பாதுகாக்கும் நோக்கில்… காளை இனங்களைப் பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப் படுகின்றன.
போட்டியில் பங்கேற்று தங்களது காளைகள் பிடிபடாமல் இருந்தாலே அதற்கு ஒரு செல்வாக்கு உண்டு என்கிறார்கள் காளை வளர்ப்பவர்கள். தங்களது மாடுகளைக் கொண்டு சென்று போட்டியில் பங்கேற்பதற்காகத்தான் காளைகளைத் தயார் செய்கிறோம் என்கின்றனர் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் வீரர்கள்.
தற்போது பனிக் காலம் என்பதாலும் பூச்சித் தாக்குதல் அதிகம் இருப்பதாலும் மாடுகளுக்கு மின்விசிறிகள் தனியாகக் பொருத்தியும் பராமரித்து வருகின்றனர்.
காணொளி… (வீடியோ)