திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்! பாசுரம் 24-30

திருப்பாவையில் ஐதீகங்கள்: கதே ஜலே சேது பந்தம் தகப்பனாருக்கும் மகளுக்கும் பணி என்று ஜீயர் அருளிச் செய்வர்.

நின் கையில் வேல் போற்றி..மூவாயிரப்படி… பாசுரம்- 24

வெள்ளம் அடித்து வடிந்த பிறகு அணை கட்டுவது போல் அவதாரங்கள் எல்லாம் முடிந்து எம்பெருமான் மீண்டும் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளிய பிறகு, ஸ்ரீ பெரியாழ்வாரும் ஆண்டாளும் அவனுக்கு நேர்ந்த ஆபத்துக்களை நினைத்து மங்களா சாசனம் செய்தனர். அதுவே அவர்களுக்கு பணியாகும்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி – என்றெல்லாம் உலகளந்த அவதாரம் என்ன, ஸ்ரீ ராமாவதாரம் என்ன, ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் போன்ற எப்போதோ நடந்த எம்பெருமானின் லீலைக்கும் ஆபத்துக்களுக்கும் இப்பொழுது அவனுக்கு என் வருமோ என்றும் வயிறுபிடித்து மங்களாசாசனம் செய்கிறார்கள்

எம்பெருமான் ஸர்வ சக்தி பொருந்தியவன், மேன்மையானவன், அறப் பெரியவன் என்று உணராதவர்கள் அல்லர் இவர்கள். இருந்தாலும் அவனுடைய ஸௌகுமார்யத்தையும் அழகையும் நினைத்தே இவனுக்கு என் வருமோ என்று மங்களாசாசனம் செய்கிறார்கள் என்றபடி.

இங்கு அஸ்தானே பயசங்கை என்னும் விஷயம் நினைக்கத்தக்கது. அஞ்சக் கூடாத இடத்தில் அஞ்சுவது. இது எம்பெருமான் மீது பரிவால் வரும் விஷயமாதலால் இது மிகவும் உகந்த விஷயம் என்றபடி. ஸ்ரீ விதுரரும் தான் இட்ட படுக்கையை அதில் ஏதாவது இருக்குமோ என்று அஞ்சி தானே தடவிப் பார்த்தாரிறே. இவர்களையெல்லாம் மகாத்மா என்று நம் பூர்வாசார்யர்கள் அழைப்பது ஈண்டு நினைக்கத் தக்கது. அவன் மீது அத்யந்த பரிவால் விளைவது இஃது.

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்
பாசுரம் 25 ஒருத்தி மகனாய்.. – ஆறாயிரப்படி

அவளுக்கு முலை சுரவா நின்றதாகில் இவன் அமுது முலை உண்ணா நின்றானாகில் உமக்குச் சேதமென் என்று பட்டர் அருளிச் செய்தார்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்று கண்ணன் தேவகி பிராட்டிக்கு பிறந்து வைத்தும் ஸ்ரீ யசோதா தேவி வளர்த்த தாயாய் இருந்தும் அவளிடம் பால் குடித்தது எப்படி என்று கேள்வி. அதற்கு பட்டர் அவளுக்கு பால் சுரக்க கண்ணனும் பால் குடிக்க இதில் நமக்கென்ன சேதம், நட்டம். இது என்ன ஆராய்ச்சி, என்று பட்டர் நயமாக பதிலுரைத்தார் என்றபடி.

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 27

வழிவார ..மூவாயிரப்படி நம்பி திருவழுதி வளநாடு – தாஸர்
நெய் வாயில் தொங்காதோ !? என்ன கிருஷ்ண ஸன்னிதியாலே திருப்தைகளாயிருக்கிறவர்களுக்கு சோறு வாயில் தொங்கிலன்றோ? நெய் வாயில் தொங்குவது என்று பட்டர் அருளிச் செய்தார்.

அதாவது கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்ற பாசுரத்தில்.. நெய் பெய்து முழங்கை வழிவார ..என்னும் பகுதியை நோக்கி திருவழுதி வளநாடு தாஸர் என்பவர் நெய்யை இவர்கள் உண்ணாமல் அது கை வழியாக வழிவது ஏன் ? என்று கேள்வி.

இதற்கு பட்டர் கண்ணனுடன் இருப்பவர்கள் அவனுடன் கூட இருப்பதிலேயே திருப்தி அடைகின்றனர். அதுவே அவர்களுக்கு பரம பிரயோஜனம். ஏனைய விஷயங்களில் அவர்களுக்கு நாட்டம் செல்லாது என்றபடி. அதனால் அவர்களுக்கு பால்சோறு வாயில் தங்கினால் அன்றோ நெய் தங்குவதற்கு. கண்ணனை பார்த்த மாத்திரத்தில் பால்சோறு மறந்தார்கள் என்றபடி.

இங்கு உண்ணப் புக்கு வாயை மறந்தாப் போலே என்பது நினைக்கத்தக்கது.

திருப்பாவையில் ஐதீகங்கள் – பாசுரம் 28

நாலாயிரப்படி – பட்டர் அருளிச்செய்யும் பாட்டையும் இங்கே அனுசந்திப்பது

இதற்கு புத்தூர் ஸ்வாமி பதிப்பில் ( டாக்டர் மதுரை அரங்கராஜன் ஸ்வாமியின் தொகுப்பு) இந்த ஸ்லோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரங்கஸ்தவம் 2.89
ஞான க்ரியா பஜன ஸம்பத கிஞ்சனோஹம்
இந்த ஸ்தோத்திரம் கறவைகள் பின் சென்று என்ற பாசுரத்தின் தேர்ந்த கருத்தைக் கொடுக்கிறது. அதனால் இந்த நாலாயிரப்படி வ்யாக்கியானத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீ பட்டர் அனுசந்திக்கும் பாட்டாக இதைக் கொள்ளலாம் என்பது இங்கு திருவுள்ளம்!

ஞானயோகம் கர்ம யோகம் பக்தி இல்லாதவன். ஆகின் சன்னியம் அனன்னியகதித்தவம் இவற்றைப் பற்றி உணராதவன். பாவங்கள் கூடு பூரித்திருப்பவன். என்று காஞ்சி ஸ்வாமி உரை.

அதாவது அறிவொன்றுமில்லாத என்று கர்ம ஞான பக்தி யோகமில்லை என்று கறவைகள் பின் சென்றில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் கருத்தோடு இது ஒத்துப் போவது நோக்கவும்.

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 29

கெடுவாய் நாங்கள் இற்றைப் பறைகொள்வான் அன்று காண் என்று பட்டர் அருளிச் செய்த வார்த்தை.

கோவிந்தா .. நாலாயிரப்படி. .

ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் இதுகாறும் பறை பறை என்று கேட்டு வந்தாள். கண்ணனும் பறை என்னும் வாத்தியத்தை கொடுக்க வர… இவர்கள் இந்தப் பறையைச் சொல்லவில்லை நாங்கள் எதிர்பார்க்கும் பறை வேறு கோவிந்தா. நீ மேலெழுந்த வாரியான பொருளைக் கொண்டாய். இங்கு கோவிந்தா என்பது பசு மேய்த்து ரக்ஷிப்பதைக் குறிக்கும். பசு மேய்த்து மேய்த்து அந்த இடையர்கள் போல் மடப்பத்தைச் சொல்லுகிறது.

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 30

கன்றிழந்த தலை நாகு தோல் கன்றுக்கும் இரங்குமாபோலே இப்பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும்
(ஆறாயிரப்படி, மூவாயிரப்படி, நாலாயிரப்படி) – என்று பட்டர் அருளிச்செய்வர்.

அதாவது கன்றை இழந்த பசு தோல் கன்றைப் பார்த்தாலும் வைக்கோல் இருந்தாலும் உயிர் இல்லாவிடினும் அதைக் கண்டு பால் சுரக்கும்போது ஆண்டாள் நாச்சியாரைப் போல் நமக்கு அந்தரங்க பக்தி இல்லாவிடினும் எம்பெருமானுடைய கிருபை கிடைக்கும் என்றபடி மிகுந்த பக்தியுடன் திருப்பாவை பாடி ஆண்டாள் நாச்சியார் அருளினார்

சரி, நாமும் இந்த முப்பதும் தப்பாமே திருப்பாவை அனுசந்தித்தால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்பது எப்படி சாத்தியம் என்று விசாரம்

ஏனெனில் ஆண்டாள் நாச்சியாருக்கு உள்ள பக்தி நமக்கு உண்டா என்னும் கேள்விக்கு பதில்.

மாதவனைக் கேசவனை கண்ணுதல் நஞ்சுண்ட கண்டவனே விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதுண்டு எம்பெருமானே என்கிறபடியே தான் அமிர்தத்தை உண்டு பிரம்மாதிகளுக்கு கோதை கொடுத்தான் என்று பட்டர். – மூவாயிரப்படி

இங்கு மாதவனைக் கேசவனை என்பதற்கு பட்டருடைய சுவையான விளக்கம். எம்பெருமான் பாற்கடலைக் கடையும்போது அதில் வந்த அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தான். ஆனால் உண்மையான அமுதமான பிராட்டியைத் தான் எடுத்துக் கொண்டான் … அதுதான் மாதவன் என்பதாயிற்று.இப்படி சாக்க்ஷாத் அமுதத்தை எடுத்துக்கொண்டு அசாரத்தை இவர்களுக்கு கொடுத்தான் என்றபடி!

கோது.. அசாரம்.. சக்கை

  • விளக்கம்: வானமாமலை பத்மநாபன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...