இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பொதுவெளியில் நடமாடும் நபர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 1,34,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேபான் மற்றும் கானா நாடுகளில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் கொரோனோவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா மற்றும் தென் கொரியாவில் அதன் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இத்தாலியில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. அங்கு 15,113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தாலியில் பொதுமக்கள் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், உணவுப்பொருள் கடைகள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பொதுவெளியில் நடமாடும் நபர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் தடையை மீறி வெளியில் நடமாடுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் நடமாடியவர்கள் மூலம் மற்றவருக்கு கொரோனா பரவினால் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு 21 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.
கொரோனா தடுப்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் குழுவை சீனா இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 31 டன் அளவிலான உதவிப் பொருட்களையும் சீனா அனுப்பியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஈரானில் 10,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 429 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தடுப்பு முயற்சியில் ஈரானுக்கு உதவ இணையதள தன்னார்வலர்கள் குழு ஒன்று முன் வந்துள்ளது. சீனா, ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேர் இணையதளத்தில் ஒன்றிணைந்து சீனாவின் நோய்த்தொற்று எதிர்ப்பு குறித்த செயல்முறைகளையும், அனுபவங்களையும் பெர்சிய மொழியில் மொழிபெயர்த்து வழங்குகின்றனர். இதனை சமூக வலைத்தளங்களில் பரவச் செய்து, ஈரானிய மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.