உலகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து போராட தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றன. மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகின்றன.
அவ்வகையில் ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் 20 மில்லியன் முக கவசங்களை வழங்கி உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
‘இது உண்மையிலேயே உலகளாவிய முயற்சி ஆகும். அதிக அளவு தேவைப்படும் இடங்களுக்கு முக கவசங்கள் நன்கொடை வழங்குவதை உறுதிசெய்ய அந்தந்த பகுதி அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
முதல்கட்டமாக கடந்த வாரம் சிலிக்கான் பள்ளத்தாக்கிலுள்ள சில மருத்துவமனைகளுக்கு பேஸ் ஷீல்டுகள் வழங்கப்பட்டன. ஒரு பெட்டிக்கு நூறு என்ற கணக்கில் அடுக்கி அவற்றை அனுப்புகிறோம். 2 நிமிடங்களுக்குள் அதனை எடுத்து பயன்படுத்தும் விதமாக அவை உள்ளன. இந்த முக கவசங்கள் ஒவ்வொருவரின் முக அளவிற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளும் திறன் கொண்டவை.
இந்த வார இறுதிக்குள் 1 மில்லியன் பேஸ் ஷீல்டை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு வாரத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமான பேஸ் ஷில்டுகளை தயாரித்து அனுப்ப உள்ளோம். ஆப்பிள் நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து இந்த சாதனங்களை மிகவும் தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்கிறது. விரைவில் அமெரிக்காவிற்கு வெளியே இந்த பணிகளை விரிவுபடுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.