வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களின் கவனத்துக்காக இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக, பிரத்யேக இணையதள முகவரியை வெளியிட்டது தமிழக அரசு.
www.nonresidenttamil.org என்ற இணையதள முகவரியில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு திரும்புவோரின் விவரமறிய, அவர்களை தனிமைப்படுத்தி வசதிகள் ஏற்படுத்த இந்த இணையதளத்தில் பதியலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில், கோவிட்-19 காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தேவைப்படின் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் பகிரப்படும்… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
இது தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகள் குறித்தும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, மே 3-ந் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு வளைகுடா நாடுகளுக்கு இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள், ராணுவ சரக்கு விமானங்களை அனுப்பி, அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் டெல்லியில் நேற்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்காக தங்கள் தளங்களை தயாராக வைத்திருக்குமாறு விமானப்படை, கடற்படைகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், வளைகுடா நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வந்த பின் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
3-ந் தேதியுடன் ஊரடங்கு முடிந்துவிட்டால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருவதில் தாமதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.