பொய்ப் பிரசாரங்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் திமுக.,வின் இன்னாள் தலைவர் மு.க.ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
நரேந்திர மோடி அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதும், இந்து தர்மத்திற்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதும் தமிழக அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதற்காகவும் சில ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.
இந்த ஊடகவியலாளர்கள் நக்சல் கம்யூனிஸ்ட் தொடர்புள்ளவர்கள் திராவிடர் கழக தொடர்புள்ளவர்கள். இஸ்லாமிய கிறிஸ்தவ மத அடிப்படைவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள். இத்தகைய பொய் செய்திகளை உருவாக்குவதற்காக இவர்களுக்கு பணமும் பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இத்தகைய பொய் செய்திகளை உருவாக்குவதற்காகவே இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தொலைக்காட்சிகளிலும்,நாளிதழ்களில் வாரஇதழ்களிலும், சமூகஊடகங்களிலும் ஊடுருவியுள்ள இவர்கள் தினசரி பொய் செய்திகளை உருவாக்கி பரப்பி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது. இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினாரல் மட்டுமே தேசத்தின் வளர்ச்சி பணிகளும், அரசாங்கத்தின் நல்ல திட்டங்களும், மக்களை சென்றடையும்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுக சார்பு ஊடகங்களும், இந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஆணையம்,ஆகியவற்றின் அதிகாரம் அழிக்கப்பட்டதாகவும், நடுவர் மன்றத்தை அதன் அதிகாரத்தை குறைத்து விட்டதாகவும், அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டதாகவும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டதாகவும், என்.டி.டி.வி செய்தியாளர் ஒரு போலி செய்தியை உருவாக்கி ஊடகங்களில் பரப்புகிறார்.
தமிழகத்தில், தி.மு.க. கூட்டணி கட்சிகள் என். டி.டி.வி.யின் போலி செய்தியை நம்பி மத்திய அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை செய்கிறார்கள். மத்திய அரசு அதிகாரிகள் என்.டி.டி.வி நிறுவனத்திடம் விசாரித்த பொழுது இது போலி செய்தி என்று தெரிந்து மன்னிப்புக் கோரியது என்.டி.டி.வி நிர்வாகம். மேலும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறது.
காவிரி நதிநீர் ஆணையத்தின் அதிகாரம் குறைக்கப்படவில்லை. நிர்வாக நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அமைச்சகத்திடம் காவிரி நதிநீர்ஆணையம்மாற்றியுள்ளது. இது நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே. இதனால் காவிரி நதிநீர் ஆணையத்தின் அதிகாரங்கள் பாதிக்கப்பட மாட்டாது. என்கிற தன்னிலை விளக்கத்தையும் என்டிடிவி ஒளிபரப்பி உள்ளது.
இத்தகைய போலி செய்திகளை உருவாக்கி ஒளிபரப்பி பதட்டத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்ற அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என இந்து மக்கள் கட்சி கோருகிறது. போலி செய்திகளை வைத்துக்கொண்டு அறிக்கை கொடுக்கும் ஸ்டாலின், வைகோ ஆகியோருக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவிக்கின்றது.
இதேபோல வங்கிகளில் தொழிலதிபர்களுக்கு 60,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக செய்திகளை தி.மு.க ஊடகங்கள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செய்திகளை பரப்பி வருகிறது.
கடன் நிறுத்திவைப்புக்கும், கடன் தள்ளுபடி க்கும், வித்தியாசம் தெரியாத ஸ்டாலின் சார்பான ஊடகங்கள், மோடி அரசாங்கம் மோசடி தொழிலதிபர்களுக்கு சாதகமாக உள்ளது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார்.
அகில இந்திய அளவில் ராகுல், தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த தகவலை கேட்டு பெற்றதாக பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் அரசியலில் பப்பு என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். அவருக்கு கடன் தள்ளுபடி, கடன் நிறுத்தி வைப்பு அதாவது write off மற்றும் waiver ஆகியவற்றுக்கு வித்தியாசம் தெரியாது ஏனென்றால் அவர் பப்பு. ஆனால் கலைஞரின் மகன் ஸ்டாலினுக்கும் இந்த வித்தியாசம் தெரியவில்லை என்றால் அவரை தத்தி என்று அழைப்பதில் எந்த தவறும் கிடையாது.
மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகுதான் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட வாராக் கடன்களை எல்லாம் வசூலித்து வருகிறார்கள். விஜய் மல்லையா தன்னுடைய சொத்துக்களை எல்லாம் கொடுத்து கடனை அடைக்க விரும்புகிறார். இந்திய நீதிமன்றங்களிலும் வெளிநாட்டு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுத்தும், புதிய சட்டங்களை இயற்றியும், வாராக் கடன்களை எல்லாம் வசூலித்து வருகிறது மோடி அரசாங்கம். ஆனால் ‘பப்பு’ ராகுலும், ‘தத்தி’ ஸ்டாலினும் மோடி அரசாங்கத்திற்கு எதிராக பொய் செய்திகளை உருவாக்கி பரப்பி வருகிறார்கள். இதற்கு விலை போன சில ஊடகவியலாளர்களும் துணை போகிறார்கள்.
போலி செய்திகளை உருவாக்குகின்ற ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறு பரப்புகிறவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோருகிறது… என்று தெரிவித்துள்ளார்.