டிவிட்டர் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ‘காளி’ போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.
கனடாவில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த படத்தின் போஸ்டர் டிவிட்டரில் டிரெண்டானது. அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக லீனா மணிமேகலை மீது தில்லி, உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
லீனா மணிமேகலை வெளியிட்டுள்ள காளி படத்தின் இந்த போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஆனால், ‘உயிரே போனாலும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வேன்’ என்று லீனா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்ப்புகள் அதிகமாகவே சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் பதிவை டிவிட்டர் நிறுவனம் நேற்று நீக்கியது.
இது மட்டுமின்றி, கனடா நாட்டின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வருத்தம் தெரிவித்திருக்கும் ஆகா கான் அருங்காட்சியகம், காளி ஆவணப் படத்தை திரையிடுவதையும் நிறுத்தி உள்ளது.