கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாவது…’ என்று ஆரம்பமாகும் ஓர் உறுதி மொழியை ஐ.நா. அமைப்பைச் சார்ந்த அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் 1995ம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது.

‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...