spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ராமாயணம் வெளிப்படையாகக் காட்டாத இரு பெண்களின் தியாகம்!

ராமாயணம் வெளிப்படையாகக் காட்டாத இரு பெண்களின் தியாகம்!

- Advertisement -

ராமாயணத்தில் எத்தனையோ தியாகங்களின் உதாரணங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. ஆனால், வெளிப்படையாகக் காட்டப் படாத இரு தியாக உள்ளங்கள் ராமாயணத்தில் பொதிந்து கிடக்கின்றார்கள். அந்த தியாகங்கள் வெளிப்பட்டது அனுமனாலும், சீதையாலும்!

முதல் தியாக உள்ளம்!

மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.

விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார்.

அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். “ஸ்ரீஇராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்.” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார் அனுமன்.

துணுக்குற்ற பரதன், “அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டான்.

அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.

“பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட லக்ஷணம் இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா? தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் இருந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே நீயும் உன் தளிரைப் பிரிந்து கண்ணீர் வடிப்பாய்.” என சாபமிட்டாள்.

பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், “உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்” என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

தசரதர் இராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து, தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
அந்த முகூர்த்தப்படி இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் இராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும்.

புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது இராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீஇராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை.

அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது இராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள். அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம்கூட இராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.

எந்தப் பெண் தன் சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? இராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தைக் கேட்டாள்.
ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீஇராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி.

அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீஇராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக இராவணன் வரை பல ராக்ஷஸர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்கவேண்டும்” என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.

இரண்டாவது பெண்ணின் தியாகம்!

இராமாயணத்தில் தன்னலம் அற்ற இன்னொரு மங்கையும் திரை மறைவில் உண்டு. ஸ்ரீஇராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லக்ஷ்மணரும் கிளம்பிவிட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக்கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால், இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால், தன் நினைவும் விரகதாபமும் அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள்.

ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லக்ஷ்மணனை வரவேற்கத் தயாரானாள். லக்ஷ்மணன் வந்து கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன், “தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர்பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூட போகமாட்டேன்.

வாருங்கள் என்னுடன்; நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம்.” என்றாள்.

லக்ஷ்மணன் கோபத்துடன், “நீ இவ்வளவு மோசமானவளா? நீ வரவேண்டாம்; என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு; என் அண்ணனுடனும், அண்ணியுடனும், நான் போகிறேன்.” என்றான்.

“உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன்.” என்றாள் சிரித்துக்கொண்டே ஊர்மிளை. “அப்படியே ஆகட்டும்.” எனக் கூறிச்சென்ற லக்ஷ்மணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது.

ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லக்ஷ்மணனை வாட்டவில்லை. இராம பட்டாபிஷேகம் முடிந்தபிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லக்ஷ்மணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe