10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! அடுத்த 2 நாட்கள்… ஜாக்கிரதை!

சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
Rain forecast1 - 2026

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை நிலவரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்! அப்போது அவர்…

கடந்த 24 மணி நேரத்தில் காட்டுமன்னார்கோவிலில் 12 செ.மீ., மயிலாடுதுறை, ஆனைக்காரன்சத்திரம் ஆகிய ஊர்களில் 8 செ.மீ., ஜெயங்கொண்டம், மணல் மேடு ஆகிய ஊர்களில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது!

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும்

Regional Meteorological Center 1 - 2026

10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது!

டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்! நகரில் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்!

கனமழை பெய்ய வாய்ப்புள்ள ஊர்களில் 7 முதல் 11 செ.மீ. வரையிலும், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில் 12 முதல் 20 செ.மீ., வரையிலும் மழை பதிவாகும் என்றார்.

முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவும், அதிகாலையில் இருந்தும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது..

இன்று அதிகாலை சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், ராயப்பேட்டை, மெரினா, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் விடாத அடைமழை பெய்து வருகிறது. மேடவாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை செய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை,வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  • கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • சென்னை – விடுமுறை: கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • காஞ்சிபுரம் – விடுமுறை: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • நாகை – விடுமுறை: கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • கனமழை – திருவாரூர், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள்
  • தஞ்சை – விடுமுறை: கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு

விழுப்புரத்தில் இன்று நடைபெறவிருந்த பெண் காவலர்களுக்கான உடல் திறன் தகுதித்தேர்வு வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

அரியலூர்  மாவட்டம் முடியங்குறிச்சியில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பூங்கோதை என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.