spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுமாதவிலக்கு ஆண்!

மாதவிலக்கு ஆண்!

உலகின் மிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை சமீபத்தில் டைம் இதழ் வெளியிட்டது.

 
2014-ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஜப்பான் பிரதமர் ஷன்ஸோன்று நீளும் இந்த பட்டியலில் நான்கு இந்தியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், அருந்ததி ராய், முருகானந்தம் தான் அந்த நால்வர்கள். முதலில் இருக்கும் மூவரும் பிரபலமானவர்கள். எல்லோருக்கும் தெரிந்தவர்கள். ஆனால் கடைசியாக இருக்கும் முருகானந்தம்…? 
 

யார் இவர்? 

என்ற கேள்வியோடு அவரின் ஊரான கோயம்புத்தூருக்கு கிளம்பினேன். முருகானந்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் விசாரிக்கக்கூடாது, வட இந்தியாவுக்குப் போக வேண்டும். அதிலும் மலைவாழ் பழங்குடியினரிடம் கேட்க வேண்டும்…. அப்போது தெரியும் முருகானந்தம் எத்தகைய சாதனையாளர் என்று…?! 
அந்த சாதனை தான் அவரை உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. பெண்கள் கூட தங்களுக்குள் பேசக் கூச்சப்படும் ஒரு வி­ஷயத்தை ஆராய்ந்து, முழுமையாக ஆராய்ச்சி செய்து அதற்கு எளிய தீர்வையும் தந்திருக்கிறார் இவர். 
 
ஒரு ஆணாக, பிறந்து, ஆணாகவே வாழ்ந்து, தனது உடலில் ரத்தம் சொட்டும் பையைப் பொருத்திக் கொண்டு பெண்களின் மாத விலக்கைப் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் ஆண் உலகிலேயே இவர்தான்..!
 
 
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேசி விட்டு இந்தியா திரும்பி இருந்த வரை ‘ஜென்ட்ஸ் ஸ்டைல்’ இதழுக்காக சந்தித்தேன்.
எளிமையான மனிதர். உலகம் முழுவதும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பவர். சாதாரண மனிதர்கள் முதல் துபாய் அரசர் அல்நைன் ஷேக் வரை பழக்கம் வைத்திருப்பவர். புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றுபவர் என்று அறியப்பட்ட அருணாச்சலம் முருகானந்தம், தனது நாப்கின் தயாரிப்பு இயந்திரங்களின் மத்தியில் ஒரு மூலையில் சாதாரண ஸ்டீல் டேபிள், சேரில் அமர்ந்திருந்தார். இத்தனை உயரம் தொட்டவர் என்ற எந்தவொரு அடையாளமும் அவரிடம் இல்லை. அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து…
2.bp.blogspot.com pmnosgq2uaU VGnzD FcX4I AAAAAAAACcc CReLPJ81bhA s1600 muruganatham
அருணாச்சல முருகானந்தம்
 “கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எங்கள் குடும்பம் வறுமையோடு பின்னிப் பிணைந்தது. அப்பா அருணாச்சலம் ஒரு நெசவாளி. குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரம் அவர்தான். நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு சாலை விபத்தில் அப்பா அகால மரணமடைந்தார். குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமும் நின்று போனது. குடும்ப பாரம் முழுவதும் என் தோளுக்கு மாறியது. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பட்டறை வேலைக்குப் போனேன். என் தாய் வனிதாவும், பண்ணை வேலைக்குப் போனார். 

 
எனக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் கண்காட்சியில் முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொறிக்கும் இயந்திரத்தை தயார் செய்து விருது பெற்றேன்.
பள்ளி விட்டு நின்ற பின் பல வேலைகள் செய்தேன். பட்டறை வேலை, மெஷின் டூல் ஆப்ரேட்டர், யான் விற்பனை ஏஜெண்ட், வெல்டர் என்று… வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்தது. இதற்கிடையே திருமணம் வேறு. ஆனால், அதுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. என் வாழ்வில் நுழைந்த மனைவி சாந்தி மூலம்தான் என் பிறப்புக்கான அர்த்தம் தெரிந்தது. 
ஒருநாள் என் மனைவி வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு போனாள். அதை மறைத்து மறைத்து கொண்டு போனாள். 
 
‘நான் அது என்ன?’ என்று கேட்டேன். ‘இது உங்களுக்கு தேவையில்லாத விஷ­யம்.இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம்’ என்றாள். அவள் கையைப் பிடித்துப் பார்த்தேன். வடவடப்பான அழுக்கு அப்பிய துணி, எனது டூவீலரைக் கூட அதை வைத்து நான் துடைக்க மாட்டேன். அப்படிப்பட்ட மோசமான துணியைத்தான் அந்த மூன்று நாட்களில் என் மனைவி உபயோகிக்கிறாள்.
 
‘நாப்கின் வாங்க வேண்டியது தானே…?’ என்றேன். உடனே பதில் வந்தது. ‘சானிடரி நாப்கின் வாங்கினால் பால் வாங்க முடியாது. காபி குடிக்க முடியாது’ என்றாள். 
 
எதற்கு அவ்வளவு விலை அதிகம். அதில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கடைக்குச் சென்று வாங்கினேன். என்னை ஏற இறங்கப் பார்த்த கடைக்காரர் ஒரு நியூஸ் பேப்பரில் அதைச் சுற்றி கொடுத்தார். எனது 29-வது வயதில் முதன் முதலாக சானிடரி நாப்கினை தொட்டுப் பார்த்தேன். பிரித்துப் பார்த்தேன். உள்ளுக்குள் 10 கிராம் பஞ்சு இருந்தது. அதன் விலை 10 பைசா தான். ஆனால் 40 மடங்கு கூடுதலான விலையாக விற்கப்படுகிறது. இதை சாதாரண பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்லாம்? என்று யோசித்தேன். 
டெக்ஸ்டைல் நிறுவனங்கள் நிறைந்த கோயம்புத்தூரில், பஞ்சிலே புரளும் பெண்கள் ஏன் அந்த மூன்று நாட்களுக்கு அழுக்குத் துணிகளை உபயோகிக்க வேண்டும்? இந்த கேள்வி மீண்டும் மீண்டும் என் மனதில் தோன்றிய படியே இருந்தது.மனது அதைப் பற்றியே சிந்தித்தது. 
 
உடனே நூல் தயாரிக்க உதவும் பஞ்சை வைத்து நாப்கினை தயாரித்தேன். நான் முதன் முதலில் உருவாக்கிய நாப்கின், எனக்கு தோல்வியை மட்டுமல்ல. அவமானத்தையும் தேடித் தந்தது.
எனது நாப்கின்களுக்கு எனது மனைவியும் எனது சகோதரிகளும்தான் சோதனைக் கூட எலிகள். அவர்கள் எனது முதல் நாப்கினை முகத்திலேயே தூக்கி எறிந்தார்கள். இந்த நாப்கினை விட துணியே மேல் என்றார்கள். 
 
பருத்தி பஞ்சு ரத்தத்தை உறிஞ்சினாலும் உறிஞ்சிய வேகத்தில் வெளியே தள்ளும் என்பதை அதன்பின் புரிந்து கொண்டேன். அப்படியென்றால் நாப்கின் பஞ்சு வேறு. அது என்ன? என்று கண்டுபிடிக்கவே எனக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டன. 
பைன் மரப்பட்டையிலிருந்து தயாராகும் செல்லூலோஸ் என்ற பஞ்சு தான் உறிஞ்சும் தன்மையிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் சிறந்தது என்று கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகுதான் எனக்கு நிஜமான சவால்களே தோன்றின. செல்லூலோஸ் இந்தியாவில் கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். 
 
உலகம் முழுவதும் சானிடரி நாப்கின் தொழிலை இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தங்களின் கைப்பிடிக்குள் வைத்துள்ளன. அந்த நிறுவனங்கள்தான் 120 பிராண்டுகளில் நாப்கின்களை வெளியிட்டு வருகின்றன. அதனால் தயாரிப்பு முறையை பரம ரகசியமாக வைத்திருக்கின்றன.
செல்லூலோஸ் பஞ்சை வாங்கினால் தான் மேற்கொண்டு நாப்கினை பற்றிய ஆராய்ச்சியை தொடர முடியும் என்ற நிலை. 9-ம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்திய நான், எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அதற்கான மூலப் பொருட்களை ஐ.எஸ்.டி. கால் செய்து கேட்டேன்.
 
 ஒவ்வொரு முறையும் டயல் செய்யும் போது 400 ரூபாய்க்கு மேல் செலவானது.
ஐஎஸ்டி கால்களுக்கு மட்டுமே ₹ 7,000 செலவானது. அப்போதுதான் மூலப்பொருட்களை சிறிய அளவில் கொடுக்க மாட்டார்கள்.  கண்டெய்னராக கப்பலில் மட்டுமே அனுப்புவார்கள் என்பது தெரிந்தது. உங்களின் “வெஸல் சைஸ்’ என்ன என்று எதிர்முனையில் நளினமான ஆங்கிலத்தில் ஒரு பெண் குரல் கேட்டது. அப்போதுதான் நான் ஒரு பெரிய டெக்ஸ்டைல் மில் ஓனர் என்று பொய் சொல்லி சாம்பிள் அனுப்ப சொல்லி கேட்டேன். அவர்களும் அனுப்பி வைத்தார்கள். 
வந்து சேர்ந்ததோ அட்டையில் அழுத்தம் கொடுத்து பொதியப்பட்ட பஞ்சு. அது ஒரு துளி ரத்தத்தைக்கூட உறிஞ்சவில்லை. அழுத்தம் மூலம் அட்டை போல் மாற்றப்பட்ட கடினமான பஞ்சை பிரித்தெடுக்க ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அது தெரியாத காரணத்தால் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட செல்லூலோஸ் காட்டன் அட்டைகள் பல காலம் குப்பைகள் போல் என் வீட்டில் குவிந்து கிடந்தன. 
பஞ்சைப் பிரித்தெடுக்க டிபைபரே­ன் என்ற தொழில்நுட்பத்தையும் அதற்கான இயந்திரத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன். அப்போதுதான் சரியான நாப்கினை தயாரிக்க வேண்டும் என்றால் மாதவிலக்குப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுதான் எனக்கு பைத்தியக்காரன் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. 
ஊரைவிட்டு வெளியேற்றியது. என் மனைவியை பிரிய வைத்தது. 
 
எனது நாப்கினில் சிறுசிறு மாற்றம் செய்து மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்தேன். இதற்காக 20 மாணவிகளிடம் பேசியிருந்தேன். உடன் படிக்கும் மாணவர்களே அந்த மாணவிகளிடம் பேசத் தயங்கும் காலத்தில் ஒரு ஒர்க்ஷாப் மனிதனான நான் சந்தித்து பேசினேன். அவர்களும் சம்மதித்தனர். நாப்கினை உபயோகித்தனர். ஆனால், அவர்களிடம் வெளிப்படையான உண்மையான கருத்துக்கள் கிடைக்கவில்லை. அதனால் நானே என்னை பரிசோதனைக்கு உட்படுத்தினேன்.

1.bp.blogspot.com XUQWPbK41jE VGnzDzWeDuI AAAAAAAACcg vkKY1 V8rGM s1600 muruganatham1
பெண்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்காக செயற்கையான கருப்பையை பொருத்தினேன். அது ஃபுட்பால் பிளாடர். அதற்குள் ஆட்டு ரத்தத்தை ஊற்றி, அதில் சிறு துளையிட்டு என் இடுப்பில் கட்டிக் கொண்டேன். 

 
அதோடு 
நடந்தேன்…. 
ஓடினேன்… 
சைக்கிள் ஓட்டினேன்… 
 எல்லா வேலைகளையும் செய்தேன். இதன் மூலம் வெளியேறும் ரத்தத்தை என்னுடைய நாப்கின் எப்படி உறிஞ்சுகிறது என்று ஆராய்ந்தேன். 
 
உலகிலேயே இப்படி சோதனை செய்தது நானாகத்தான் இருப்பேன்.
எனது உள்ளாடைகளில் இருந்த இந்த ரத்தம் பட்ட கறையை ஊருக்கு பொதுவான கிணற்றில் வைத்து துவைத்த போது முருகானந்தத்துக்கு பால் வினை நோய் வந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கும், எனக்கும் தவறான உறவு இருக்கிறது என்று ஊர் சொல்லத் தொடங்கியது. இதையெல்லாம் நம்பிய என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்றாள்.
ஆனாலும் என் ஆர்வம் குறையவில்லை. 
 
பெண்கள் உபயோகித்து தூக்கி எறிந்த, ரத்தக்கறை படிந்த நாப்கின்களை வீட்டுக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தேன். வீடு முழுக்க உபயோகித்த நாப்கின்கள் மலையாக குவிந்தன. என் அம்மா எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக நினைத்தார். எனக்கு சமைத்து போட முடியாது என்று கூறி என்னை விட்டு சென்றார்.
எனது கிராமமோ என்னை ஊரை விட்டே விலக்கி வைக்க முடிவு செய்தது. அதற்கு முன் நானே முந்திக் கொண்டு ஊரை காலி செய்து கோயம்புத்தூர் வந்து விட்டேன். என் மனைவி போய் விட்டார். என் தாய் உதறி விட்டார்… ஊர் விலக்கி விட்டது. தனிமை மட்டும்தான் எனக்கு சொந்தமாக இருந்தது. அது எனது ஆராய்ச்சியை மேலும் மெருகேற்றியது. 
நான்கு வருட விடாமுயற்சிக்குப் பிறகு குறைந்த விலை நாப்கின் தயாரிக்கும் மெஷினை உருவாக்கினேன். இந்த மெஷினின் விலை 80,000 ரூபாய்தான். ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள மெஷின் ₹3.5 கோடி. இந்த மெஷினில் தயாரிக்கப்படும் நாப்கின் 4-5 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. எனது மெஷினில் 8 மணி நேரத்தில் 1000 பேட்கள் தயாரிக்கலாம். ஒன்றின் விலை 1.50-2 ரூபாய் தான்.
மெஷினை தயாரித்தப்பின் அதற்கான காப்புரிமையைப் பெற்றேன். இந்த மெஷினை கிராமத்து பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதாரத்தை தர வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்தேன். 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தம்தரி மாவட்டத்தில் குர்ஜரீஸ் என்ற பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கால்நடைகளுடன்தான் வாழ்வார்கள். ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். அந்த மலைக்கிராமத்துக்கு கழுதை மேல் மெஷினை வைத்து கொண்டு போனேன். மென்மையாக நாப்கின் உபயோகிப்பது குறித்து அவர்களுக்குப் புரிய வைத்தேன். ஒன்றரை வருடத்தில் மாற்றம் தெரிந்தது. கல்வியைப் பற்றி தெரியாத ஒரு சமூகத்தில், ஒரு பெண் தன் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பினார். பெண்கள் முன்னேறினால் போதும். அந்த குடும்பமே முன்னேறும். 
அந்த நேரத்தில் தான் தேசிய கண்டுபிடிப்புக்காக ஜனாதிபதி விருது எனக்கு கிடைத்தது. என்னைப் பற்றி இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிகைகளும், டி.வி.யும் கூறின. நான் திடீரென்று பிரபலமானதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஒரு போன் வந்தது. தழுதழுத்த குரலில் “என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அது எனது சாந்தியுடைய குரல்தான். ஐந்தரை வருடங்களுக்குப் பின் அந்த குரலைக் கேட்டேன். 
 
எனது சொந்தங்கள் மீண்டும் என்னை வந்து சேர்ந்தன.
இன்றைக்கு இந்தியாவில் 23 மாநிலங்களில் 1,300 கிராமங்களிலும், 7 நாடுகளிலும் எனது மெஷின் விற்பனை ஆகி வருகிறது. என்ன, என் மகள் நாப்கின் உபயோகிக்கும் வயதில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் இப்போதுதான் யூ.கே.ஜி. படிக்கிறாள்” என்று உணர்வுகள் பொங்க கூறி முடித்தார் அருணாச்சலம் முருகானந்தம். 
 
1997-ல் தொடங்கி 2005-ல் ஆய்வில் வெற்றி கண்ட முருகானந்தம் தனது லோ-காஸ்ட் நாப்கின் மெஷினை தனது லாபத்திற்காகவும், பேராசைக்காகவும் பயன்படுத்தவில்லை. வறியவர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்காகவுமே தயாரித்துக் கொடுத்தார்.
பெண்மைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட முருகானந்தத்திற்கு சரியான நேரத்தில் சரியான கெளரவத்தை கொடுத்திருக்கிறது “டைம்’ இதழ். அவரை நாமும் வாழ்த்துவோம்.!
 
 
மனிதர்கள், அருணாசல முருகானந்தம், நாப்கின், செல்வாக்கு, டைம் இதழ்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe