ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி!

2000rupeenote

புது தில்லி: பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு, பண மோசடி ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு ரூ.2000 நோட்டுகள் புதிதாக அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து, அவற்றுக்கு மாற்றாக புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கடந்த 2016 நவம்பரில் அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு, ரூ.2000 நோட்டுகள் புதிதாக அறிமுகம் செய்யப் பட்டது.

ஆனால், அதிக மதிப்பு கொண்ட நோட்டுகள்தான் பதுக்கலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் வழி வகை செய்கிறது என்பதால், அதிக அளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழங்குவது, ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று கருதுகிறது மத்திய அரசு! மேலும், வருமான வரிச் சோதனைகளின் போது, அதிக அளவில் பிடிபட்டவையும் ரூ.2000 நோட்டுகளே! இதனை வருமான வரித்துறையும் தெளிவாகக் கூறியது.

மேலும், கடந்த மார்ச் 2018ல் எடுத்த புள்ளி விவரப்படி ரூ.18.03 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளதாகவும், இதில் ரூ.6.73 லட்சம் கோடி (37 சதவீதம்) ரூ. 2000 நோட்டுகளாகவும் ரூ.7.73 லட்சம் கோடி (43 சதவீதம்) ரூ.500 நோட்டுகளாகவும் புழக்கத்தில் உள்ளதாகக் கணக்கிடப் பட்டது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையிலும், ரூ.500க்கான தேவையே அதிகம் என்றும், ரூ.2000க்கான தேவை பாதியாகக் குறைந்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியது. இந்நிலையில், ரூ. 2000 புதிதாக அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.