ராகுல் காந்தி போதை மருந்து பயன்படுத்துபவராம்… சொல்பவர் சுவாமி ஆச்சே!

புது தில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் அதில் அவர் தோற்றுவிடுவார்… அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வரும். இப்படி ஒரு கருத்தை சிரித்தபடியே கூறிய பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ்காரர்கள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பாகிஸ்தானை ஒட்டிய மாநிலம் என்பதால், பஞ்சாப் மாநிலத்தில், போதைப் பொருட்கள் கடத்துவதும், விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.  இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரவலைத் தடுக்க பஞ்சாப் மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, போதைப்  பொருட்களை கடத்துவதில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு மசோதாவை அனுப்பியுள்ளது.

மேலும், பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிவிப்பில், பஞ்சாப் அரசு ஊழியர்கள் அனைவரும், ஒவ்வொரு வருடமும் மருத்துவ சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த சோதனையில் அவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர் இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்த சோதனையில் ராகுல் காந்தியை முதலில் ஈடுபடுத்துவதே சரியானதாக இருக்கும். ராகுல்தான் கொக்கைன்  போதைப் பொருளை பயன்படுத்துகிறார். அவருக்கு மருத்துவ சோதனை செய்தால் போதைப் பொருள் சோதனையில் தோல்வியடைவார். அவர்தான் 70 சதவீதம் பஞ்சாபியர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று சொன்னவர்… ” எனக் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.