நெல்லை பல்கலை முறைகேடுகள்! தீர்வு காண வலியுறுத்தி அக்.15 முதல் ஏபிவிபி., தொடர் போராட்டம் அறிவிப்பு!

ஒரு பாடத்தை ஒரு ஆசிரியர் நடத்த வேண்டும் (ONE SUBJECT ONE TEACHER ) என்ற பல்கலைக்கழக விதிமுறையைப் பின்பற்றாத கல்லூரிகளின் மீதும் பேராசிரியர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் ?

நெல்லை: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொடரும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு அக்.15 முதல் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியிட்ட அறிக்கை…

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களின் நிலையை சற்றும் புரிந்து கொள்ளாமல் அடிக்கடி தேர்வுக் கட்டணம் உயர்த்துவது, குறைப்பது என பல்வேறு செயல்களை அரங்கேற்றி வருகிறது.

வருகைப் பதிவு அபராதக் கட்டணம் அனைத்து பாடத்துக்கும் சேர்த்து ரூ.500 இருந்ததை மாற்றி தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் அபராதக் கட்டணம் ரூ 500 என்று பல்கலைக்கழகம் அறிவித்தது, ஏழை ஏளிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருகைப் பதிவு தொடர்பாக பல்கலைக்கழகம் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக NSS NCC SPORTS மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை தமிழில் தேர்வெழுதிய மாணவர்களை திடீரென ஆங்கிலத்தில்தான் தேர்வெழுத வேண்டும் என்று பல்கலைக் கழகம் கட்டாயப்படுத்துவது, தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவால், மாணவர்கள் சிலர், படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் பல்கலைக்கழகம் தமிழ் வழியில் பயின்று கல்லூருக்கு வந்த ஏழை மாணவர்களின் குரலை செவிமடுக்கவில்லை.

ஒரு பாடத்தை ஒரு ஆசிரியர் நடத்த வேண்டும் (ONE SUBJECT ONE TEACHER ) என்ற பல்கலைக்கழக விதிமுறையைப் பின்பற்றாத கல்லூரிகளின் மீதும் பேராசிரியர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் ?

பேராசிரியர்கள் சிலர் வகுப்பறைக்குச் செல்லாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடத்தை நான்கு பேராசிரியர்களாகச் சேர்ந்து பிரித்துக் கொண்டு, முறையாக பாடம் நடத்தாமல் மாணவர்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களை பல்கலைக்கழகம் கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்ய தயங்குவது ஏன் ?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீனாட்சிபுரம் மதமாற்றம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையை பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் பல முரண்பாடுகளும் போலியான தரவுகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த ஆய்வுக்காக பல மோசடிகளும் மிகப் பெரிய அளவில் பணப்பரிமாற்றமும் நடந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த ஆய்வில் மதமாற்றம் சரி என்றும், மதம் மாறிய சமூகத்தைச் சார்ந்தவர்களை இழிவுபடுத்தும் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை தவறாக சித்திரித்து போலியான கற்பனைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் வாய்மொழித் தேர்வில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக திருமாவளவனின் ஆதரவு பேராசிரியர்களைக் கொண்டு வாய்மொழி தேர்வு நடபெற்றுள்ளது. வாய்மொழித் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதற்கு ஏபிவிபி கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட பிரச்னைகள் குறித்து ABVP யின் கோரிக்கைகள்…
• வருகைப் பதிவு அபராதக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும்
• வருகைப் பதிவு தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை சரி செய்ய வேண்டும்
• இதுவரை தமிழில் தேர்வெழுதிய இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மீண்டும் தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.
• செனட், சிண்டிகேட் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும்
• மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியன கட்டண (common fees structure) முறையை அமல்படுத்த வேண்டும்
• ONE SUBJECT ONE TEACHER என்ற பல்கலைக்கழக விதிமுறையை உடனே அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும்
• திருமாவளவனின் ஆய்வுக் கட்டுரையை ரத்து செய்ய வேண்டும்… உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் அக்டோபர் 15 முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
– என்று ஏபிவிபி மாநில இணைச் செயலாளர் எம்.பிரித்விராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பல்கலை.,யில் செயப்படும் மூட்டா அமைப்பு குறித்து ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டர் தொடர்பில் மாணவர் அமைப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் ஏபிவிபி., எஸ்.எஃப்.ஐ., மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் இதோ….