கரூர்: தீபாவளிப் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக, தமிழகம் முழுவதிலும் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தீபாவளிப் பண்டிகையின் போது இயக்குவதற்காக போதிய பேருந்துகள் உள்ளன, தேவைக்கேற்ப தடையின்றி இயக்க அரசு தயாராக உள்ளது என்றார்.
மேலும், டீசல் விலை உயர்வின் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் பேருந்துக் கட்டணம் உயராது என்று உறுதியளித்தார் விஜயபாஸ்கர்.




