திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபரிமலை கோயில் தந்திரிகள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பனின் தேவஸ்தானத்துக்கு கோயில் நடைமுறைகளையும் ஆலய நம்பிக்கைகளையும் மீறி, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. தங்கள் மத நடைமுறையில் தலையிடுவதாகவும், மத சுதந்திரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பது தவறான முன்னுதாரணம் என்றும் கூறி, இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்ய பல்வேறு அமைப்புகள் கேரளத்தில் வலியுறுத்தி வருகின்றன. அதனை தேவசம் போர்டே செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், துவக்கத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக கூறியது தேவசம் போர்டு. ஆனால், அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முதலமைச்சர் பிணரயி விஜயன் அறிவித்த நிலையில், அரசின் கைப்பாவையாக செயல்படும் தெவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என பின்வாங்கியது.
இந்நிலையில், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்தும், அதற்கான செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க நாளை ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த முதல்வர் பிணரயி விஜயன் முடிவு செய்து அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தேவசம் போர்டு அதிகாரிகள் மற்றும் சபரிமலை கோயில் பூசாரிகளான தந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தீர்ப்பை அமல்படுத்த நடத்தப் படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தந்திரிகள் நிராகரிக்கப் போவதாகக் கூறப் படுகிறது. இது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




