
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ஊமைப் பிராணிகளின் மீது கருணையும் அகிம்சையும் காட்டவேண்டும் என்ற கருத்து நம் இலக்கியங்களில் காணப்படுகிறது. உண்மையில் நாகரிக சமுதாயத்தில் இவை அழகான கொள்கைகளே. அனைத்து நாடுகளும் இவற்றை கடைபிடிக்கின்றன.
ஆனால் நம் தேசத்தில் இந்த வழிமுறையின் இரட்டைத் தன்மை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அண்மையில் ஒரு குடியிருப்பு வீதியில் பன்றிகளின் அட்டகாசம் அதிகமானது. அவை தாக்கியதால் ஒருவர் மரணிக்க வேண்டி வந்தது. அந்த மாவட்ட கலெக்டர் உடனே அங்கு வந்து பார்வையிட்டு மக்களின் நலனுக்காக அந்த பன்றிகளை வளர்ப்பவர்களுக்கு சில கட்டுதிட்டங்களைத் தெரிவித்து அவற்றை குடிமக்கள் இருப்பிடங்களுக்குத் தொலைவாக வளர்க்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினார். குடியிருப்புப் பகுதி மக்கள் அப்பாடா என்று ஆசுவாசப்பட்டார்கள்.
ஆனால் சிறிது நாட்களிலேயே பன்றிகளின் உரிமையாளர்கள் கூட்டமாகச் சேர்ந்து இது எம்மைப் போன்ற பலவீன வர்க்கத்தாரின் மீது காட்டப்படும் அநீதி என்று பிரச்சனையை மடைதிருப்பி போராட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் கலெக்டர் இறங்கி வர வேண்டி வந்தது. கட்டு திட்டங்களைத் தளர்த்த வேண்டி வந்தது. மீண்டும் பன்றுகளின் வீர விளையாட்டு எப்போதும் போல் தொடங்கியது. இது போன்றவற்றைப் பல இடங்களில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது.
இதே வழிமுறை நாய்களின் விஷயத்திலும் நடக்கிறது. பெரிய நகரங்களில் இருந்து சிறிய கிராமங்கள் வரை வீதிகளில், காலனிகளில், எங்கு பார்த்தாலும் நாய்களின் அட்டகாசம்… என்னவென்று சொல்வது? சாலையில் நடப்பதற்கே பயமும் திகிலுமாக உள்ளது.
நாய்ப் பிரியர்கள் தாம் வளர்க்கும் நாய்களைத் தம் கையில் பிடித்துக் கொண்டு தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் அத்தனை ஆபத்து இல்லை என்றாலும் தெரு நாய்கள் இஷ்டம் வந்தாற்போல் திரியும் போதும், குலைக்கும் போதும் குலை நடுங்குகிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போகிறது. எங்கு பார்த்தாலும் குப்பைத் தொட்டிகளுக்கும் குறைவில்லை. மகா நகரங்களில் இருந்து குக்கிராமங்கள் வரை ஒரே விதமாக நாடு முழுவதும் குப்பையைக் காண முடிகிறது. இந்தியாவில் இந்தக் காட்சி சர்வ சாதாரணமாக உள்ளது.
பிற நாடுகளில் வீதிகளும் குடியிருப்புப் பகுதிகளும் அத்தனை சுத்தமாக இருப்பது எத்தனை சாதாரணமோ, நம் நாட்டில் குப்பைத் தொட்டிகள் கண்ணில் படுவது அத்தனை சாதாரணமாக உள்ளது.
இதற்குத் துணையாக இந்த மிருகங்களின் கட்டுப்பாடற்ற அட்டகாசமும் இமயம் முதல் குமரி வரை சர்வ சாதாரணமாக உள்ளது. ஜீவாகாருண்ய சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்றங்கள் இவற்றை கட்டுப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடுகின்றன.
ஆனால் ஒரு முறை பிற தேசங்களில் இந்த விபரீதம் ஏன் இல்லை என்று ஆலோசித்துப் பார்க்க வேண்டும். வீதி நாய்களும் தெருவில் திரியும் பன்றிகளின் காட்சியும் பிற நாடுகளில் ஏன் இருப்பதில்லை? அங்கு ஜீவகாருண்ய குணம் இல்லாமல் போய்விட்டதா?
அக்கிரமமாக லட்சக்கணக்கான பசுக்கள் பயங்கரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்படும் போது ஜீவகாருண்யம் பேசும் இவர்களின் வாய் எங்கு போனது? அளவுக்கடங்காத அசைவ உணவுக் கடைகள் ஜீவகாருண்யத்திற்கு குறியீடுகளா? உணவுக்காக அவற்றை வதைத்துக் கொல்வதை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் குடியிருப்புகளின் நன்மைக்காக தெரு நாய்களையும் பன்றிகளையும் கட்டுப்படுத்துவது நன்மையாகாதா? ஏற்கக்கூடியதாகாதா?
சில பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் பஞ்சாயத்துகள் இவற்றைக் கட்டுப்படுத்தின. சாலையின் மீது இத்தனை அட்டகாசம் இருந்ததில்லை. இப்போது அந்த வழிமுறைகளை எடுத்து விட்டதால் விபரீதங்கள் அதிகமாகியுள்ளன.
ஊரில் புலிகளும் ஓநாய்களும் அலைந்தால் கருணை என்று கதை பேசுவோமா? தெருவில் அலையும் விலங்குகளால் அந்த அளவு ஆபத்து இல்லை என்று வாதிக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல் மாசுக்கும் ஆரோக்கிய கேட்டுக்கும் மானுட உயிருக்கும் தீவிரமான ஆபத்து இவற்றால் ஏற்படுகின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இதற்குத் துணையாக, எந்தச் சிறிய சமூக சேவை செய்யலாம் என்று முன் வந்தாலும் குலம், மதம், ஜாதி அரசியல் என்ற பெயரோடு கட்சிகளின் ஆதரவோடு அர்த்தமில்லாத போராட்டங்கள் செய்பவர் தூய்மைக்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஹிம்சை இல்லாமல், அவற்றுக்குத் துன்பம் கொடுக்காமல் அவற்றை கட்டுப்படுத்தும் அமைப்பை நகர, பட்டண, கிராம ஆட்சி சங்கங்கள் கடைப்பிடிக்கும் விதமாக அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்.
பிற முன்னேற்றிய நாடுகளில் எங்குமே காண முடியாத இத்தகு விசித்திரம் இங்கு எதனால் காணப்படுகிறது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். பல அற்புதமான சுற்றுலா தலங்களும் தீர்த்த க்ஷேத்திரங்களும் நிறைந்த நம் தேசத்தில் யாத்திரிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அங்கங்கே குப்பை தொட்டிகளும் இந்த மிருகங்களின் முற்றுகையும் எரிச்சலை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ‘டர்ட்டி இண்டியா’ என்று அழைக்கும் நிலையிலிருந்து நாம் வெளிவரப் போகிறோமா இல்லையா?
புனிதத் தலங்களிலும் கோவில்களின் சுற்றுப் புறங்களிலும் கூட இந்த விபரீதமான காட்சிகள் சாதாரணமாகவே உள்ளன. அவற்றின் கழிவுகள் சாலை மீதும் கோவிலின் சுற்றுப்புறங்த்திலும் அருவருப்பை ஏற்படுத்தும் விதமாக பரவி உள்ளன.
பிற நாடுகளில் அவற்றை வளர்ப்பவர்கள் வளர்ப்புப் பிராணிகளோடு பயணம் செய்தாலும் அவற்றின் கழிவுகளை அவற்றை வளர்ப்பவரே எடுத்து நீக்கி பிறருக்கு தொல்லை இல்லாத வண்ணம் நியமங்களை கடைப்பிடிக்கிறார்கள். பார்க்குகளிலும் நடைபாதைகளிலும் அவற்றிற்கு தகுந்த ஏற்பாடுகளோடு வருகிறார்கள்.
ஆனால் நம் நாட்டில் இந்த வழிமுறைகள் இல்லை. தெரு நாய்களும் வளர்ப்பு நாய்களும் செய்யும் கழிவுகள் நடைபாதைகளில் காணப்படுகின்றன. கருணை, அகிம்சை போன்ற விசாலமான சிந்தனை உள்ளவர்களுக்கு, தூய்மை, ஒழுங்கு போன்ற முன்னேற்ற எண்ணங்கள் ஏன் இருப்பதில்லை?
கோடிக்கணக்கான ஹிந்துக்கள் கோஷமிடம் கோமாதா பரிரக்ஷணை என்ற கூக்குரல் இவர்களின் செவிகளுக்கு ஏன் எட்டவில்லை?
மேலும் பலருக்கும் பாலும் மோரும் நெய்யும் அளித்து போஷித்து விவசாயத்திற்கும் மருத்துவத்திற்கும் பயன்படும் பசுமாட்டினத்தை அநியாயமாக பலியாக்குகையில் இவர்கள் ஏன் அதைக் காண மறுக்கிறார்கள்?
குப்பை தொட்டிகளின் அருகிலும் பிளாஸ்டிக் குப்பைகளின் அருகிலும் திரியும் துரதிர்ஷ்டமான நிலைமை பசு மாட்டினங்களுக்கு ஏன் ஏற்படுகிறது? சாலை மீது மாடுகளை விட்டுவிட்டு அதன் உரிமையாளர்கள் எதனால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போகிறார்கள்? எருமை, பசு போன்றவை மக்கள் நடமாட்டம் உள்ள ரோடுகளில் குறுக்காக நடந்து செல்லும் துரதிர்ஷ்ட நிலையை அனைவரும் பார்க்கிறோம். இவற்றுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதற்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை போன்றவற்றை செய்வதற்கும் அமைப்பு எதுவும் இல்லையா?
ஒழுங்கோ கட்டுபாடோ இன்றி வாகனங்களை இஷ்டத்திற்கு நிறுத்துவது போன்றவற்றால் பல ஊர்களில் வீதிகள் பயங்கரமாக காட்சியளிக்கின்றன. அவற்றிற்கு துணையாக இந்த தூய்மைக் கேடு வேறு.
நம் பண்டைய நூல்களில் வர்ணித்த குடியிருப்புகளின் அமைப்பில் நிரம்ப ஒழுங்கும் கட்டுப்படும் இருந்தது. இந்த விஷயத்தில் மக்களின் பொறுப்பு, அரசாட்சி நிர்வாகம் பற்றிய உயர்ந்த கருத்துகளை சாணக்கியர் போன்றவர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள்.
அழகான சுத்தமான பாதுகாப்பான சாலைகளை (தேசிய நெடுஞ்சாலை தவிர) நம் இந்திய தேசத்தில் என்றாவது காண்போமா?
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
- தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், அக்டோபர் 2022