Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeகட்டுரைகள்சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (29)- பதிக சர்ப மாரண ந்யாய:

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (29)- பதிக சர்ப மாரண ந்யாய:

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி -29

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

பதிக சர்ப மாரண ந்யாய:  
பதிக – வழியில் செல்பவர்.
சர்ப மாரணம் – பாம்பைக் கொல்வது.

பாம்பு நாக தேவதை. பாம்பைக் கொல்வது இயற்கைக்கு நன்மை பயப்பதல்ல என்பதால் அது பாவம் என்பதாகக் கூறியுள்ளார்கள் நம் பூர்வீகர்கள்.

பாம்பை எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல. அது படம் எடுத்து அச்சுறுத்தும். அதுமட்டுமன்றி நம்மைத் தாக்கும் கூட. பகையை வளர்த்துக் கொள்ளும். கடித்து விடும் கூட.  அதனைக் கொல்ல முயற்சி செய்பவர்களுக்கு சாமர்த்தியத்தை விட தைரியம் அதிகம் வேண்டும்.

ஒரு ஊரில் ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் திடீரென்று நுழைந்த பாம்பைக் கண்டு பதைபதைத்து யோசனையில் ஆழ்ந்தான். அந்தப் பாம்பை அவனே கொல்ல இயலும். வீட்டில் தேவையான ஆயுதங்கள் இருந்தன. ஆனாலும் பாம்பைக் கொன்றால் ‘சர்ப்ப மாரண தோஷம்’ தன்னைப் பற்றிக் கொள்ளும் என்று எண்ணினான். ஒரு வேளை தன் அடியிலிருந்து அது தப்பித்துக் கொண்டு விட்டால், பாம்பு பகை கொண்டு துரத்தும். அதனால் வீட்டுக்கு வெளியில் சென்று வழியில் செல்லும் ஒருவரை அழைத்து வந்தான். பாம்பின் துன்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கம்பைக் கொடுத்து பாம்பை அடிக்கச் செய்தான். பாம்பைக் கொன்ற பாவம் அந்த வழிப்போக்கனையே  சேரும். தன்னை அண்டாது என்று அவன் எண்ணினான்.

இவ்வாறு இந்த நியாயத்தை முக்கியமாக வஞ்சனை இயல்பைக் குறிப்பதற்கு   உதாரணம் காட்டுவார்கள்.

தன் வீட்டிற்கு வந்த பாம்பை பிறரைக் கொண்டு அடிப்பதன் பின்னால் ஒரு சூழ்ச்சி  உள்ளது. பாம்பை அடித்த பாவம், கடிக்கும் என்ற பயம் போன்ற அபாயங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி இந்தக் கதையில் இருப்பதை கவனிக்க வேண்டும். இதுவே ‘பதிக சர்ப்பம் மாரண’ நியாயத்தில் உள்ள சிறப்பு.

அவனுடைய சூழ்ச்சி வழிப்போக்கனுக்குத் தெரியாது. ‘நீங்கள் தைரியசாலி. நான்    தேளைக் கூட கொல்ல மாட்டேன். நான் பயந்தாங்கொள்ளி’ என்று நைச்சியமாகப் பேசி அந்த பாவச் செயலை அநியாயமாக பிறருடைய கையால் செய்விப்பது.

இந்த நியாயத்தில் மூன்று கோணங்கள் இருப்பதாகக் கூறுவர். சூழ்ச்சி, திட்டம், என்னால் முடியாது என்ற உதவியற்ற நிலையில் பிறர் உதவியை நாடுவது.

முதலாவதான சூழ்ச்சியை திரைப்படங்களில் பார்க்க முடியும். நம் கையில் மண் ஒட்டாமல் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று வில்லன் கூறுவது இந்த வகையில் சேரும். தான் ரிஸ்க் எடுக்காமல் வேறு ஒருவரின் தலை மீது அந்த பாரத்தை சுமக்க செய்வது ‘பதிக சர்ப்ப மாரண’ நியாயத்தில் உள்ள ஒரு கோணம்.

இங்கு பாம்பு இறந்தால் இவனுக்கு பயம் போய்விடும். சரியாக அடி விழாமல்  தப்பித்து ஓடினாலும் அந்தப் பாம்பின் பகை அவனை அல்ல, வேறு யாரையோ துரத்துமே தவிர அவனுக்கு சம்பந்தம் இருக்காது.

சில அரசியல் கட்சிகள் தமக்கு எதிரியானவர் மீது பகை தீர்த்துக் கொள்வதற்கும்  அவரை சிக்கி வைப்பதற்கும் இந்த சதித் திட்டத்தை உபயோகப்படுத்துவார்கள். அந்த தலைவர்களுக்கு கையில் கிடைப்பது யாரோ அல்ல, கல்லூரி மாணவர்களே. அவர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் கையால் போராட்டங்களையும் மறியல்களையும் செய்விப்பார்கள். தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டி விடுவார்கள். அவர்களுக்குத் தூண்டில் போட்டு புகழ்ந்து, தாம் நலமாக இருப்பார்கள். தம் பிரயோஜனங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

பிற நாட்டு ஒற்றர்கள் தம் பெயர் வெளியில் வராமல் விலைக்கு வாங்கப்படும் நம் தேசத்தவரைக் கொண்டே தம் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.    

‘பதிக சர்ப்ப மாரண’ நியாயத்தைக் காட்டும் ஒரு நகைச்சுவைக் கதை கூட பிரபலமாக உள்ளது. ஒரு எலக்ட்ரீசியன் அங்கிருந்த இரண்டு லைன்களில் எந்த கம்பியில் மின்சாரம் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக (டெஸ்டர் இல்லை போலிருக்கிறது) வழியில் போகும் ஒரு மனிதனைக் கூப்பிட்டு அந்த இரண்டு கம்பிகளில் ஒன்றைத் தொடச் சொன்னானாம். அந்த பாதசாரி ஒரு ஒயரை தொட்டவுடன் அவனுக்கு ஷாக் அடிக்கவில்லை. அந்த எலக்ட்ரீசியன் ஓஹோ இந்த இரண்டாவதில்தான் கரண்ட் ஓடுகிறது என்று தெரிந்து கொண்டானாம். இது ஒரு சூழ்ச்சிக்காரனின் கதை.

புராணங்களில் கூட இப்படிப்பட்ட சதிகார புத்தி உள்ளவர்களின் கதைகள் அவ்வப்போது தென்படும். சீதையை அபகரிப்பதற்காக ராவணன் மாரிசனிடம் வேண்டிக் கொண்டது போலவே, தான் ரிஸ்க் எடுத்துக் கொள்ளாமல் வேறு ஒருவரை ஆபத்தில் சிக்க வைப்பது இந்த நியாயத்தின் தனி இயல்பு.

இதில் சதிகாரத்தனம் எதுவும் இல்லை. தீய எண்ணம் கூடத் தென்படவில்லை. தனக்கு வந்த ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு மார்க்கத்தை தேடுவது மட்டுமே உள்ளது என்பது இந்த நியாயத்தில் உள்ள இரண்டாவது கோணம். இப்படிப்பட்ட திட்டத்தின் கதை பஞ்சதந்திரத்தில் உள்ளது.

ஒரு மரத்தின் மீது ஒரு காக்கைக் குடும்பம் வசித்து வந்தது. அதே மரத்தின் கீழ் வசித்து வந்த விஷ நாகத்தால் மிகுந்த தொல்லைக்கு உள்ளானது. அடிக்கடி அந்த பாம்பு மரத்தின் மீது ஏறி காக்கைக் கூட்டில் இருந்த முட்டைகளைத் தின்று வந்தது. பாம்பை எதிர்க்கும் சக்தி அந்த காக்கைகளுக்கு இல்லை. ஒரு வயதான காக்கையின் அறிவுரைப்படி ஒரு திட்டம் தீட்டின. அதை நிறைவேற்றுவதற்கு முன்வந்தன. அங்கு சமீபத்தில் இருந்த ஒரு குளத்தில் குளிப்பதற்கு தினமும் வரும் இளவரசி தன் எழுத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற நகைகளை கரையில் வைத்துவிட்டு குளிப்பது வழக்கம்.

காவல் வீரர்கள் பார்த்திருக்கையில் ஒரு காகம்  அதிலிருந்து ஒரு நகையை மூக்கால் கவ்விக் கொண்டு பறந்தது. அரண்மனை வீரர்கள் அதனைத் துரத்தினார்கள். அது மிகவும் சாமர்த்தியமாக அந்த வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நகையை பாம்புப் புற்றில் போட்டுவிட்டு பறந்து போனது. அந்த நகைக்காக வீரர்கள் பாம்பு புற்றைத் தோண்டும் போது உள்ளே இருந்த பாம்பு படம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தது. அதனை வீரர்கள் அடித்துக் கொன்றார்கள்.

அவ்விதமாக மரத்தின் மீது வசிக்கும் காக்கைகளுக்கு பாம்புத் தொல்லை போயிற்று. காக்கைகள் ஒரு திட்டப்படி நடந்து கொண்டு பகையை அழித்தன. உதவியற்று நிலையில்  கையாலாகாமல் பிறருடைய உதவியை கேட்டுக்கொள்வது சகஜம் தான். இதில் என்ன சதித்திட்டம் உள்ளது? குற்றமும் இல்லை. தோஷமும் இல்லை. தன் குழந்தை கிணற்றில் விழுந்து அழுதபோது தாய் பிறருடைய உதவியை நாடுவது சகஜம்தானே. இதனைத் தவறு என்று கூற முடியாது.

உலகில் நடக்கின்ற அரசியல் செயல்களை ஆராய்ந்தால் உக்ரைனின் தோள் மீது   துப்பாக்கியை வைத்து அமெரிக்கா ரஷ்யாவை அடிக்க வேண்டும் என்று பார்க்கிறது. இங்கு உக்ரைன் ‘பதிகன்’ அதாவது வழிப்போக்கன். அமெரிக்கா இல்லறத்தான். ரஷ்யா சர்ப்பம்.

கிணற்றின் ஆழம் எத்தனை என்று தெரிந்து கொள்வதற்காக பக்கத்து வீட்டு குழந்தையைத் தூக்கி கிணற்றில் போட்டானாம் என்று கன்னட மொழியில் ஒரு பழமொழி உள்ளது.

‘பதிக சர்ப்ப மாரண’ நியாயத்தில் சுயநலம் உள்ளது. சூழ்ச்சி உள்ளது.    உதவியற்ற நிலையும் உள்ளது. தன் பொறுப்பைப் பிறர் மீது தள்ளிவிடும் சோம்பேறித்தனமும் உள்ளது. ஒரு திட்டமும் உள்ளது.