
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக.,வினர் வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைஅடுத்து, இன்று பாஜக.,வினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று ராகுலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஐந்து மாநில தேர்தல் நேரத்தின் போது சௌகிதார் சோர் ஹை என்று காங்கிரஸ் மற்றும் கட்சி சார்பில் ஊடகங்களில் எழுப்பப் பட்ட திடீர் குற்றச்சாட்டுகள் தற்போது போலியானவை என்று தெரியவந்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை; சந்தேகப் படும் படியாக எந்த அம்சமும் இதில் இல்லை என்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும், நீதிமன்றதின் பெயரில் பொய்யான தகவலைக் கூறியதற்காக ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து, எச்சரிக்கையும் செய்தது. எதிர்காலத்தில் பார்த்துப் பேசவேண்டும் என்று அது அறிவுறுத்தியது!

ரஃபேல் ஊழல் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை அப்போது சுமத்தியதால், ராகுல் காந்தி ரஃபேல் காந்தி என்று சமூகத் தளங்களில் அழைக்கப் பட்டார்.
இந்நிலையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவருமான ராகுலுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது!