
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று யோகாசனங்கள் செய்து இந்த நாளை கடைபிடிக்கின்றனர் இந்திய ராணுவத்தினர் 18 ஆயிரம் அடி உயர இமயமலையில் உடலை உறைய வைக்கும் பணியில் யோகா செய்யும் புகைப்படங்கள் வெளியாகி நாட்டு மக்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21- ஆம் தேதியை சர்வதேச யோகா தின நாளாக அறிவித்தது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச யோகா தினம், சர்வதேச அளவில் இன்று டிஜிட்டல் மூலம் கொண்டாடப் படுகிறது. சர்வதேச யோகா தினமான இன்று நாட்டு மக்களிடம் இன்று காலை பிரதமர் மோடி உரையாற்றினார்.
உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஓர் அங்கமாகப் பழகுங்கள். இது உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை. யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்…. என்று குறிப்பிட்டார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்களும் யோகா செய்தனர். லடாக் – திபெத் எல்லையில் லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்தனர். அதுபோல், இந்தியா – சீனா எல்லையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களும் யோகா செய்தனர். இந்தப் படங்கள் வெளியாகி நாட்டு மக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது .