காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் நடந்த கலவரத்தை தொடர்ந்து பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. டிஜே ஹள்ளி மற்றும் கேஜி ஹள்ளி பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பெங்களூர் ஆணையர் கமால் பந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர், புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நவீன். 23 வயதான இளைஞரான இவர், சமூக வலைதளத்தில் ‘மர்ம’ நபர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப் படுகிறது.
இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து புலிகேசி நகரில் உள்ள எம்.எல்,ஏ., வீட்டின் முன் நேற்றிரவு கூடிய ‘மர்ம கும்பல்’, வன்முறையில் ஈடுபட்டது. வீட்டுக்குள் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களை உடைத்த அந்த கும்பல் கற்களை வீசி வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது.
இதனிடையே, எம்.எல்,.ஏ., சீனிவாச மூர்த்தியும், நவீனும், அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் தகவல் பரப்பினர். இதைக் கண்டு உடனே திரண்ட மர்ம கும்பல், காவல் நிலையத்துக்குச் சென்று கடும் வன்முறையில் ஈடுபட்டது.
காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இதை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதன் பேரில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுபடுத்தினர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 110 பேர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும், சமூகத் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவினை பகிர்ந்த நவீன் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.