
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் காந்தி தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளதாக டிவிட் செய்துள்ளார். மேலும் தனக்கு கொரோனா அறிகுறிகள் லேசாக இருப்பதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தாம் வாழ்த்துவதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“லேசான அறிகுறிகள் இருப்பதை உணர்ந்த பிறகு, நான் COVID பரிசோதனை மேற்கொண்டேன். அதில் பாசிட்டிவ் என்று வந்தது. எனவே என்னுடன் அண்மையில் தொடர்பில் இருந்த அனைவருமே, தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவரது டிவீட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில், மக்களவை உறுப்பினர் ராகுல் நல்ல உடல் நலத்துடனும் விரைவில் குணமடையவும் தாம் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அதிக காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான அவர் கோவிட் பாசிட்டிவ் என இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். முன்னதாக, கோவாக்சின் தடுப்பூசி இரண்டு முறைகள் போட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, கோவிட் சூழ்நிலை குறித்து அவரும் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
ராகுல் காந்தியும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கு வங்காளத்தில் தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்தார். கோவிட் பரவலை மேற்கோள் காட்டி மற்றவர்களும் இவ்வாறு பேரணிகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினார்.
“கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் எனது அனைத்து பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நிறுத்தி வைக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் பெரிய பொதுக் கூட்டங்களை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆழமாக சிந்திக்க அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன்” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில், இரு நாட்களில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று அவர் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.