கொரானா தாக்கிவிடும் என்ற பயத்தில் வீட்டு உரிமையாளர் 80 வயது பாட்டிக்கு செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
80 வயதான யெகுலா வீரம்மா என்ற பெண், ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரியின் அகிவேடு கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் தனது இரண்டு மகன்களோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர், மருத்துவமனையில் இருந்து அந்த மூதாட்டி வீடு திரும்பிய போது வீட்டு உரிமையாளர் பீதலா ராஜு, மூதாட்டி வீரம்மாவை வீட்டிற்க்குள் அனுமதிக்கவில்லை
மூதாட்டி மூலம் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி விடும் என்ற பயத்தில் வீட்டு உரிமையாளர் வீரம்மா பாட்டியை அவரது 2 மகன்களை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேருமாறு இரவு நேரத்தில் கூறியுள்ளார்.
இதனால் கையில் காசும் இல்லாமல் ராத்திரியில் எங்கே போவதென்றும் தெரியாமல் திகைத்த மூதாட்டி கடந்த ஏப்ரல் 19ம் தேதி தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு, இரவு நேரத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த ஒரு சுடுகாட்டில் தங்கியுள்ளனர்.
இதை பார்த்த பொதுமக்களில் சிலர் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேற்கு கோதாவரி எஸ்.பி. நாராயண் நயா, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகிவேடு துணை ஆய்வாளர் வீரபத்ராவிடம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் படி சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற துணை ஆய்வாளர், சுடுகாட்டில் தங்கியிருந்த மூதாட்டியின் குடும்பத்தை மீட்டு அவர்களின் வீட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளார்.
பின்னர், மூதாட்டியை வீட்டுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.