இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு, 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கிய தம்பதிக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் தற்போது, 700க்கும் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய் பரவலை தடுக்க, மருத்துவமனையில் ‘ஏசி’ இயக்கப்படாமல் உள்ளது. இதனால், நோயாளிகள் கோடை வெய்யிலை சமாளிக்க முடியாமல், அவதி அடைந்து வந்தனர்.
நோயாளிகளின் நிலையை அறிந்த, கோவை ராம்நகர் நேரு வீதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ரேவதி தம்பதி, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான, 100 மின்விசிறிகளை மருத்துவமனைக்கு, நன்கொடையாக வழங்கினர்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரன் கூறுகையில், ”நோயாளிகளின் நிலையை கேட்ட தம்பதி, மின்விசிறி நன்கொடை அளிப்பது குறித்து தெரிவித்தனர்.
ஒன்றிரண்டு மின்விசிறிகள் நன்கொடை வழங்குவர் என, எதிர்பார்த்த நிலையில், 100 மின் விசிறி நன்கொடை வழங்கியது திகைப்பை ஏற்படுத்தியது.
அவற்றை எவ்வாறு வாங்கினீர்கள் என, கேட்ட போது, நகையை அடகு வைத்து வாங்கியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சாமானியர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில், கலெக்டரிடம் அனுமதி பெற வலியுறுத்தினோம். அதன்பின் கலெக்டரிடம் அனுமதி பெற்றனர். தொடர்ந்து மின்விசிறிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன,” என்றார்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு, 100 மின்விசிறிகள் நன்கொடை வழங்கிய தம்பதிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்