ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

Published:

adhi sankaracharya - 2026

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 – 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார். அதன் சாரம் இங்கே…

ஸ்பர்சம் என்ற கல்பம், கல்லைத் தொட்டால் தங்கமாகும். குரு சிஷ்யனைத் தொடாமலே தன்னைப்போல் செய்துவிடுகிறார். சந்தன மரத்தின் சேர்க்கையால் மற்ற மரங்களும் வாசனையைத் தருவதுபோல், குரு உபதேசம் பெற்ற சிஷ்யனும் உலகை மகிழ்விக்கிறான்.

உலகெல்லாம், உடலை நான் என்று எண்ணி அதற்கு வேண்டிய போஷணை, அலங்காரங்களைச் செய்கிறதே தவிர, எந்த வஸ்துவால் இந்த உடல் பிணம் ஆகாமல் நாற்றம் எடுக்காமல் இருக்கிறதோ, அதைப் பற்றி கவனிப்பதே இல்லை.
ஒரு நல்ல சாமர்த்தியம் வாய்ந்த புழு, காட்டிலுள்ள முட்களால் தனக்கு ஒரு வீடு அமைத்துக்கொண்டு, ஆயுள் வரை அதில் வசிக்கிறது. அதுபோல் ஜீவன் தனது புண்ய பாப கர்மங்களால் சரீரத்தை எடுத்து, பலனை அனுபவிக்கிறான்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

புலி வேஷம் பூண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான். பெண் வேஷம் பூண்டு ஒருவன் நடிக்கிறான். புலிவேஷக்காரன் மனிதர்களையும் பசுக்களையும் அடித்துத் தின்பானா? பெண் வேஷதாரி புருஷனது காம இச்சையைப் பூர்த்தி செய்வானா? அதேபோல் ஜீவ வேஷம் பூண்ட ஆத்மா, சுக துக்கங்களை அனுபவியான்.

அழும் குழந்தையை சமாதானம் செய்ய, தாய் தின்பண்டங்களையும் விளையாட்டுப் பொருள்களையும் அளிப்பதுபோல அனேக பிறவி வாசனையால் மோகமடைந்த மனதை நல்வழிப்படுத்த உபநிஷத் என்ற தாய் ருசியான பல உபாயங்களைக் கூறுகிறாள்.

உலகில் பிரியமான வஸ்து ஆத்மா. அதற்காக மனைவி, தனம், பிள்ளை, வீடு முதலியன பிரியமாய் இருக்கின்றன. ஒருவன் தனக்காக இவற்றை இழக்க சம்மதிப்பான். ஆனால் அந்தப் பிரிய வஸ்துவை விசாரித்து பூரண ஆனந்தம் பெற முயற்சிப்பதில்லை.

பிரும்மார்ப்பணம் என்று அளித்த தானம், மனதிலும் கோபம் இல்லாமை என்ற பொறுமை, சிரத்தை என்ற ஆஸ்திக்யம், சத்யம் இந்நான்கைக் கொண்டு, பந்தகமான சுவர்க்காதிகளைப் பெறுவதைவிட, நிஷ்காம்யமாக இவற்றையே அனுஷ்டித்து மோட்சம் அடைவோர் துர்லபம்.

ALSO READ:  நம் பாரம்பரியம், விழிப்புணர்வு பெற்ற நம் கையில்தான் உள்ளது!

தேவதைகளுக்கும் அதிதிகளுக்கும் அளித்த அன்ன சேஷம் அமிர்தம். தனக்காகச் செய்த உணவு வ்யர்த்தமானதுடன் மிருத்யுவை அளிக்கவல்லது. தான் மட்டும் உண்பவன் கேவல பாபத்தை அனுபவிப்பவன். ப்ராணாக்னிஹோத்ரம் செய்யாமல் புஜிப்பவன் நரகத்தையே அனுபவிப்பான்.

நனைந்த கட்டையில் அக்னி பற்றுவதில்லை. சூர்ய தாபத்தால் ஈரம் உலர்ந்த பிறகு சீக்கிரமாக தீ பிடிக்கும். விஷயங்களால் மனம் நனைந்தபோது ஞானம் வருவதில்லை. வைராக்யத்தினால் மனம் உலர்ந்த பிறகு ஞானம் உதயமாகும்.
பலவாத்யங்கள் ஏக காலத்தில் வாசிக்கப்பட்டால் தனித்தனியாக அதன் த்வனி நம் காதில் விழுவதில்லை. எல்லாம் கலந்து ஒன்றாகவே கேட்கிறது. அதேபோல் மாயையினால் சைதன்யத்தையும் ஜடவஸ்துவையும் பிரிக்க முடியாமல் உலக வியவஹாரம் நடக்கிறது.

பிரளய காலம், சுஷுப்தி, ஜீவன்முக்தி இம்மூன்றிலும் ஒரே சுகந்தான். முன்னிரண்டிலும் வாஸனை கர்மா இரண்டும் ஒழியாததால் மறுபடி துக்க அனுபவமுண்டு. பின்னதில் பிறப்பு இறப்பில்லை, பேரானந்தம் உண்டு. சுக துக்கங்களுக்குக் காரணம் என்ன என்று ஜனகர் சபையில் வாதம் நடந்தது. மித்ரர் சத்ருக்கள் காரணமில்லை; கர்மாதான் ஹேது என யாக்ஞவல்க்யர் சொன்னார். அக்கர்மா இல்லாமல் க்ஷணம்கூட மனிதன் இருப்பதில்லை என கீதாசார்யன் கூறினார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

மரத்தை வெட்டுவது கோடரி. ஆயினும் அதை எடுத்துத்தூக்கிப் போடுபவன் ஒருவன் இருந்தால்தான் கோடரி வெட்டும். பூர்வ கர்மாவே பலனை அளிப்பது. ஆயினும் அதை அனுபவிக்க புருஷ பிரயத்னம் வேண்டும். நம் முன்னே நின்று அந்தராத்மா நம்மைத் தூண்டுகிறான். வேரில் நீர் விட்டால் கிளை, இலை, புஷ்பம், காய், கனி மகிழ்ச்சி அடைவதுபோல், வர்ணாச்ரம ஆசாரப்படி கர்மாவைச் செய்து பகவத் அர்ப்பணம் செய்துவிட்டால் எல்லா தேவர்களும் மகிழ்ந்து, கர்மபலத்தைப் பெறும்படி செய்வர். *

Related articles

Recent articles

spot_img