ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

Published:

lord shri rama - 2026

உள்ளதொன்றும் உள்ளதில்லை
உள்ளதினும் நாசமில்லை
நாசமுள்ளது உள்ளதில்லை
ராம ராம பாஹிமாம்! – என்று அடிக்கடி கூறுவார் ஸற்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்தில் ‘ஞான’ ஸ்வரூபமாய் தெய்வ சந்நிதிகள் பல இருந்த போதும், ஸ்ரீராமபிரானுக்கு என்று தனி சந்நிதி எதுவும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஸ்ரீ ஞானவேணுகோபாலன் சந்நிதியின் பின் அந்நாளிலேயே ஸ்ரீராம பட்டாபிஷேகத்தை ஓவியமாக வரையச் செய்து, வேணுகோபாலர் சந்நிதி எதிரில் ஸ்ரீராமதாசனான ஆஞ்சநேயருக்கு சந்நிதி அமைத்தார். பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பூஜித்து பிரசாதம் வழங்கப்படுவதையும், ஸ்ரீராம நவமியின் போது பூஜைகளுடன், ராம நாம பஜனையுடன் பானகம் நீர்மோர் வழங்கலும் வழக்கமாக்கினார்!

தற்போது கடந்த வருட தபோவன கும்பாபிஷேகத்தின் போது, ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதி பின்புறம் வரையப்பட்டிருந்த ஓவியத்துக்குப் பதிலாக அதே அளவில் கல்லாலான ஸ்ரீராம பட்டாபிஷேக புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டது.
அஷ்டமி, நவமி திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை பகவானிடம் சென்று வருந்தினவாம். அதற்கு அவர் “உங்களுக்கு ஏற்றம் தந்து, மக்களை கொண்டாடச் செய்கிறேன்’’ என்று உறுதி அளித்தாராம்.

அதன்படி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமியில் கிருஷ்ணனாகவும் அவதரித்தார் என்பர். ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளின் பின்னே அவதரித்தார் என்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாத புனர்பூசத்தில் அவதரித்தார். அதை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பதும், வெயிற்கால வெப்பம் தணிக்க பானகம், நீர்மோர், விசிறி அளித்தலும் வழக்கமாக உள்ளது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

ஸ்ரீராமர் என்றாலே சரணாகதி தத்துவம்தான் நம் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமன். பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான்.

ஆரண்ய காண்டத்தில் தண்டக வனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராம பிரானைச் சரணடைந்தான். சுந்தர காண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராம பிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன். அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்’’ என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்வர்.

சரணாகதியை விளக்குவது சரம ஸ்லோகம். ராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி.

ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம
ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா
விபீஷணோ வா ஸுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம்

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ராமபிரான் கூறுகிறார்… “நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா, இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த ராவணனாகவேதான் இருக்கட்டும், இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது’’ என்றார்.

சரணாகதி சாஸ்த்ரமான ராமாயணத்தைப் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும். ராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போர் சிலர். ராமநவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு! ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பர்.

தசரதனுக்கு குழந்தைகள் பிறந்தவுடன், அவரது குலகுரு வசிஷ்டர் பெயர் வைக்கிறார்.

ராமன்– ரமையதீதி ராமஹா. காண்பவர் கண்ணையும், மனத்தையும் பறிக்கும்படி அழகை வழங்குவதால், ஆனந்தத்தைக் கொடுப்பதால், ராமன் என்று பெயர்!

லக்ஷ்மணன்– லக்ஷ்மணஹா – லக்ஷ்மி சம்பந்நஹா, லக்ஷ்மி வர்த்தநஹா. நற்செல்வம்- இங்கே அது, கைங்கர்ய லக்ஷ்மி.

பரதன் – பரதைதி ராஜ்ய பர்நாத். ராஜ்யத்தை பரிக்கப் போவதால் பரதன். அவன் ஒருவனே ராஜ்யத்தை பாரம் என்று நினைத்தான். அதனால் ராஜ்யத்தைப் பரித்தவன் பரதன்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

சத்ருக்ணன் – சத்ருக்களை ஜயித்தவன். ராம பக்தி என்ற பகவானுக்கு அடிமையாக இருப்பதைவிட, பரத பக்தி என பக்தனுக்கு அடிமையாக இருந்ததால், நித்ய சத்ருக்ணஹா என்று பெயர்!

பகவான் செய்தருளிய அவதாரங்களிலே சரணாகதி சாஸ்திரத்தை உலகோருக்குப் புரிய வைப்பதற்காகவே ஸ்ரீராமன் அவதரித்தான். ரகுகுல திலகன் என்பதால் ராகவன், ககுஸ்தனுடைய வம்சத்தில் அவதரித்ததால் காகுத்தன், தசரதனுக்கு குமாரன் என்பதால் தாசரதி. இஷ்வாகு வம்சத்தில் அவதரித்து, பாரத தேசத்தின் தர்ம சாஸ்திரங்களை எடுத்துரைத்து, நடத்திக் காட்டிய மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன். அண்ணனிடம் தம்பியும், தந்தையிடம் தமையனும், ஆசார்யனிடம் சிஷ்யனும், பெரியோர்களிடம் சிறியோரும் எப்படி நடக்க வேண்டும் என்பதை சரிப்படுத்தி, இதுதான் சரியான முறை என்று உணர்த்தவே ராமனின் அவதாரம் நிகழ்ந்ததாம்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img