spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்மத்திய பட்ஜெட்: நடுத்தர மக்களுக்கு நல்லதாக இருக்குமா?

மத்திய பட்ஜெட்: நடுத்தர மக்களுக்கு நல்லதாக இருக்குமா?

- Advertisement -

எளிய மக்களுக்கான பட்ஜெட்!

“பட்ஜெட்” என்னும் சொல், பிரெஞ்சு வார்த்தையான “போஜெட் (Bougette)” என்பதில் இருந்து வந்தது. பிரெஞ்சு மொழியில், அதற்கு அர்த்தம், “தோலால் உருவாக்கப் பட்ட பை”.

சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்டை, தாக்கல் செய்தவர், தமிழகத்தைச் சேர்ந்த ஆர். கே. சண்முகம்.

நமது நாட்டில் அதிகபட்சமாக, பத்து முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர், மொரார்ஜி தேசாய்.

குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சம்

2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், நமது நாட்டில், கடந்த சில வருடங்களாக, நாம் கடந்து வந்த பாதையை பற்றி எடுத்து உரைத்தார்.

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை:

ஒரு ஆண்டில், 150 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்  செலுத்தி, உலக அளவில் மிகப்பெரிய சாதனையை, இந்தியா படைத்து இருக்கிறது எனவும், நமது நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோரில், சுமார் 90% மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர் எனவும், நமது நாட்டு  மக்கள் தொகையில், 18+ சேர்ந்த 70 % க்கும் அதிகமானோர், இரண்டு டோஸூம் செலுத்தி உள்ளனர் எனவும், உள்நாட்டிலேயே 3 தடுப்பூசிகள் தயாரிக்கப் படுகிறது எனவும் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய உணவு வழங்கல் திட்டம்:

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், 80 கோடி பயனாளிகளுக்கு, 19 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப் பட்டது என தெரிவித்தார்.

சுயசார்பு:

நமது நாட்டில்,  பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தும் நோக்கத்தில் 2500 க்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படும் எனவும், இதன் மூலம் “சுயசார்பு” கொள்கையை நாம் அடைய, பெரும் உதவி செய்யும் எனவும் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகள்:

2014 ஆம் ஆண்டு, நமது நாட்டின் ஒட்டுமொத்த தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம், வெறும் 90 ஆயிரம் கிலோ மீட்டர் மட்டுமே. இந்த எட்டு வருட ஆட்சிக் காலத்தில் (2014 – 2022), 1.40 லட்சம் கிலோ மீட்டராக, நெடுஞ்சாலைகளின் தூரத்தை, மத்திய அரசு அதிகரித்து இருக்கின்றது.

75 வது வருடம்:

நமது நாடு விடுதலை அடைந்த, 75 வது சுதந்திர தின வருடத்தை, நாம் இப்போது கொண்டாடி வருகின்றோம். நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது, நமது நாடு வளர்ந்த இந்தியாவாக இருக்க வேண்டும், அதனை செயல்படுத்த, அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது என தெரிவித்த குடியரசுத் தலைவர் அவர்கள், கல்வித்துறை குறித்து பேசிய போது, “கற்க கசடற….” என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

மத்திய பட்ஜெட் – 2022

பாராளுமன்றத்தில், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி, தொடர்ந்து நான்காவது முறையாக, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். டிஜிட்டல் வடிவில், தொடர்ந்து தாக்கல் செய்யப்படும், இரண்டாவது பட்ஜெட் என்பது, இதன் சிறப்பம்சமாகும்.

பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள்

நதிநீர் இணைப்பு:

தமன்கங்கா – பிஞ்சல், பர் – நர்மதா, கோதாவரி – கிருஷ்ணா, கிருஷ்ணா – பெண்ணாறு, பெண்ணாறு – காவிரி ஆகிய ஐந்து நதிகளை இணைப்பதற்கு 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதன் பயனாக, 9.08 லட்சம் எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீர் விநியோகம் 62 லட்சம் மக்களுக்கு கிடைக்கும். மேலும், நீர் மின்சக்தி 103 மெகாவாட்டும், சூரிய மின்சக்தி 27 மெகாவாட்டும் கிடைக்கும். சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன், திட்டம் செயல் படுத்துப்படும்.

வீடுகள் தோறும் குடிநீர்:

நாடு முழுவதும் 3.80 கோடி வீடுகளுக்கு,   குழாய் இணைப்பு ஏற்படுத்தி, தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில், 60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சுகாதாரம்:

தொலைபேசியில் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 23 மையங்கள் துவங்கப்பட உள்ளன. கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்பட்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில், சுகாதாரத்துறைக்கு என 86 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட 16 சதவீதம் அதிகம்.

பாதுகாப்புத் துறை:

எல்லைப் பகுதியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அச்சுறுத்தலை எதிர் கொண்டு வரும் நிலையில், பாதுகாப்பு துறைக்கென 5.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இயற்கை விவசாயம்:

ரசாயனமில்லா இயற்கை விவசாயத்தையும்,  அதிநவீன தொழில்நுட்ப விவசாய பொருட்களையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கான அவசர கால கடன்:

இப்போது உள்ள சூழ்நிலையில், குறு, சிறு, நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனங்கள், தாங்கள் வாங்கிய கடனை, வங்கிக்கு கட்ட மேலும் அவகாசம் தேவைப் படுகின்றது. எனவே 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டத்திற்கு, 2 லட்சம் கோடி வரை கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வர, பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு 48,000 கோடி,
  • மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன்,
  • கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்கு 2.37 லட்சம் கோடி,
  • ஒவ்வொரு வகுப்பிற்கும் மாநில மொழியில் தனித்தனியே தொலைக்காட்சி கல்வி சேனல்கள்,
  • சிப் பொருத்திய இ – பாஸ்போர்ட்,
  • உலகத் தரம் வாய்ந்த தரமான கல்வி வழங்க, டிஜிட்டல் பல்கலைக்கழகம்,
  • கூட்டுறவு அமைச்சகத்துக்கு 900 கோடி,
  • ரயில்வேத் துறைக்கு 1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு, புதியதாக 400 வந்தே பாரத்  ரயில்கள்,
  • ஸ்டார்ட் – அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் மற்றும் பல…

100 காசுகளில் (ஒரு ரூபாய்) வரவு:

கடன்கள் மற்றும் இதர நிதி மூலமாக – 35

ஜிஎஸ்டி – 16

பெருநிறுவன வரி – 15

வருமான வரி – 15

மத்திய கலால் வரி – 7

சுங்க வரி – 5

வரி அல்லாத வருவாய் – 5

கடன்சாரா மூலதன வருவாய் – 2

100 காசுகளில் (ஒரு ரூபாய்) செலவு:

வட்டிக்கான செலவினம் –   20

மாநிலங்களுக்கு வரி பகிர்வு – 17

மத்திய அரசின் நேரடி திட்டங்கள் – 15

நிதி ஆணையம் & இதரபரிவர்த்தனை – 10

இதர செலவினம் – 9

மத்திய அரசு நிதியுதவித் திட்டங்கள் – 9

பாதுகாப்புத் துறை – 8

மானியம் – 8

ஓய்வூதியம் – 4

இந்திய வர்த்தக சபை வரவேற்பு:

பொருளாதார மீட்சியை விரைவுபடுத்த, இந்த பட்ஜெட் உதவும் எனவும், விவசாயம் முதல் டிஜிட்டல் வங்கி வரை அனைத்து துறைகளிலும், மிகவும் நுணுக்கமான அளவில் கவனம் செலுத்தப்பட்டு, தயாரிக்கப் பட்டு உள்ளது என இந்திய வர்த்தக சபையின் தலைவர் பிரதீப் சுரேகா தெரிவித்தார்.

பலரும் வரவேற்ற பட்ஜெட்:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிக வரி விதிக்கப் பட்டு இருக்கின்றது. இதன் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை, அதிக அளவில் இருக்கும். அதனால் இந்திய வணிகர்கள், பெரிதும் பலன் அடைவார்கள். அதிக அளவில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

வரவிருக்கும் 5 மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு, மக்களை கவர்வதற்காக, கவர்ச்சிகரமான பட்ஜெட்டை மத்திய அரசு வெளியிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தேச நலன் கருதி “அதிகப்படியான அடிப்படைக் கட்டமைப்பு, கூடுதல் முதலீடு, அதிக வளர்ச்சி, நிறைய வேலை வாய்ப்பு என மக்கள் சார்ந்த பல நல்ல திட்டங்கள் உள்ளடக்கியதாக, இந்த பட்ஜெட் உள்ளது” என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 9.2 % வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கு முக்கிய காரணமே, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதனால் தான். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிக வரி விதிப்பதன் மூலம், உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும். இதனால் இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரிதும் பலனடைவார்கள் என்பது நிச்சயம்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு (திருக்குறள், 385)

பொருள்:‌  வரும்‌ வழிகளை மேன்மேலும்‌ இயற்றலும்,

வந்த பொருள்களைச்‌ சேர்த்தலும்‌,

காத்தலும், காத்தவற்றை வகுத்துச்‌ செலவு செய்தலும்,

‌வல்லவன்‌ அரசன்‌.

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe